இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்

சுனாமி வந்து பேரழிவுக்கு உள்ளான இந்தோனேஷியாவில் அதற்கடுத்து பற்பல நிலநடுக்கங்கள் வந்தது நினைவிருக்கலாம். நேற்று அதிகாலை உள்ளூர் நேரப்படி 5:54 மணிக்கு இந்தோனேஷியாவின் தலைநகர் ஜக்கார்த்தாவிற்கு அருகிலுள்ள பன்துல் எனப்படும் ஒரு நகருக்குத் தெற்கே 25 கிமீ உள்ள இடத்தை மையமாகக் கொண்டு ரிக்டர் அளவுகோலில் 6.3 மதிப்புக் கொண்ட ஒரு நிலநடுக்கம் தாக்கியது.

பன்துல் அமைந்துள்ள யோக்யகர்த்தா மாநிலத்திலும் அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் இதனால் பெருமளவு உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டன.

இந்த நில நடுக்கத்தால் 3000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.பல்லாயிரக்கணக்கானோர் வீடிழந்து அகதிகளாக்கப் பட்டுள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள் போதுமான வசதிகள் இல்லாததாலும், ஒரே நேரத்தில் பெருமளவு மக்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டதாலும் திணறிவருகின்றன. மீட்புப்பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப் பட்டு வருவதாக இந்தோனேஷிய அதிபர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 

இதற்கிடையே 'பட்ட காலிலேயே படும்' என்பதைப் போல மெராப்பி எனப்படும் ஓர் எரிமலை (நிலநடுக்கப் பகுதிக்கு 50 கிமீ தொலைவில் உள்ளது) அதிகமான சாம்பலையும், உயர் வெப்பநிலையிலிருக்கும் 'லாவா' பாறைக்குழம்பையும் கக்கி வருகிறது. இதனால்  மீட்புப் பணிகள் தடைபடுவதோடு, மேலும் உயிரிழப்பு ஏற்படலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

 

தகவல்: அபூஷைமா 
படம் நன்றி: ராய்ட்டர்ஸ், AFP செய்தி நிறுவனங்கள்