{mosimage}தமிழகத்தில் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் தனியான இடஒதுக்கீடு வழங்குவது பற்றி அரசு ஆய்வு செய்து வருவதாக முதல் அமைச்சர் கருணாநிதி இன்று கூறியிருக்கிறார்.
இதுகுறித்து சென்னையில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்க விரும்பும் அரசுதான் மாநிலத்தில் செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும், சிறுபான்மையினருக்கு தனி இட ஒதுக்கீடு அளிப்பது என்பதில் திமுக அரசு உறுதியாக உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.
மேலும், இப்பிரச்சனையை அரசியலாக்கும் சக்திகளின் முயற்சிகளுக்கு சிறுபான்மையினத்தவர்கள் பலியாகிவிடக் கூடாது எனவும், சட்டம் இயற்றி விட்டு, அதன் அந்தச் சட்டம் நீதிமன்றத்திற்குச் சென்று செயல்படுத்த முடியாமல் இருக்கும் நிலை ஏற்பட்டு விடக் கூடாதே என்பதற்காக, சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியிருக்கும் கருத்தே அரசின் கருத்தாகும் என்றும் கருணாநிதி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
எனவே சிறுபான்மையினர் இடஒதுக்கீடு பற்றி விரிவான ஆய்வு நடத்தப்பட்டு முடிவு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.