”எவன் இன்னொரு சமயத்தவரின் கலாச்சாரங்களை மேற்கொண்டு அவர்களைப் போன்று நடக்கின்றானோ அவனும் அவர்களைச் சார்ந்தவன்தான்” நபிமொழி (அபூதாவூத், அஹ்மத்)
ஹிஜாப் அணிந்த காரணத்தினால், மொராக்கோ நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெண்ணுக்கு குடியுரிமை வழங்க பிரான்ஸ் அரசு மறுத்துள்ளது.
மொராக்கோ நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் சகோதரி பாய்சா. இவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டார். 2000ம் ஆண்டிலிருந்து பிரான்சில் வசித்து வருகிறார். அவருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. அனைத்தும், பிரான்ஸ் நாட்டிலேயே பிறந்தன. பிரெஞ்ச் மொழியிலும் பாய்சா நன்றாகப் பேசுவார். கடந்த 2005ம் ஆண்டில், இவர் பிரான்ஸ் குடியுரிமை கோரி விண்ணப்பித்தார். ஆனால், பிரான்ஸ் நாட்டு கலாசாரத்துடன் இன்னும் ஒன்றுபடவில்லை எனக் கூறி, அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் குடியுரிமை கோரி விண்ணப்பித்தார். ஆனால், அவர் ஹிஜாப் (பர்தா) அணிவதாலும், இஸ்லாமிய மத நடைமுறைகளை தீவிரமாக பின்பற்றுவதாலும், அந்த நடைமுறைகள் ஆண், பெண் சமம் என்ற பிரான்ஸ் நாட்டின் அடிப்படையான கோட்பாடுகளுக்கு முரணாக இருப்பதாலும், பாய்சாவிற்கு குடியுரிமை வழங்க முடியாது என, பிரான்ஸ் அரசு மறுத்து விட்டது.
கருத்துச் சுதந்திரம் பற்றி பேசிக் களைத்துப் போய், இப்போது “தனிமனித சுதந்திரம்” வியாபாரத்தில் குதித்திருக்கும் ஃபிரான்ஸில் முஸ்லிம்கள் மூன்றாம் தர மனிதர்களாக நடத்தப்படுகிறார்கள் என்பது மீண்டுமொரு முறை உலகிற்கு முன் நிரூபணமாகியுள்ளது.
ஒரு பெண் தன் இஷ்டத்திற்கு ஆடைகளைக் களைந்து கொள்ள அனுமதிக்கும் அதே நாட்டில் ஒரு பெண் தன் விருப்பப்படி கண்ணியத்தைப் பேணும் ஒரு உடையினை அணிந்து கொள்ள அனுமதி மறுக்கப்படுவது விசித்திரத்திலும் விசித்திரமாகும்.
தனது நாட்டில் கட்டிக் காக்கும் கலாச்சாரம்(?!) பறிபட்டுப் போய் விடுமோ என்ற கவலையில் எழும் இஸ்லாமோஃபோபியாவின் தாக்கம் ஃபிரான்ஸின் இந்த இரட்டை நிலையில் நன்கு தெளிவாகிறது.
நன்றி – அபூ ஸாலிஹா