பன்னாட்டு அணுஆற்றல் இயக்க (IAEA) அறிக்கை: US மன்னிப்பு கேட்க வேண்டும்!: ஈரான்

{mosimage}தெஹ்ரான்: அணு ஆற்றல் உற்பத்தித் தொடர்பாக ஈரான் கூறி வந்த விவரங்கள் அனைத்தும் உண்மையே என்பதை நிரூபிக்கும் அறிக்கையை பன்னாட்டு அணு ஆற்றல் இயக்கம் (IAEA) வெளியிட்டுள்ள சூழலில் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஈரானிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதிநிஜாத் கூறியுள்ளார். IAEA வெளியிட்ட அறிக்கைக் குறித்து ஒரு தொலைகாட்சி நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

"மேற்குலகின் மீது ஈரான் பெற்ற வெற்றியே IAEA-வின் ஈரானுடைய அணு ஆற்றல் உற்பத்தி தொடர்பான புதிய அறிக்கை" என நஜாத் கூறினார். ஆதாரமின்றிப் பழிசுமத்திய அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் மரியாதையினைக் காப்பாற்றிக் கொள்வதற்கான ஒரே வழி, அணு ஆயுதத்தின் பெயர் கூறி ஈரானுக்கு எதிராக உலகமெங்கும் நடத்திய பொய்ப் பிரச்சாரங்களுக்காக மன்னிப்பு கேட்பதும் ஈரானுக்கு அதற்கான நஷ்டஈடு வழங்குவதுமேயாகும். 
 
இதற்கு மேலும் ஈரானுக்கு எதிரான தடைகளுடன் முன்செல்வது தான் இந்த நாடுகளின் தீர்மானம் எனில், அதற்குத் துணை போகும் நாடுகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை ஈரான் மேற்கொள்ளும்" என நஜாத் உறுதிபடக் கூறினார். 
 
"அணு ஆற்றல் உற்பத்தி நடவடிக்கைகளைக் குறித்த விவரங்களை வெளிப்படுத்துவதில் ஈரான் முன்பை விட மிக வெளிப்படையாகச் செயல்படுகின்றது" எனவும் "கடந்தக் காலங்களில் அவர்களின் அணு ஆயுத உற்பத்தி தொடர்பாக ஏற்பட்டச் சந்தேகங்கள் அனைத்தும் ஏறக்குறைய முழுவதும் தெளிவுபடுத்தப்பட்டது" எனவும் "பன்னாட்டு அணுஆற்றல் இயக்கத்திற்கு ஈரான் தனது முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாகவும்" கூறும் ஈரானின் அணுஆயுத உற்பத்தித் தொடர்பான அறிக்கையினை IAEA கடந்த வெள்ளியன்று வெளியிட்டது. ஆனால், அறிக்கையில் காணப்படும் "எனினும் அனைத்துச் சந்தேகங்களுக்கும் இவ்வறிக்கை பரிகாரமாகாது" என்ற ஒருவரி விமர்சனத்தை மட்டும் தூக்கிப் பிடித்துக் கொண்டு ஈரானுக்கு எதிரான அடுத்தக் கட்டத் தடைகளுடன் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் முன்செல்லத் தீர்மானித்துள்ளன.