ஹமாஸின் இராஜதந்திரத்தால் விடுவிக்கப்பட்ட BBC நிருபர்

{mosimage}வெளியில் அவ்வளவாக அறியப்படாத இஸ்லாமிய சேனை (Army of Islam) என்ற ஆயுதக் குழுவினரால் பாலஸ்தீனின் காஸா பகுதியில் கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு முன் சிறைபிடிக்கப்பட்ட BBC செய்தி நிறுவனத்தின் காஸா நிருபரான ஆலன் ஜான்ஸ்டன் காஸா பகுதியில் தற்போது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பினரின் இராஜதந்திர நடவடிக்கையால் விடுவிக்கப்பட்டார்.

"ஹமாஸ் கட்டுப்பாட்டில் மட்டும் இல்லாவிட்டால் என்னால் வெளியுலகைப் பார்த்திருக்கும் வாய்ப்பைப் பெறுவது பெரும் கேள்விக்குரிய விஷயமாகவே இருந்திருக்கும்" என்று விடுவிக்கப்பட்ட ஆலன் ஜான்ஸ்டன் உணர்ச்சி பொங்க ஹமாஸுக்கு நன்றி தெரிவித்து கூறினார்.

ஆலன் ஜான்ஸ்டனை பத்திரமாக உடல்நலத்துடன் மீட்டது ஹமாஸின் இராஜ தந்திரத்துக்கும் ஆளுமைக்கும் சான்றாகும் என ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் காலித் மிஷால் தெரிவித்தார்.

"என்னைச் சிறைபிடித்திருந்த ஆயுதக் குழுவினர் ஹமாஸ் காஸா பகுதியில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியதுமே நிலைகுலைய ஆரம்பித்துவிட்டார்கள்" என ஜான்ஸ்டன் தெரிவித்தார்.

பிரபல செய்திப் பத்திரிக்கைகளான கார்டியன், டெய்லி மெய்ல், கிறிஸ்டியன் சைன்ஸ் மானிட்டர், நியூயார்க் டைம்ஸ் ஆகியன தமது தலையங்கத்தில் ஹமாஸின் இந்த அணுகுமுறை அவர்களின் தேர்ந்த அரசியல் திறனைக் காட்டுகிறது எனவும், இனியும் அவர்களை ஒரு பயங்கரவாதக் குழு எனச் சித்தரிப்பது அமெரிக்க, பிரித்தானிய மற்றும் ஏனைய உலக அரசுகளுக்கு சரியான செயலாக இராது என்றும் கூறியுள்ளன.

இது தவிர இஸ்ரேலிலிருந்து வெளிவரும் யெடியோட் அஹ்ரோனோட் எனும் பத்திரிக்கையில் "ஹமாஸுடனான உறவை சுமுகமாக வைத்துக் கொள்வதில் தான் மத்தியகிழக்கில் அமைதியை நிறுவமுடியும்" என்றும் "பித்துப் பிடித்தாற்போல மேற்கத்திய அரசுகளும் ஊடகங்களும் ஹமாஸை பயங்கரவாதிகளாகச் சித்தரிப்பதை நிறுத்தவேண்டும்" என்றும் டிரோர் ஜீவி எனும் அரசியல் நோக்கர் எழுதியுள்ளார்.

ஹமாஸ் பாலஸ்தீன மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நிறுவியிருந்தார்கள் என்பதும் அமெரிக்க இஸ்ரேலிய அரசுகள் அந்த அரசுக்கு நெருக்கடி கொடுத்து பணிகளை செயலிழக்க வைத்ததும், சமீபத்தில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் ஹமாஸ் அரசைக் கவிழ்த்து புதிய அரசை நிறுவியதும் அறிந்ததே.

பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுனின் புதிய அமைச்சரவையில் பதவி வகிக்கும் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபேண்ட், "ஆலன் ஜான்ஸ்டனை விடுவிக்க பாலஸ்தீனர்களும் ஹமாஸும் மேற்கொண்ட அரும் முயற்சிகள் சர்வதேச அங்கீகரிப்பை நிச்சயம் பெறாமல் போகாது" எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.