இஸ்ரேலின் முடிவு நெருங்குகிறது – ஹஸன் நஸ்ரல்லாஹ்!

{mosimage}பெய்ரூட்: "ஷஹீதாக்கப்பட்ட இமாத் முக்னியாவின் மரணம் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்களின் வெற்றிக்கான அறிகுறி" என ஹிஸ்புல்லா தலைவர் ஷேக் ஹஸன் நஸ்ரல்லாஹ் கூறினார். "இஸ்ரேலின் முடிவு நெருங்குகின்றது" என்றும் "ஷஹீதாக்கப்பட்ட ஷேக் ரஜீப் மற்றும் ஸயீத் அப்பாஸ் மூஸாவியின் மரணத்திலிருந்து அவர்கள் பாடம் கற்றுக் கொள்ளவில்லை" என்றும் கூறினார். சிரியாவில் கடந்த செவ்வாய் அன்று கார் வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்ட ஹிஸ்புல்லாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான இமாத் முக்னியாவின் நல்லடக்கத்தில் கலந்து கொண்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் முன்னிலையில் நஸ்ரல்லாஹ் பேசும் பொழுது இவ்வாறு கூறினார்.

"நம்பிக்கைக் கொண்ட விசுவாசிகளின் கூட்டத்தில் சில ஆண்கள் உள்ளனர். எந்த விஷயத்தில் அல்லாஹ்விடம் அவர்கள் உடன்படிக்கைச் செய்துக் கொண்டார்களோ அதனை அவர்கள் உண்மைப்படுத்தினர். அவர்களில் சிலர் தங்களின் உயிரைக் கொடுத்து அந்த வாக்குறுதியை நிறைவேற்றினர். இன்னும் சிலர் அதற்காகக் காத்திருக்கின்றனர். அவர்கள் தங்களின் வாக்குறுதியில் எந்த ஒரு மாற்றமும் இதுவரை ஏற்படுத்தவில்லை. இது அல்லாஹ்வின் வசனமாகும். அல்ஹாஜ் ரிழ்வான்(முக்னியா) தன் வாக்குறுதியை நிறைவேற்றி ஷஹீதாகியுள்ளார்" என நஸ்ரல்லாஹ் கூறினார்.

"ஹிஸ்புல்லாவுடன் ஒரு திறந்த யுத்தத்தைத் தான் இஸ்ரேல் எதிர்பார்க்கிறது எனில் அதற்கும் நாங்கள் தயார். அவர்கள் ஷேக் ஹர்பினை முதலில் கொலை செய்தனர். அதற்குப் பிறகு போராட்டம் வலுக்கவும் அதன் காரணமாக இஸ்ரேலிய ஆக்ரமிப்புப் படை லெபனானின் எல்லைக்குப் பின்வாங்கி ஓட வேண்டிய நிலைக்கும் ஆளாகினர். பின்னர் அவர்கள் மூஸாவியைக் கொலை செய்தனர். அதற்குப் பகரமாக நடந்தக் கடுமையான எதிர்தாக்குதலின் காரணமாக நிலைநிற்க முடியாமல் அவமானத்துடன் லெபனானில் இருந்து இஸ்ரேலியர் வெளியேற வேண்டிய நிலை வந்தது. இமாதைக் கொலை செய்து போராட்டங்களை அழித்தொழித்து விடலாம் என இஸ்ரேல் கருதுகின்றது.

அதிகத் தாமதமின்றித் தங்களுக்குத் தவறு நிகழ்ந்ததை அவர்கள் உணர்வர். இமாத் சிந்திய குருதி கொண்டு இஸ்ரேலின் முடிவிற்கான சரித்திரத்தை நாங்கள் எழுதத் துவங்குவோம். ஹர்ப் மற்றும் மூஸவியின் குருதி லெபனானில் இருந்து அவர்களைத் துடைத்தெறிந்தது எனில் இமாதின் குருதி இப்புவியில் இருந்தே அவர்களைத் துடைத்தெறியும்" என நஸ்ரல்லாஹ் ஆவேசத்துடன் முழங்கினார்.

"உணர்ச்சிப் பெருக்கால் அவசரப்பட்டி இவ்வாறுத் தாம் கூறவில்லை" என்றும் "இஸ்ரேலை உருவாக்கிய பென் குரியோனே இவ்வாறு குறிப்பெழுதி வைத்துள்ளார்" என்றும் நஸ்ரல்லாஹ் கூறினார்.

"வேறெவரையும் விட இஸ்ரேலின் சக்தியையும் அதன் இலட்சியத்தையும் மிக நன்றாக அறிந்திருந்தக் குரியோன், முதல் தோல்விக்குப் பின் இஸ்ரேலின் அழிவு ஆரம்பிக்கும் எனக் கூறுகிறார். கடந்த 2006 ஜூலை மாதம்
ஹிஸ்புல்லாவுடன் நடத்திய 34 நாட்கள் நீண்டக் கடினமான யுத்தத்தில் பலத்த அடியுடன் தோற்று பின்வாங்கியதே இஸ்ரேலின் ஆரம்பத் தோல்வியும் அழிவின் ஆரம்பமும் ஆகும்" எனவும் நஸ்ரல்லாஹ் உறுதியுடன் கூறினார்.

ஷஹீத் இமாதின் மரணத்திலிருந்து தம் குறிக்கோளை வலுப்படுத்திக்கொண்டு அவர்தம் சகோதரர்கள் இப்போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வர் எனக்கூறிய நஸ்ரல்லாஹ், கடந்த காலங்களில் தான் கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றியிருப்பதாகவும் அதே போன்றுத் தற்பொழுது கூறும் இக்காரியத்தையும் தாமதிக்காமல் நிறைவேற்றுவதாகவும் தெளிவுபடுத்தினார்.

இதற்கிடையில் இமாத் முக்னியாவின் படுகொலையைக் குறித்து இரானும் சிரியாவும் இணைந்து விசாரணை நடத்தும் எனத் தெரிகிறது. இரான் வெளியுறவு அமைச்சர் மனுஷஹர் முத்தகி சிரியாவின் அதிகாரிகளுடன் நடத்தியப் பேச்சுவார்த்தைக்குப் பின் விசாரணைக்காக இரு நாடுகளும் இணைந்து ஒரு குழுவை நியமிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இமாத் முக்னியாவின் படுகொலைக்குப் பின்னால் செயல்பட்டவர்களைக் கண்டுபிடிக்கும் வரை விசாரணை தொடரும் என இரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.