காலித் பின் அல்வலீத் (ரலி) – அத்தியாயம் 1

Share this:

காலித் பின் அல்வலீத் (ரலி)

அரபுலகின் தலைசிறந்த வீரர்களுள் ஒருவரும் இஸ்லாமியப் படைத் தலைவர்களுள் மிகச் சிறந்தவருமான நபித் தோழர் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களைப் பற்றி மலையாள மொழியில் வெளியான வரலாற்று நூலைத் தமிழில் தழுவி, சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்!

 

அத்தியாயம் 1: குடும்பச் சிறப்பு!

மக்கா நகரத்தின் வெளிப்பகுதி. ஒரு மாலையின் தொடக்கப் பொழுதில் குறைஷிச் சிறுவர்கள் வழக்கம்போல் விளையாடக் களமிறங்கியிருக்கின்றனர். அனைவருமே திறமையான சிறுவர்கள். திறமையானவர்களின் குழந்தைகள். கத்தாபின் மகன் உமர், அபூஜஹ்லின் மகன் இக்ரிமா, தல்ஹாவின் மகன் உஸ்மான், வலீதின் மகன் காலித்.

குறைஷிகளுள் பிரபல குடும்பமான மக்ஸூம், காலித் பிறந்த  கோத்திரமாகும்.காலிதின் தந்தை அல்வலீத், கோத்திரத்தின் தலைவர். வலீதுக்கு “அல் வாஹித்” என்றொரு செல்லப்பெயரும் உண்டு. ஆண்டுக்கொரு முறை குறைஷிக் கோத்திரங்கள் அனைத்தும் இணைந்து பங்கிட்டு, கஅபாவிற்குப் பட்டுத் துணி வாங்கிப் போர்த்தினால், அடுத்த ஆண்டு வலீத் தம் சொந்தச் செலவில் பட்டுத் துணி வாங்கிக் கஅபாவை மூடுவார். அதனால் அவர்களுக்கு இடையில் அவர் தனித்தன்மை கொண்டவர் (அல்-வாஹித்) ஆனார்.

வலீத், மக்காவில் மிகப் பிரபலமான இலக்கியச் செல்வராக விளங்கினார். அவருக்குச் சமமான இலக்கிய நயமும் அறிவும் உடைய எவரும் அன்றைய காலத்தில் மக்காவில் இருந்திருக்கவில்லை. அதனாலேயே குர்ஆனின் இலக்கிய நடையிலான நயம் அவரை வசீகரித்து வீழ்த்தியது. நன்கு அறியப்பட்ட இஸ்லாமிய விரோதியும் குறைஷிப் பிரமுகர்களுள் பிரபலமானவருமாக இருந்த போதிலும்கூட, ஒரு நிமிடம் அனைத்தையும் மறந்து குர்ஆனின் இலக்கிய நயத்தில் வலீத் மயங்கிப் போனார். “இது மனிதப் படைப்பில்லை; மனிதனால் இதனைப் போன்ற ஒன்றைப் படைப்பது சாத்தியமுமில்லை” என அவர் அறியாமலே உரத்த குரலில் கூவினார். குறைஷித் தலைவர்கள் கதிகலங்கி விட்டனர். என்ன?  வலீதும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டாரா? – அவசரகதியிலான அபூஜஹ்லின் தலையீடு ஏற்பட்டிருக்காவிடின், மக்ஸூம் குடும்பத்தின் வரலாறு வேறுவகையாக எழுதப்பட்டிருக்கும்.

வலீத் மட்டுமா என்ன?  மக்ஸூமிகளின் தலைவர் முகீராவின் பிள்ளைகளுள் சொத்தை என்று கூறும் விதத்தில் எவருமே இருக்கவில்லை.

ஹிஷாம்: “ஃபிஜார் போரின் தலைவன்” என்ற பெயரில் ஹிஷாம் அறியப்படுகிறார். இஸ்லாமிய எழுச்சிக்குமுன் நடந்த போர் அது. ஹிஷாம் இறந்த வேளையில், எவ்வித அழைப்பும் இன்றித் தாமாகவே அரபிகள் தங்கள் கடை-வியாபார நிறுவனங்களை அடைத்து பந்த் கடைபிடித்தனர். அவ்வளவு ஏன், “ஹிஷாமின் மரணம் முதல்” என்ற சொல்லை, காலத்தை நிர்ணயிக்கும் அடிப்படையாகவே அரபிகள் கடைபிடிக்க ஆரம்பித்துவிடும் அளவுக்கு அவர் அரபிகளுக்கு இடையில் செல்வாக்குள்ளவராகத் திகழ்ந்தார்.

அல்ஃபாக்கிஹ்: காலிதின் பெரிய தந்தையான இவர், அரபிகளுக்கிடையில் “அக்ரமுல் அரப்” என்ற புனைப் பெயரில் அழைக்கப்பட்டிருந்தார். சொந்தமாக ஃபாக்கிஹ் நடத்தியிருந்த சத்திரத்தில் ஒருநாளாவது உணவு அருந்தாத அரபியைக் காண்பது அபூர்வம். சத்திரத்தின் வாசல் எப்போதும் வழிப்போக்கர்களுக்காகத் திறந்து கிடந்தது. சத்திரத்தில் தங்குபவர்களிடமிருந்து பிரதிபலனாக அவர் எதையுமே பெற்றுக் கொண்டதில்லை.

