முஸ்லிம்கள் பெருமளவு வசிக்கும் மேற்கு சீனாவின் பாலைவனப் பிரதேசத்தில் முஸ்லிம்களின் புனித மாதமான ரமளானில் இறைவணக்க வழிபாடுகளில் ஈடுபடத் தடையையும் வரம்புகளையும் சீனா விதித்துள்ளது. இவை சீன அரசின் நான்கு இணைய தளங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
சீன அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு உலக மக்கள் அனைவருக்கும் திகைப்பையும் அதிர்ச்சியையும் ஒருங்கே ஏற்படுத்தியுள்ளது.
புனித ரமளான் மாதத்தில் முஸ்லிம்கள் பள்ளிவாசல்களுடன் கொண்டுள்ள தொடர்பு நெருக்கமாக இருக்கும் என்பதை அனுமானித்து அதனைச் சீர்குலைக்கும் முகமாக இவ்வருட ரமளான் மாதம் முழுக்க பெய்ஜிங்கின் யிங்மெய்லி என்ற நகரத்தில் உள்ள பள்ளிவாசல்களுக்கு அரசு அலுவர்கள் அவ்வப்போது வந்து “பரிசோதனை” நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரமளான் மாதத்தில் சீன சமூகத்தில் சீர்கேடுகள் ஏற்படாமல் இருக்க கீழ்க்கண்டவை நடைமுறைப் படுத்தப் படுகின்றன என்ற முன்னுரையுடன், ஸின்ஹே (Xinhe) அரசு இணையத் தளத்தில் வெளியாகியுள்ள அறிவிப்பு கீழே:
-
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்களோ மாணவர்களோ நோன்பிருக்கக் கூடாது.
-
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் பள்ளிவாசலுக்குச் செல்லக் கூடாது. ரமளான் மாத வழிபாடுகளில் ஈடுபடக் கூடாது.
-
ஆண்கள் தாடியைக் களைந்து மழித்திட வேண்டும்.
-
பெண்கள் ஹிஜாபைக் களைந்திட வேண்டும்.
-
பள்ளிவாசல்களில் யாரும் இரவில் தங்கக் கூடாது (ரமளான் மாதத்தில் இஃதிகாஃப் எனப்படும் இறை வழிபாட்டிற்காக உலகமெங்குமுள்ள முஸ்லிம்கள் பள்ளிவாசல்களில் இரவில் தங்குவது வழக்கம்).
-
நோன்பு நேரங்களில் உணவு விடுதிகளில் வழக்கம்போல் சாதாரணமாக உணவுகள் பரிமாறப்பட வேண்டும்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஸின்ஜியாங் (Xinjiang) நகரத்தில் ஏற்பட்ட சில மோதல்களை, இத்தகைய தடையுத்தரவிற்கு அடிப்படைக் காரணமாக கூறியுள்ளது சீன அரசு. மேலும், நகரத்தின் பாதுகாப்புக் கருதியே இத்தகைய தடைகளை முஸ்லிம்களின் மீது விதித்துள்ளதாக உள்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அமைதி மார்க்கமாம் இஸ்லாத்தில், புனித ரமளான் மாதத்தில் நடைபெறும் கூடுதலான வணக்க வழிபாடுகளும் நோன்புகளும் முஸ்லிம்களிடையே பெரும் ஒற்றுமையை ஏற்படுத்தி வலுவான சக்தியாக உருப்பெறும் என்பதை அனுமானித்து, அதனைத் தகர்க்கவே சீன அரசின் இத்தகைய செயல்பாடுகள் மூலம் முஸ்லிம்களின் உணர்வுகளை நசுக்கியிருப்பது தெளிவாகிறது.
ரமளான் மாதத்திற்குப் பின்னர் இந்தத் தடையுத்தரவு தளர்த்தப் படுமா என்பது கேள்விக்குறியாக உள்ள நிலையில், உலகமெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் செய்யும் இறை வணக்கம் ஒன்றினைத் தடை செய்யும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ள சீன அரசினை எதிர்த்து சர்வதேச அளவில் கிளர்ச்சிகளும் போராட்டங்களும் வெடித்துள்ளன.
முஸ்லிம்களை நோகடிப்பதில் முதலாளித்துவம், சியோனிஸம், ஃபாஸிஸம், கம்யூனிஸம் போன்றவற்றிடையே எவ்வித வித்தியாசமும் இல்லை என்பதையே இந்நிகழ்வு தெரிவிக்கிறது.
எங்கெல்லாம் அடக்குமுறை பிரயோகிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் சுதந்திரத்தீ மிக விரைவாக பற்றி எரியும் என்பது கால ஓட்டத்தில் அனைவரும் கண்டுவரும் விஷயமாகும்.
இதே கம்யூனிஸத்தைக் கடைபிடித்த சோவியத் ருஷ்யாவின் கீழ் அடக்கி ஒடுக்கப்பட்டிருந்த குரேஷியா, செச்னியா போன்ற நாடுகள் இன்று விடுதலை கீதம் பாடுவதைக் கண்டு சீனா பாடம் கற்கவில்லை போலிருக்கின்றது.
சீனாவின் இத்தகைய அடக்குமுறை தொடரும் பட்சத்தில், அங்கும் ஒரு இஸ்லாமிய புரட்சியை விரைவில் எதிர்பார்ப்போம்.