கடந்த 26.09.2012 முதல் 29.09.2012 வரை, கத்தர் நாட்டில் “கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி” ஒன்றினை, சத்தியமார்க்கம்.காம் ஏற்பாடு செய்திருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். சமூகநீதி அறக்கட்டளையின் நிறுவனரும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் தலைவருமான சகோதரர் CMN சலீம் அவர்களின் கத்தர் வருகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமானோர் வருகை தந்திருந்தினர்.
மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற நிகழ்ச்சிகளில் முதல் நாள் 26.09.2012 புதன் கிழமை மாலை 8.30 முதல் 10.30 வரை கத்தர் அவ்காஃப் (FANAR) இஸ்லாமிய தமிழ் பிரிவின் தலைவரும், SLIC இலங்கை இஸ்லாமிய நிலையத்தின் தலைவருமான சகோதரர் ஜியாவுத்தீன் மதனீ – யின் தலைமையுரை மற்றும் சகோதரர் இமாதுத்தீன் உமரி-யின் அறிமுக உரைக்குப் பின், சகோதரர் CMN சலீமின் “கல்வியும், தமிழ் முஸ்லிம்களும்” என்ற தலைப்பிலான சிறப்புரை கத்தர் IQIC மற்றும் SLIC கேட்போர் கூடத்தில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றியோர், இஸ்லாமியக் கல்வி மற்றும் உலகக் கல்வி ஆகிய இரண்டும் ஒரு புள்ளியில் இணைந்த கல்விமுறையின் அவசியம் பற்றியும், தற்காலத்தில் உள்ள முஸ்லிம்கள் நிலை பற்றியும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆதாரங்களுடனும் பல்வேறு புள்ளி விபரங்களுடனும் பார்வையாளர்களுக்கு அழகான முறையில் எடுத்துரைத்தார்கள்.
முஸ்லிம் சமூகம் தற்போது சந்தித்து வரும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கான மூலக்காரணம் “இஸ்லாமிய வரலாற்றினை மறந்ததும், இஸ்லாமியக் கல்வியை கல்விக் கூடங்களை உதாசீனப் படுத்துவதும்” என்ற சிந்தனை பார்வையாளர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
“வெறுமனே பணத்தை சம்பாதிக்கும் இயந்திரங்களாக, பொருளியல் ஆதாயங்களை மட்டுமே இலக்காகக் கொண்ட கல்வி முறையே இன்று பரவலாக உள்ளது!” என்பதையும் “இத்தகைய கல்விமுறையை இஸ்லாம் அனுமதிக்க வில்லை!” என சகோதரர் CMN சலீம் சுட்டிக் காட்டினார்.
–oOo–
மறுநாள் நிகழ்ச்சி 27.09.2012 வியாழக்கிழமை அன்று IQIC இந்திய கத்தர் இஸ்லாமிய பேரவையின் மாதந்திர சொற்பொழிவு நிகழ்ச்சியில் சகோதரர் முஹம்மத் மீரான் அவர்கள் தலைமையுரை மற்றும் சகோதரர் ஷர்புத்தீன் உமரி அவர்களின் முன்னுரையுடன் சகோதரர் CMN சலீம் அவர்கள் “முஸ்லிம்களின் கல்வி: பிரச்னைகளும் – தீர்வுகளும்” எனும் தலைப்பில் உரையாற்றினார். உரையினைக் கீழே காணலாம்.
{youtube}XzaynHmpTXE{/youtube}
உரையின் இறுதியில் சகோதரர் CMN சலீம், தமது சமூக நீதி அறக்கட்டளை பற்றியும், தமிழ்நாடு முஸ்லிம் கல்வி அறக் கட்டளையின் சார்பாக துவக்கப் பட்ட அன்னை கதீஜா அறிவியல் கல்லூரி-யை பற்றியும் விளக்கினார். இதில் நூற்றி ஐம்பது உறுப்பினர்களின் கூட்டு முயற்சியுடன் இஸ்லாமியக் கல்வியை மாணவர்களுக்கு போதிக்கும் பெண் கல்வியாளர்களை உருவாக்கும் தங்கள் நோக்கத்தையும் செயல் திட்டத்தையும் விளக்கினார்.
