வெடிக்கக் காத்திருக்கும் குண்டின் மீது அமர்ந்திருக்கிறது மத்தியக்கிழக்கு. இன்று இரவு அல்லது நாளை அல்லது (12 – 13 தேதிகளில்) இஸ்ரேலின்மீது பெரிய தக்குதலை ஈரான் துவங்கலாம் என்று உளவுத்தகவல்களை ஊடகங்கள் இடைவிடாமல் கசியவிட்டுக் கொண்டிருக்கின்றன.
‘ஈரானின் தாக்குதலிலிருந்து இஸ்ரேலைப் பாதுகாக்க’ என்று சொல்லிக்கொண்டு ஆயிரக்கணக்கான துருப்புகளோடு விமானம் தாங்கிய, 12 போர்க்கப்பல்களை மத்தியக்கிழக்கைச் சூழ்ந்து நிறுத்தியிருக்கிறது அமெரிக்கா. ஈரானைத் தாக்கும் வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்த அமெரிக்கா இந்த வாய்ப்பைத் தவறவிடக்கூடாது என்பதில் குறியாகவும் இருக்கலாம். நரியின் கண்கள் கிடாயின்மீதுதானே இருக்கும்?
கிட்டத்தட்ட 75 ஆண்டுகளாக ஒரு மிகச் சிறிய நாடு, இன்னொரு மிகப் பெரிய நாட்டின் அதிகார மட்டத்தில் எவ்வளவு வலிமையாக லாபி செய்து, அந்தப் பெரிய நாட்டைத் தன்னுடைய அடியாளாக மாற்றி வைத்திருக்கின்றது என்பதைப்பற்றி, சில சிறிய ஊடகங்கள் அவ்வப்போது பேசிக்கொண்டுதான் இருக்கின்றன.
மில்லியன் கணக்கிலான பணம், ஆயுதம், தொழில்நுட்பம் என்பதையெல்லாம் கடந்து, அமெரிக்காவின் எல்லா அதிகார மட்டங்களையும் கட்டுப்படுத்துகின்ற இஸ்ரேலின் லாபி சாதாரணமானது அல்ல. இதுவரை அமெரிக்க அதிபர் எவரும் இஸ்ரேலை எதிர்த்துப்பேசக்கூட துணியாத அளவுக்கு கெட்டிப்பட்டுப்போயிருக்கிற ஜியோனிச ஆதிக்கம் வெளிப்படையாக கண்களுக்குத் தெரியாதுதான். ஆனால் வரலாறு முழுவதும் அது மாயக்கரம் போல அமெரிக்காவை கட்டுப்படுத்தி வைத்திருப்பதை புரிந்துகொள்ள பெரிய ஆய்வெல்லாம் தேவையில்லை.
ஒருமுறை நோம் சாம்ஸ்கி பேசும்போது இஸ்ரேலில் இருப்பு வைக்கப்பட்டிருக்கிற அமெரிக்காவின் ஆயுதங்களை, அதாவது அமெரிக்கா தன்னுடைய சொந்த பயன்பாட்டுக்காக தன்னுடைய முகாம்களில் வைத்துள்ள ஆயுதங்களை எந்த கேள்வியும் இல்லாமல் இஸ்ரேல் எடுத்து பயன்படுத்துவதைச் சுட்டிக்காட்டி, ”இஸ்ரேல், அமெரிக்காவைத் தன்னுடைய ஒரு மாநிலமாகக் கருதிக்கொள்கிறது” என்று சொன்னார்.
சில மாதங்களுக்கு முன்புகூட உள்நாட்டு அழுத்தத்தால் 5000கிலோ வெடிமருந்துகள் ஏற்றிய கப்பலை இஸ்ரேலுக்கு அனுப்பாமல் தாமதம் செய்தது. சில நாட்களில் அதை வெளிப்படையாக காட்டமாக விமர்சித்துப் பேசினார் நெதன்யாஹு. அவரது பேச்சுக்கு குறைந்தபட்ச கண்டனம் கூட சொல்லாமல் கப்பலை அனுப்பிவைத்தது அமெரிக்கா.
சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசிய நெதன் யாஹு, இரண்டாம் உலகப்போரின்போது வின்சண்ட் சர்ச்சில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசிய வார்த்தைகளை மேற்கோள் காட்டிப் பேசினார். “Give the tools, we will finish the job” ஒட்டுமொத்த அரங்கமே எழுந்து நின்று கைதட்டியது. (சிலர் உரையைப் புறக்கணித்திருந்தார்கள்) எவ்வளவு வலிமையான லாபி என்பதைப் புரிந்துகொள்ள இது ஓர் உதாரணம்.
சர்வதேச மனித உரிமைச் சட்டங்களைக் காப்பதில் தான் தான் உலகலாவிய போலீஸ் என்று சொல்லிக்கொள்ளும் அமெரிக்காவின் சட்டத்தில் 1.குடியிருப்புப் பகுதிகளில் குண்டுகளை வீசக்கூடாது. 2. மனிதாபிமான உதவிகளைத் தடுக்கக்கூடாது என்பதையெல்லாம் உலகுக்கு வகுப்பெடுத்துக்கொண்டே இந்தக் குற்றங்களைத் தொடர்ந்து செய்துவரும் இஸ்ரேலுக்கு மில்லியன் கணக்கிலான நிதி உதவியும், ஆயுத உதவியும் தடையின்றிக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது அமெரிக்கா.
சமீபத்தில் ஒரு ஆய்வுக்கட்டுரையைப் படித்தபோது மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். இதுவரை உலகில் நடந்த எந்தப் போருக்குமே இல்லாத ஒரு தன்மை கஸ்ஸாவில் நடந்திருக்கின்றது. பொதுவாக போர்களில் நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதிகள் இருக்கும். பாதிப்பில்லாத பகுதிகளும் இருக்கும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு உதவிகள் தேவைப்படும். ஆனால் கஸ்ஸாவில் 100 விழுக்காடு மக்களுக்கும் மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன. அதாவது ஒவ்வொரு கஸ்ஸாவின் குடிமக்களுக்கும் உதவி தேவைப்படுகின்றது. ஒவ்வொரு குடிமக்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பகுதி அளவிலோ முழுமையாகவோ கஸ்ஸாவில் எத்தனை பேருக்குச் செவிப்புலன் பாதிக்கப்பட்டிருக்கும் என்கிற கேள்வியோடு அந்தக்கட்டுரை முடிந்திருந்தது.
உங்களுக்கு அமெரிக்காவின் யு.எஸ்.எஸ் லிபர்ட்டி கப்பல் தாக்குதல் நினைவிருக்கிறதா? 1967இல் அரபு இஸ்ரேல் யுத்தத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்கக் கப்பலை இஸ்ரேல் தாக்கி அழித்தது. 30க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் பலியாகி 75க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அமெரிக்கக் கொடியோடு பயணித்துக்கொண்டிருந்த மிகப்பெரிய கப்பலைத் தாக்கி அழித்துவிட்டு தவறுதலாக தாக்குதல் நடந்ததாகச் சொல்லியது இஸ்ரேல். அந்தப் போரிலும் இஸ்ரேலுக்கு ஆயுத உதவிகள் செய்தது அமெரிக்காதான்.
நீங்கள் என்ன யூகிக்கிறீர்கள்?
எங்கள் கப்பலைத் தாக்கிவிட்டாயா..? உன்னை என்ன செய்கிறேன் பார் என்று வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு இஸ்ரேல் மீது அமெரிக்கா பாய்ந்திருக்கும் என்றா? அதுதான் இல்லை. விசயத்தை அப்படியே அமுக்கியிருக்கின்றார்கள். பாதிக்கப்பட்ட கப்பலின் அதிகாரியின் கடும் முயற்சியால் விசயம் வெளியே தெரிந்து, வேறு வழியின்றி பெயருக்கு சில விசாரணை ஆணையங்களை அமைத்திருக்கின்றார்கள்.
