தொடரும் இஸ்லாமோஃபோபியா…!

Share this:

கோழிக்கோடு: முக்கம் நகரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் யஹ்யா அயாஷ் கம்முக்குட்டியைத் தீவிரவாதத் தொடர்பு காரணம் கூறி சிறிது நாட்களுக்கு முன் பெங்களூரில் கைது செய்ததற்குப் பின்னால் பல மாதங்கள் நீண்ட சதி ஆலோசனை நடைபெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யஹ்யாவின் கைது தொடர்பான விஷயங்களை விசாரிப்பதற்காகக் கேரளத்திலிருந்து பெங்களூர் சென்ற மனித உரிமைக் கழகத்தினருக்குக் கிடைத்த தகவல்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன.

பெங்களூர் GE (General Electric Company) நிறுவனத்தில் மனித வள மேம்பாட்டுத்துறை அலுவலராக யஹ்யா பணியாற்றி வந்துள்ளார். ஓராண்டுக்கு முன் இந்நிறுவனத்தில் இருந்து தனது வேலையிலிருந்துப் பதவிவிலகிச் சொந்தமாக மனித வள மேம்பாட்டுத் துறை மென்பொருள் வடிவமைப்பதற்கான முயற்சிகளில் இவர் ஈடுபட்டதே தற்போதைய தீவிரவாதக் குற்றச்சாட்டுடன் கூடியக் சதி கைதுக்குக் காரணம் என மனித உரிமை கழகத்தின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

யஹ்யா GE நிறுவனத்திலிருந்து விலகி சொந்தமாக மென்பொருள் உற்பத்திக்கான முயற்சிகளை ஆரம்பித்தது முதலே பெங்களூரில் உள்ள பெரிய மென்பொருள் நிறுவனங்கள் யஹ்யாவை கண்காணிக்க ஆரம்பித்துள்ளன. GE-யில்  இருந்து மென்பொருள் ரகசியங்களைத் திருடியதற்காக வேலை நீக்கம் செய்யப்பட்டார் என்ற ஒரு பொய் பிரச்சாரம் திட்டமிட்டு அவிழ்த்து விடப்பட்டுள்ளது. இது யஹ்யாவினைக் கைது செய்வதற்கு முன்பாகவே அதற்கான ஏற்பாடுகளுக்கு உதவும் விதம் சதியாலோசனை நடத்தியிருப்பதற்கான அறிகுறியாகும் என கேரளாவிலிருந்து இவ்வழக்கைக் குறித்து விசாரிக்க பெங்களூர் சென்ற சிறுபான்மையினர் உரிமைப்பாதுகாப்பு (Minority Rights Watch)அமைப்பின் தலைவர் வழக்கறிஞர். எஸ். ஷாநவாஸ் கூறினார். GE போன்ற நிறுவனத்தில் மென்பொருள் மூலத்தைத் திருடுவதற்கு இயலாது எனவும் அவ்வாறு ஒன்று நிகழ்ந்தால் அவ்வளவு இலகுவாக அக்கம்பெனிகள் அவ்விதம் செயல்பட்டவர்களை வேலையை விட்டு மட்டும் நீக்கி விட்டு வெறுமனே இருக்க மாட்டார்கள் எனவும் அவர் கூறினார்.

இந்திய தண்டனைச் சட்டம். 121, 153(பி), 120 முதலிய பிரிவுகள் படி தேச விரோதம், மதத்தீவிரம் வளர்த்துதல், சதியாலோசனை முதலிய குற்றங்கள் யஹ்யாவுக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ளன. மேலும் 2001 ல் நடைமுறைக்கு வந்த சட்டவிரோத செயல்பாட்டுச் சட்டத்தில் உள்ள 3, 10 பிரிவுகளும் அவர் மீது பிரயோகிக்கப்பட்டுள்ளது. பெங்களூர், ஹுப்ளி லோக்கல் காவல்துறை முதல் தகவல் அறிக்கை தயார் செய்து CID காவல்துறை பிரிவுக்கு யஹ்யா கையளிக்கப்பட்டுள்ளார்.

யஹ்யாவிற்காக வழக்காடுவதற்கு முஸ்லிம் வழக்கறிஞர்களை கர்நாடக நீதிமன்றம் அனுமதிக்கவில்லை எனவும் வழக்கறிஞர் ஷாநவாஸ் கூறினார். அதுமட்டுமல்லாமல் அவரின் வழக்கை விசாரிக்க முன்வரும் முஸ்லிம் அல்லாத வழக்கறிஞர்களை மாவோயிஸ்டுகளாக முத்திரைக் குத்துவதற்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. எனினும் ஹூப்ளியைச் சேர்ந்த வழக்கறிஞரும் மனித உரிமைக்கழக செயல்வீரருமான எஸ். ஜாலிகர் யஹ்யாவின் வழக்கினைப் பொறுப்பெடுத்து நடத்த முன்வந்துள்ளார்.