சமுதாயத்தில் ஒழுக்கம் பேணப்படவும், ஒழுக்கக் கேடுகளும் அது சார்ந்த அனைத்து பாலியல் குற்றங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண இத்தகைய கூட்டு முயற்சிகள் காலத்தின் கட்டாயம் என்பதை விளக்கினார். தனி நபராக தனித்து நின்று சிலர் இவ்வகை கல்லூரிகள் நிறுவ முயன்றாலும், கூட்டு முயற்சி இல்லையேல் இவை சாத்தியமில்லை எனும் அடிப்படையில் இதை அனைவருக்கும் வலியுறுத்தி இது போன்ற செயல்கள் எவர் செய்தாலும் அவற்றில் எனறென்றும் தமது ஒத்துழைப்பு உண்டு என்று கூறினார். மேலும் இந்த கல்லூரிக்கு ஆதரவும் கோரினார்.
இந்த இரு நாட்கள் நிகழ்ச்சியில் முழு ஒத்துழைப்பும் ஆதரவும் நல்கிய IQIC (இந்திய கத்தர் இஸ்லாமிய பேரவை), SLIC (இலங்கை இஸ்லாமிய நிலையம்) , KWAQ (காயல் பேரவை) மற்றும் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் சத்தியமார்க்கம்.காம் தமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
–oOo–
கடந்த 28.09.2012 அன்று (வெள்ளிக்கிழமை) மூன்றாவது நாள் சிறப்பு அமர்வுகள் நடைபெற்றன. முந்தைய இரு நாட்களில் தமது பெயர்களை முன்பதிவு செய்தவர்களுக்கான இந்த அமர்வுகள், கத்தரில் உள்ள Entelyst அலுவலகத்தில் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றன. இதில், துவங்கப்படவுள்ள அன்னை கதீஜா கல்லூரி தொடர்புடைய விபரப் படங்கள், கட்டுமான பணியின் இறுதி நிலை பணிகள், அடுத்தக் கல்வியாண்டு 2013 -14 முதல் இதன் துவக்கம் பற்றிய விபரங்களுடன் நடைபெற்றன. இத் திட்டத்தில் ஏற்கனவே பங்கு பெற்றுள்ளவர்களின் பங்குத் தொகை, எஞ்சியுள்ள பங்குகள் மற்றும் அதற்குரிய பதிவு வழிமுறைகளையும் CMN சலீம் விளக்கினார்.
கல்லூரி பற்றிய தொடர்புக்கு:
சகோதரர் CMN சலீம் தலைவர், சமூக நீதி அறக்கட்டளை, 129/64 – தம்பு செட்டித் தெரு, மண்ணடி, சென்னை -1 தொலைபேசி : +91-44-25225784 அலைபேசி : +91-9382155780 மின்னஞ்சல் : cmnsaleem@yahoo.co.in |
நிகழ்ச்சியின் இறுதியில் நன்றியுரையாற்றிய சத்தியமார்க்கம் தளத்தின் உறுப்பினரான சகோதரர் முஷ்தாக், “முஸ்லிம்களின் கல்வி மற்றும் ஒழுக்க மேம்பாட்டுக்காக “இஸ்லாமிய அறிவுடன் கூடிய கல்வி”-யைப் போதிக்கும் கல்விக் கூடங்கள் ஆயிரக்கணக்கில் உருவாக வேண்டும். முஸ்லிம்கள் அனைவரும் அதற்கு முயற்சி செய்ய வேண்டும். அனைவராலும் ஆளுக்கொரு கல்விநிலையம் உருவாக்குவது சாத்தியம் இல்லை என்றாலும் இது போன்ற முயற்சிக்கு துணை நின்று ஆதரவு அளிக்க வேண்டும்!” எனும் சத்தியமார்க்கம்.காமின் நிலைபாட்டினை முன்வைத்து அனைவரிடம் இதற்கு ஆதரவு நல்க உறுதி எடுக்க கேட்டுக் கொண்டபின், நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
இத்தூய பணியில் தம்மை அர்ப்பணித்துள்ள சகோதர் CMN சலீம் அவர்களுக்கு சத்தியமார்க்கம்.காம் தனது வாழ்த்துக்களையும், பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறது.