ஆற்றல் தட்டுப்பாடு அமெரிக்காவைத் தகர்க்கும் – முன்னாள் அமெரிக்க துணை அதிபர் அல்கோர்.

 

வாஷிங்டன்: அமெரிக்கா எதிர்கொள்ளும் மோசமான ஆற்றல் தட்டுப்பாட்டைச் சீர்செய்வதற்குத் தாமதித்தால் அது நாட்டின் நிலையான உறுதிக்குப் பெருத்த சவாலாக மாறும் என முன்னாள் அமெரிக்க துணை அதிபர் அல்கோர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேவையான மின்சக்தி முழுவதையும் கார்பனைச் சார்ந்திராமல் மறு உருவாக்கம் செய்யும் வகையில் உற்பத்திச் செய்வதற்குத் தேவையான வழிமுறைகளை அடுத்த 10 வருடங்களுக்குள் கண்டுபிடிப்பது மட்டுமே தற்போதைய இக்கட்டான சூழலை விட்டு நாடு மீண்டு வருவதற்கான ஒரே வழி எனவும் அவர் கருத்துத் தெரிவித்தார்.

நாடு தற்பொழுது எதிர்கொள்ளும் பொருளாதார, ஆற்றல் தட்டுப்பாடு, பாதுகாப்பு ரீதியிலான பிரச்சனைகள் பரஸ்பரம் ஒன்றுக்கொன்று தொடர்புடையது எனவும் அவர் கூறினார். “ஒரே நேரத்தில் இத்தனை அதிகமான முக்கிய விஷயங்கள் ஒன்றாகத் தவறான திசையில் பயணம் செய்த காலம் என் நினைவில் வேறு இல்லை” என வாஷிங்டனிலுள்ள கான்ஸ்டிடியூசன்(சட்ட) அரங்கில் பேசும் பொழுது அரசு மீது குற்றம்சாட்டினார்.

இதற்கான ஒரே பரிகாரம், கார்பனை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் நமது எரிபொருள் தேவையை முடிவுக்குக் கொண்டு வருவதாகும். காற்று, நீர் மற்றும் சூரியசக்தி இவற்றை அடிப்படையாகக் கொண்டு நமது எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய முனைந்தால் மட்டுமே தற்போதைய இக்கட்டான சூழலிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ள இயலும்.

1960 களில் மனிதனைச் சந்திரனில் கொண்டு சேர்க்கும் சவாலை ஏற்றெடுத்துக் காரியங்களை மேற்கொண்ட கென்னடியின் அரசாங்கக் கொள்கைகளை இதற்கு முன்னுதாரணமாக நாம் எடுத்துக் கொள்ள வேன்டும். எரிபொருள் தேவைக்குப் பரிகாரம் காண்பதற்கு அதிகப்படியான இடங்களில் எண்ணெய் கண்டறிவதற்கான முயற்சியை விரிவாக்கிய புஷின் தீர்மானத்தை, உலக சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்றவரான அல்கோர் மிகக் கடுமையாக விமர்சிக்கவும் செய்தார்.

“சுற்றுசூழலில் கார்பன் டை ஆக்ஸைடின் அளவைக் கட்டுப்படுத்துவதற்காக அதன் மீது வரி விதிக்க அரசு தயாராக வேண்டும்” என சுற்றுச்சூழல் சுகாதாரக் கேடுகளின் பல்வேறு காரணிகளை விரிவாக அலசும் “அன் இன்கன்வீனியன்ட் ட்ரூத்”(Un inconvenient Truth) என்ற டாக்குமென்டரியின் தயாரிப்பாளருமான அல்கோர் கருத்து தெரிவித்தார்.

இதற்கிடையில், அமெரிக்கா நேரிடும் எரிபொருள் பற்றாக்குறை அந்நாட்டின் பல பிரதேசங்களிலும் பல்வேறு வகைகளில் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது.

எண்ணெய்க்காக பெட்ரோல் பம்புகளில் வரிசையில் நின்று வெறுத்துப் போன மக்கள், இலவசமாகக் கிடைக்கும் பெட்ரோலுக்காக எது வேண்டுமெனிலும் செய்ய தயாரான நிலையில் உள்ளதை அந்நாட்டில் சமீபத்தில் வெளிவந்துள்ள இலவசஅறிவிப்புகளின் மீதான மக்களின் ஆர்வம் வெளிப்படுத்துகின்றது.

தனது சொந்தக் குழந்தையின் பெயரை மற்றொரு அந்நியனின் பெயரைப் போட தயாரானது முதல் விபச்சார விடுதிகளில் மொய்த்தல் மற்றும் திருட்டு வரை எதை வேண்டுமானாலும் செய்யக் கூடிய நிலைக்கு அமெரிக்க மக்கள் எட்டியுள்ளனர்.

ஃப்ளோரிடாவில் உள்ள ஒரு வானொலி நடத்தியப் போட்டி ஒன்றுக்கு அறிவிக்கப்பட்டப் பரிசுத் தொகை 100 டாலருக்கான கேஸ்(கேஸோலின்) கூப்பனாகும். இதனைப் பெற தனது மகளுக்கு வானொலி அறிவிப்பாளரின் பெயரை இட டேவிட் பார்ட்டின் என்ற நபர் முன்வந்தார். நெவாதாவில் செயல்படும் விபச்சார விடுதி ஒன்று தனது விடுதியில் மாதம் 300 டாலர் செலவழிக்கும் வாடிக்கையாளர்களுக்கு 50 டாலரின் கேஸ் வவுச்சர் இலவசம் என அறிவித்துள்ளது. பொதுவாகவே வியாபாரம்(!) மந்தகதியில் இருக்கும் இந்தச் சம்மர் சீசனில், ஒரு வாரத்திற்குள் 1000 டாலருக்கான கூப்பன் செலவு செய்யப்பட்டுள்ளதாக ஒரு விடுதியின் உரிமையாளர்(!) ஜேம்ஸ் டேவிட் சந்தோஷத்துடன் கூறுகிறார்.

இதற்கெல்லாம் முனைப்புடன் தயாராவதற்கும் சிலர் திருட்டு வழியில் இறங்கியுள்ளனர். டெக்ஸாஸிலுள்ள 5க்கும் மேற்பட்ட குழந்தைகள் காப்பகத்திலிருந்து 100 டாலருக்கான எண்ணெய் கூப்பனைத் திருடிப் போயுள்ளதாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இதற்கு ஒருபடி மேலாக அமெரிக்க செஞ்சிலுவை (Red Cross) அமைப்பு இரத்ததானம் செய்யும் தனது நிரந்தர உறுப்பினர்களுக்கு ஒரு வருடத்திற்கான எண்ணெய் கூப்பன் வழங்கும் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அறிவிப்பு வெளிவந்த சில தினங்களிலேயே இரத்ததானம் செய்யும் நபர்களின் எண்ணிக்கை ஒரேயடியாக உயர்ந்துள்ளதாக அவ்வமைப்பு கூறுகிறது. இவை எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் மற்றொரு சம்பவம் அமெரிக்காவில் எரிபொருள் தட்டுப்பாடு எந்த அளவிற்கு நாட்டை ஆட்டிப் படைக்கின்றது என்பதை தெரிவிப்பதாக உள்ளது.

வாஷிங்டனிலுள்ள சில கிறிஸ்தவ தேவாலயங்கள் வாராந்திர குர்பானிகளில் பங்கெடுக்கும் நபர்களுக்குக் குலுக்கல் மூலம் 50 டாலருக்கான பெட்ரோல் கூப்பன் இலவசமாக வழங்கும் என அறிவித்துள்ளது. இது தேவாலயங்களில் மக்களின் வருகையை அதிகரிப்பதற்கான தந்திரம் அல்ல என மாஸசூசிஸ்ட்சிலுள்ள சென்ட் ஆன்ஸ் பாரிஷ் என்ற தேவாலயத்தின் பாதிரி எட்வர்ட் மெக்டொனாயின் அறிவிப்பு வேறு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அமெரிக்காவில் மின்சாரம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு நாட்டைச் சீரழித்து அதன் பொருளாதாரப் பின்னடைவிற்கும் மிகப் பெரியக் காரணமாக இருக்கும் இவ்வேளையில், அமெரிக்காவினாலேயே ஒதுக்கப்பட்டு உலகநாடுகள் எதிலும் விலைபோகாத அணு உலைகளை 300000 கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்து அமெரிக்க நிறுவனங்களிலிருந்து வாங்குவதற்கான ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்காக நாட்டை ஆளும் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு தனது அரசையே தாரை வார்க்கத் தயாராகி, இந்தியாவின் இறையான்மையை நிர்ணயிக்கும் பாராளுமன்ற சபையில், பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக் கோடிக்கணக்கில் விலை பேசிய விவகாரம் இன்று உலக அரங்கில் இந்தியாவைத் தலை குனிய வைக்கும் அளவிற்கு நாட்டைக் கொண்டு சென்று நிறுத்தியுள்ளது.