ஆணையத்தின் அறிக்கை தெளிவாகச் சொல்லியது:
‘அது அமெரிக்கக் கப்பல் என்று நன்றாகத் தெரிந்தே இஸ்ரேல் அதைத் தாக்கியிருக்கின்றது’
அப்போதவது எதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? அடுத்த சில நாட்களில் நடந்த நாடாளுமன்றக்கூட்டத்தில் கலந்துகொண்ட 300க்கும் மேற்பட்ட உறுப்பினர்களில் இரண்டு பேரைத் தவிற வேறு யாருமே அந்தக் கப்பலின் பெயரைக்கூடச் சொல்லவில்லை.
அமெரிக்க காங்கிரசில் ஜியோனிஸ்டுகளின் லாபி எந்த அளவுக்கு வலிமையானது என்பதை உணர்த்தவே இந்த உதாரணத்தைச் சொன்னேன்.
இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு அமெரிக்காவின் நிதி பெருமளவுக்கு இஸ்ரேலுக்கு மடைமாற்றப்படுவது சர்ச்சையாகியபோது அப்போதைய அதிபரிடம், இஸ்ரேலை எதிர்க்க ஏன் அமெரிக்க அதிபர்கள் அஞ்சுகிறார்கள் என்று கேட்கப்பட்டபோது, அவர் சொன்ன பதில்.. ”அவர்கள் ஊடகங்களைக் கட்டுப்படுத்துகின்றார்கள், அவர்கள் வங்கிகளைக் கட்டுப்படுத்துகின்றார்கள், அவர்கள் பெருவர்த்தகங்களைக் கட்டுப்படுத்துகின்றார்கள்” அவ்வளவுதான் விசயம்.
ஹிட்லரின் யூத வெறுப்புக்கான காரணமாக அவர் சொன்ன வார்த்தைகள் நினைவிருக்கிறதா?
முதல் உலகப்போரின் முடிவில் ஜெர்மனி படுதோல்வியடைந்திருந்தது. பிஸ்மார்க்கின் அகண்ட ஜெர்மானியக் கனவைச் சுமந்துகொண்டிருந்த ஜெர்மானிய வலதுசாரிகளுள் ஹிட்லரும் ஒருவன். போரில் தோற்றதற்கான காரணத்தை அலசிய ஹிட்லர் இப்படிச் சொன்னான்:
“யூதர்கள் ஊடகங்களைக் கட்டுப்படுத்துகின்றார்கள். அதன்மூலம் ஜெர்மனிக்கு எதிரான செய்திகளைப் பரப்புகின்றார்கள். யூதர்கள் பெரும் தொழில்களைக் கட்டுப்படுத்துகின்றார்கள். அதன் மூலம் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அரசுக்கு எதிராக செயல்படச் செய்கின்றார்கள். யூதர்கள் அரசாங்கத்தைக் கட்டுப்படுத்துகின்றார்கள். அதன் மூலம் தூய ஆரிய இனத்துக்கு எதிராக வேலை செய்கின்றார்கள்.” (வார்த்தைகள் மாறியிருக்கலாம்)
இன்று காலையில் ஒரு நண்பர் முகநூலில் ‘ இடதுசாரிகள் எல்லாப் பிரச்சனைகளிலும் பொருளாதார விளக்கைத் தேய்த்து பூதம் கிளம்புகின்றதா என்று தேடிக்கொண்டிருப்பார்கள்’ என்று எழுதியிருந்தார்.
