சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டி : ஓமான் மாணவருக்கு முதல் பரிசு!

Share this:

துபாயில் ஆண்டுதோறும் சர்வதேச அளவிலான திருக்குர்ஆன் மனனப் போட்டிகள் அமீரக துணை அதிபர், பிரதம அமைச்சர் மற்றும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மத் பின் ராஷித் அல் மக்தூம் அவர்கள் ஆதரவில் நடத்தப்பட்டு வருகிறது.

12 ஆவது ஆண்டாக இவ்வாண்டு நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா சனிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா கண்டங்களைச் சேர்ந்த எண்பத்து ஐந்து நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில், ஓமான் நாட்டைச் சேர்ந்த ஃபரேஸ் அல் அகம் முதல் பரிசைப் பெற்றார். இவருக்கு திர்ஹம் 250,000 பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

இரண்டாவது இடத்தை லிபியாவின் நூர் அல் தீன் அல் யூனுஸி (திர்ஹம் 200,000), மூன்றாவது இடத்தை குவைத்தின் காலித் அல் அய்னதி (திர்ஹம் 150,000), நான்காவது இடத்தை ஆப்கானிஸ்தானின் மஜித் அப்துல் சமி (திர்ஹம் 65,000), ஐந்தாவது இடத்தை மொரிடானியாவின் அஹ்மது தாலிப் (திர்ஹம் 60,000) ஆறாவது இடத்தை லெபனானின் நாஜிஹ் அல் யாஃபி (திர்ஹம் 55,000), ஏழாவது இடத்தை தைவானின் உசாமா சியான் (திர்ஹம் 50,000), எட்டாவது இடத்தை பாகிஸ்தானின் முஹம்மது ஆலம் (திர்ஹம் 45,000), ஒன்பதாவது இடத்தை கேமரூனின் அப்துல் ரஹ்மான் அட்ஜித் (திர்ஹம் 40,000), பத்தாவது இடத்தை சவுதி அரேபியாவின் தாரிக் அல் லுஹைதான் (திர்ஹம் 35,000) பெற்றனர்.

மேலும் பத்தாவது இடத்திற்குப் பின்னர் எண்பது சதவிகிதம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு திர்ஹம் 30,000 மும், 70 முதல் 79 சதவிகித மதிப்பெண் பெற்றவர்களுக்கு திர்ஹம் 25,000 ம், 70 சதவிகிதத்திற்கு குறைவாக மதிப்பெண் பெற்றவர்களுக்கு திர்ஹம் 20,000 மும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

சிறந்த குரல் வளத்துக்கான பரிசு மலேசிய மாணவருக்கு வழங்கப்பட்டது.

இப்பரிசுகளை துபாயில் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முஹம்மத் பின் ராஷித் அல் மக்தூம் வழங்கினார்.

விருது

சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டியினையொட்டி ஆண்டுதோறும் சிறந்த இஸ்லாமிய அறிஞருக்கான விருது வழங்கப்படுகிறது. இவ்வாண்டு இவ்விருது தனிநபருக்கு இல்லாமல் திருக்குர்ஆன் பிரதிகளை அதிக அளவில் அச்சிட்டு வழங்கி வரும் சவுதி அரேபியாவின் மன்னர் பஹத் திருக்குர்ஆன் அச்சகத்துக்கு வழங்கப்பட்டது. இதுவரை 200 மில்லியன் திருக்குர்ஆன் பிரதிகள் இவ்வச்சகத்தின் மூலம் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆண்டுதோறும் 10 மில்லியன் திருக்குர்ஆன் பிரதிகள் இங்கு அச்சிடப்பட்டு வருகின்றன. 30 மில்லியன் திருக்குர்ஆன் பிரதிகள் அச்சிடப்படுவதற்குரிய வசதிகள் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கான பரிசுத்தொகை திர்ஹம் ஒரு மில்லியன் ஆகும். இதன் மூலம் இவ்வச்சகம் இன்னும் பன்மடங்கு விரிவுபடுத்தப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் நடத்தப்படும் இப்போட்டிகள் பெருமளவு மக்களைக் கவர்ந்துள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் இப்போட்டியைக் காணவருவது இப்போட்டிக்கு ஏற்பட்டு வரும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்திவருவதாக இப்போட்டிக்கான தலைவர் இப்ராஹிம் பூ மெல்ஹா தெரிவித்தார்.

தகவல் : முதுவை ஹிதாயத்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.