காந்திநகர்: சொஹ்ராபுதீனை போலி மோதல் நாடகம் நடத்தி சுட்டுக் கொலை செய்த வழக்கில் குஜராத் முன்னாள் காவல்துறைத் துணை இயக்குனர் D.G.வன்சாராவை முக்கியக் குற்றவாளி எனக் கூறி விசாரணைக் குழு உச்சநீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்தது. இக்கொலைக்கான சதி ஆலோசனையில் முக்கிய பங்கு வகித்தது வன்சாரா என விசாரணை குழுவின் வாக்குமூலம் தெரிவிக்கின்றது. மத்தியக் குற்றப் புலனாய்வுத் துறை ஆய்வாளர் ஹாதிய்யா விசாரணை அறிக்கையினை வாக்குமூலமாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
சொஹ்ராபுதீன் கொலை வழக்கில் கடந்த ஏப்ரல் 2007 ல் கைது செய்யப்பட்ட வன்சாராவிற்கு உறவினரின் திருமணத்தில் பங்கெடுப்பதற்காக மூன்று தினங்களுக்குள் கட்டாயம் திரும்ப வேண்டியக் கடும் நிபந்தனையில் கடந்த பிப்ரவரி 24 அன்று ஜாமீன் வழங்கப்பட்டது. முழுப்பிணைக்கு வன்சாரா மனு அளித்திருந்தப் போதிலும் இவ்வழக்கை விசாரிக்கும் மத்தியக் குற்றப் புலனாய்வுத் துறை (குற்றவியல் பிரிவு) அதனை எதிர்த்திருந்தது. “தீவிரவாத எதிர்ப்புப் படையின் தலைவராக இருந்த வன்சாரா, சொஹ்ராபுதீனைக் கொலை செய்ததற்கும் அவரின் மனைவி கௌசர்பீயைக் கொன்று குற்றத்தின் ஆதாரங்களை அழித்ததற்கும் தலைமையாக இருந்துச் செயல்பட்டவர் எனவும் அவரை ஜாமீனில் விட்டால் விசாரணையைப் பாதிக்கும் விதத்தில் அவரின் நடவடிக்கைகள் அமைவதற்கு வாய்ப்பாக இருக்கின்றது” எனவும் மத்தியப் புலனாய்வுக் குழு நீதிமன்றத்தில் அதற்குக் காரணம் கூறியது.
நீதிமன்றத்தில் வன்சாராவின் ஜாமீனுக்கு எதிராக வாக்குமூலம் சமர்பித்த CID இன்ஸ்பெக்டர் ஹாதியா, “சொஹ்ராபுதீனைப் போலி என்கவுண்டர் மூலம் 2005 நவம்பரில் கொலை செய்தனர். அதற்கு இரு தினங்களுக்குப் பின் அவரின் மனைவி கௌசர்பீயையும் கொலை செய்தனர். இது அதிகாரத்தின் துர்நடத்தை அல்லாமல் வேறொன்றும் இல்லை” என நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்கும் வேளையில் கூறினார். இதனால் வன்சாராவுக்கு ஜாமீன் வழங்குவதில் எவ்வித நியாயமும் இல்லை எனவும் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனவும் அவர் வாதிட்டார்.
“விசாரணை வேளையில் கிடைத்த ஆதாரங்கள் வன்சாராவின் சதி ஆலோசனையையும் இவ்வழக்கில் அவரின் பங்கினைக் குறித்தும் தெளிவாகத் தெரிவிக்கின்றன. சுக்ராபுதீன் கொலை செய்யப்பட்ட விபரமறிந்த அவரின் மனைவி கௌசர்பீயை உயிரோடு விட்டால் அது அவர்களுக்குப் பாதகமாக அமையும் என்பதை வன்சாரா நன்றாக அறிந்திருந்தார். வன்சாராவின் கட்டளைப் படி காந்திநகரில் உள்ள ஒரு தோட்ட வீட்டில் வைத்து கௌசர்பீ கொலை செய்யப்பட்டார். பின்னர் அவரின் உடலை வன்சாராவின் பிறந்த இடமான சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள இலோளில் புதைத்தனர். இலோளில் வன்சாராவுக்கு எதிராக எவரும் சப்தமுயர்த்தமாட்டார்கள் என்ற நம்பிக்கையிலேயே கௌசர்பீயின் உடலை அங்குக் கொண்டு சென்று புதைக்கத் தீர்மானித்தனர்” என விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கௌசர்பீயின் உடலைப் புதைத்தது தொடர்பான காவல்துறை வாகன ஓட்டுனரின் வாக்குமூலம் நீதிபதியின் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே சாட்சி பின்னர் நீதிமன்ற விசாரணை வேளையில் சாட்சியம் மாற்றிக் கூறினாலும் சாட்சியின் வாக்குமூலம் நிலைபெறும்.
அதே சமயம் இவ்வழக்கில் இணைக்கப்பட்டுள்ள மற்ற இரு குற்றவாளிகளும் காவல்துறை அதிகாரிகளுமான எம்.என். தினேஷ் மற்றும் என்.கே. அமின் ஆகிய இருவரின் ஜாமீன் மனுவின் மீதான விசாரணையை அடுத்த மார்ச் 25 அன்று எடுத்துக் கொள்ள உச்சநீதி மன்றம் தீர்மானித்துள்ளது. ராஜஸ்தான் பிரிவில் உள்ள IPS அதிகாரியான M.N. தினேஷ், சொஹ்ராபுதீனைப் போலி மோதலில் கொலை செய்ய உதவி செய்ததாகவும் குஜராத்திலுள்ள காவல் துணைக் கண்காணிப்பாளர் (DSP) அமின் கௌசர்பீயின் உடலை மறைக்க உதவி செய்ததாகவும் விசாரணைக் குழு கண்டறிந்துள்ளது.
விசாரணைக் குழுவின் அறிக்கையின் மூலமாகவும் மற்றொரு முறை சதிச்செயல் என நிரூபிக்கப்பட்டச் சொஹ்ராபுதீன் கொலை விவகாரத்தைத் தான், கடந்த குஜராத் தேர்தலின் பொழுது, குஜராத் இனப்படுகொலையின் நாயகனான நரேந்திர மோடி “தீவிரவாதியைக் கொலை செய்வதுத் தவறா?” என நிறைந்திருந்தத் தனது ஆதரவாளர்களின் முன்னிலையில் கேட்டு சொஹ்ராபுதீனைக் கொலை செய்ததற்கு மக்கள் அங்கீகாரம் பெற முயற்சி செய்தார் என்பதும் அதனையே தனது தேர்தல் வெற்றிக்குப் பிரதான பகடைக்காயாக உபயோகித்து மக்களிடம் இன வெறுப்பைத் தூண்டி வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.