இந்த ஜியோனிச லாபிக்கும், அமெரிக்காவின் அடியாள் சேவகத்துக்கும் பின்னால் அடிப்படையில் என்ன இருக்கிறது என்று கவனித்துப்பார்த்தால் பொருளதார நலன்களைத் தவிற வேறெதுவும் இல்லை. மத்தியக்கிழக்கின் பெரும்பாலான நாடுகளின் எண்ணெய் வர்த்தகத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ கொள்ளை லாபம் பார்த்துக்கொண்டிருப்பது அமெரிக்க முதலாளிகள். லாபம் என்றால் லட்சம் கோடி என்றெல்லாம் நினைத்துவிடாதீர்கள். ட்ரில்லியன் கணக்கான டாலர்களில் லாபம். அதிபர்களே முதலாளிகள் என்பதையும் கூடுதலாக நினைவில் கொண்டால் எளிதில் புரியும். அந்த லாபத்தைத் தக்கவைத்துக்கொள்ள பிராந்திய அடியாளாக ஒரு தேசம் மத்தியக்கிழக்கில் இருக்க வேண்டும். அவ்வளவுதான் கணக்கு.
அமெரிக்கா பேரிட்டுச் சிதைத்த மத்தியக்கிழக்கு நாடுகளை கவனித்துப்பாருங்கள். லிபியா, ஈராக், போல பெரும்பாலும் எண்ணெயை அரசுடைமையாக்கிய தேசங்களாக இருப்பது புரியும். ஆனால் ஈரான் மீதான கொந்தளிப்புக்கு எண்ணெய் மட்டும் காரணம் அல்ல. ஈரானின் அணு ஆயுத முயற்சி. மத்தியக்கிழக்கில் இஸ்ரேலிடம் மட்டுமே கிட்டத்தட்ட நூறு அணு ஆயுதங்கள் உள்ளன. இன்னொரு நாட்டிடம், அதுவும் இஸ்ரேலுக்கு எதிரியான, அமெரிக்காவுக்கு அடிபணியாத நாட்டிடம் அணு ஆயுதம் வருவதை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்?
இஸ்ரேலின் துணையோடு, ஈரானின் அணுக்கட்டமைப்புகளைத் தாக்கி அழிப்பது, ஈரானின் அணு விஞ்ஞானிகளைக் கொலைசெய்வது, என்றெல்லாம் அமெரிக்கா செய்யாத அட்டூழியங்கள் இல்லை. இப்போது கிட்டத்தட்ட அணு ஆயுதங்கள் தயார் செய்யப்பட்டதாக அல்லது கடைசிக்கட்டத்தை எட்டிவிட்டதாகச் செய்திகள் வந்திருக்கின்றன. எப்படியாவது அதை அழித்துவிடவேண்டும் என்பதில் இரண்டு வல்லூறுகளும் நீண்ட வருடங்களாகச் சப்புக்கொட்டிக்கொண்டு காத்திருந்தன.
கஸ்ஸா போரால் உள்ளூரில் செல்வாக்கு இழந்திருந்த நெதன் யாஹு, ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியாவைக் கொன்றதன் மூலம் தன்னுடைய அரசியல் லாபத்துக்கான ஸ்டண்ட்டை நடத்தி ஈரானை போருக்குள் இழுத்து விட்டிருக்கின்றார். ஈரான் தயாராகிவிட்டதாக அறிவித்திருக்கின்றது. அமெரிக்கா ஈரானைத் தாக்கினால் நாங்களும் தலையிடுவோம் என்று ரஷ்யா அறிவித்திருக்கிறது.
லாபவெறி, மூன்றாம் உலகப்போரின் விளிம்பில் மனிதகுலத்தைக் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது.
விடிகின்ற பொழுது அமைதிக்கானதாக இருக்கவேண்டுமென்று மனம் பதைபதைக்கிறது!
நன்றி : முகநூலில் பதிவர் ஷம்ஸுத்தீன் ஹீரா
பதிவு நாள் : 5.8.2024