 

தனிப்பட்ட முறையில் தொழில் போட்டியாக உருவாகும் யஹ்யாவினை முடக்கச் சமூகத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் விலைபோகும் "தீவிரவாதத் தொடர்பு" ஆயுதத்தைக் கையிலெடுத்துக் கொண்டவர்களின் பின்னால் இருந்து இயங்கும் காவல்துறையும் இன்னபிற சக்திகளும் யஹ்யாவினை இச்சதியில் இருந்து எளிதில் மீளாவண்ணம் இருக்கத் தற்பொழுது வேறு பல உபாயங்களையும் தேடி அலைவதாகவும் கூறப்படுகின்றது.

அதில் முக்கியமானது, சமுதாயத்தில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கி இருக்கும் ஏழை முஸ்லிம் மாணவர்களின் உயர்கல்விக்குப் பொருளாதார உதவி வழங்கும் இஸ்லாமிய வளர்ச்சி வங்கியை (Islamic Development Bank) யஹ்யாவின் கைது விஷயத்தில் நுழைப்பதற்காக எடுக்கப்படும் முயற்சிகளாகும்.

இந்திய அரசின் அனுமதியுடன் சமூகத்தில் பின்தங்கியுள்ள வசதியற்ற ஏழை மாணவர்களின் உயர்கல்விக்காக ஆண்டுதோறும் உதவித் தொகைகள் வழங்கி வரும் IDB-யை சர்வதேசத் தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய அமைப்பாகச் சித்தரிப்பதற்கான முயற்சிகளைத் தங்களுடையத் திட்டங்களுக்கு உதவி புரியும் சில ஊடகங்களின் துணையுடன் இவர்கள் எடுத்து வருகின்றனர்.

கடந்த 25 வருடங்களாக இஸ்லாமிய முன்னேற்ற வங்கி இந்தியாவில் உள்ள ஏழை முஸ்லிம் மாணவர்களுக்கு உதவித்தொகைகள் வழங்கி வருகின்றது. இதன் தலைமையகம் சவுதி அரேபியாவில் ஜித்தாவில் உள்ளது. தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் முஸ்லிம் கல்வி அறக்கட்டளை வழியாக இவர்கள் இந்தியாவில் உள்ள ஏழை மாணவர்களுக்கு உதவித் தொகைகள் வருகின்றனர். ஆண்டுதோறும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து கிடைக்கப்பெறும் படிவங்களிலிருந்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட 150 பேர்களுக்கு இவர்கள் உதவித் தொகை வழங்கி வருகின்றனர்.

பத்திரிக்கைகளிலும் இன்னபிற ஊடகங்களிலும் வெளிப்படையாக விளம்பரம் செய்து முறையான வழிகளிலேயே இவ்வுதவிகளை இவர்கள் செய்து வருகின்றனர். மேல்படிப்புகளில் முக்கியமாக பொறியாளர், மருத்துவர் போன்ற முக்கியத் தொழிற்கல்வித் துறைகளுக்கு மட்டுமே IDB உதவித்தொகைகளை வழங்கி வருகின்றது.

முஸ்லிம் கல்வி அறக்கட்டளையின் தலைவராக முன்னாள் இந்திய ஆட்சிப்பணி (IAS) அலுவலர் முஹம்மது ஜாவீத் அஹ்மத் சௌத்ரி செயல்பட்டுவருகின்றார். IDB-யின் உதவித் தொகைகளை கேரளத்தில் இஸ்லாமிய இளைஞர் மையம் (Islamic Youth Centre) வழங்கி வருகின்றது.

இத்தகையச் சமுதாய முன்னேற்றச் செயல்பாடுகளில் நாட்டம் கொண்ட யஹ்யாவினையும் முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றத்திற்காக உழைத்து வரும் அமைப்புகளையும் தொடர்பு படுத்தி இவ்வழக்கில் சிக்க வைத்தால் அது இந்தியச் சமூகத்தில் பொருளாதாரத்திலும் கல்வியிலும் இன்னபிற துறைகளிலும் மிகவும் பின்தங்கி இருக்கும் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்திற்கும் மிகப் பெரிய இழப்பாக இருக்கும் என்பதை நன்றாக அறிந்துத் திட்டமிட்டே முஸ்லிம்களுக்கு எதிராக இது போன்றச் சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற ஐயத்தினையும் இது எழுப்புகின்றது.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.