அபூஉமைய்யா: காலிதின் மற்றொரு பெரிய தந்தையான அபூஉமைய்யா, “ஸாது ரிகாப்” என்ற புனைப் பெயரில் அறியப்பட்டிருந்தார். அரபிகள் கூட்டங் கூட்டமாக ஷாம்(சிரியா), யமன் போன்ற தூர நாடுகளுக்குப் பிரயாணம் புறப்படும் வேளைகளில் அவர்களின் பிரயாணத்திற்குத் தேவையான உணவு முதலான அனைத்து வசதிகளையும் தயாராக்கிக் கொடுக்கும் பாரிய பணியினைச் சிறப்பாக அவர் செய்திருந்ததால், “பிரயாணிகளின் அன்னத்தலைவர்” என்ற வெகுமதி அரபிகளுக்கிடையில் முகீராவின் இந்த மகனுக்குக் கிடைத்திருந்தது. வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து கஅபா புனர் நிர்மாணம் செய்யப்பட்ட வேளையில், ‘ஹஜருல் அஸ்வத்’ எனப்படும் கறுப்புக்கல்லை அதற்குரிய இடத்தில் எடுத்து வைப்பவர் யார்? என்ற பிரச்சினை அரபிகளுக்கு இடையில் எழுந்தபோது, “கறுப்புக்கல்லை எடுத்து வைப்பவர் யார் என்பதை, முதன் முதலில் மஸ்ஜிதுல் ஹராமில் நுழைபவர் தீர்மானிக்கட்டும்” என்ற ஆலோசனையை வழங்கி, அதன்படி இன்று ஹஜருல் அஸ்வத் இருக்கும் இடத்தில் அதனை நபி(ஸல்) அவர்கள் எடுத்து வைப்பதற்குக் காரணமானவர் இந்த அபூஉமைய்யாவே.

இமாரா: மக்ஸூம் குடும்பத்தின் மற்றொரு பிரபலமான நபர், காலிதின் சகோதரரான இமாராவாகும். அரபிகளுக்கிடையிலேயே மிகவும் அழகானவரும் அந்தக் காரணத்தினாலேயே அரபிப் பெண்களுக்கிடையில் அதிகமாகப் பேசப்பட்டவருமாக இவர் விளங்கினார். அளவுக்கதிகமான மதுபானப் பிரியர் என்ற ஒரு கெட்டபெயரை மாற்றி வைத்தால், இவரை எந்த ஒரு காரியத்திலும் வெல்லும் ஒருவர் குறைஷிகளுக்கிடையில் இருந்திருக்கவில்லை. நபி(ஸல்) அவர்கள் இஸ்லாமியப் பிரச்சாரத்தை ஆரம்பித்து, குறைஷிகள் அதற்கு எதிராகக் கொந்தளித்த வேளையில், நபி(ஸல்) அவர்களின் பெரிய தந்தை அபூதாலிப் அவர்களைக் குரைஷிகள் அணுகி, நபி(ஸல்) அவர்களைத் தங்களுக்கு விட்டுத் தரவும் அதற்குப் பகரமாக குறைஷிகளுள் மிகவும் அழகானவரும் திறமையானவருமான இளைஞரை ஏற்றுக் கொள்ளவும் கோரிக்கை விடுத்தனரே – காலிதின் சகோதரரான இந்த இமாராவே நபி(ஸல்) அவர்களுக்குப் பகரமாக குறைஷிகள் வழங்க முன்மொழியப்பட்டவராவார்.

வலீத்: காலிதின் மற்றொரு சகோதரர், பத்ருப் போரில் முஸ்லிம்களால் சிறைபிடிக்கப்பட்ட வலீத் பின் வலீதாவார். மக்ஸூம் குடும்பத்திலுள்ள குபேரனான இவரை சாதாரண ஒரு தொகைக்குப் பகரமாக விடுவிக்க முஸ்லிம்கள் தயாராகவில்லை. வலீதை விடுவிக்க, அவர்கள் நான்காயிரம் திர்ஹம் ஈட்டுத்தொகையாகக் கேட்டனர். அத்தோடு, அவரின் தந்தை வலீதின் பளபளக்கும் வாளும் மேலங்கியும் கொடுக்கப்பட்டாலே வலீதை விடுவிக்க முடியும் என முஸ்லிம்கள் நிபந்தனை விதித்தனர். முஸ்லிம்கள் கேட்ட அனைத்தையும் வழங்கி விடுதலையான வலீத், குறைஷிகள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் தாம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக உரக்கக் கூவி அறிவித்தார். “எனில், இதனை முன்னரே கூறியிருக்கலாமே?, மிகப் பெரிய ஒரு தொகையும் பொருட்களும் ஈட்டுத் தொகையாக நல்கி முஸ்லிம்களிடமிருந்து விடுவிக்கப்பட்டப் பின்னர் ஏன் இவ்வாறு செய்தீர்?” எனக் கேள்வி கேட்டனர் ஈட்டுத் தொகையை இழந்தவர்கள்.

வலீத் பதிலளிக்க சற்றும் தாமதிக்கவில்லை!

“சிறை பிடிக்கப்பட்டிருந்ததன் பாரத்தையும் மிகப் பெரிய பொருள் நஷ்டத்தையும் நினைத்து பயந்தே நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக நீங்கள் கூறுவதற்கு உங்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே அவ்வாறு செய்தேன்”!

oOo

நகர வீதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் அனைவரும் திடீரென எழுந்த சப்தம் வந்தத் திக்கை நோக்கி ஓடினர். அங்கு இருவருக்கிடையில் கடுமையான மல்யுத்தம் நடைபெறுகிறது. சமபலம் வாய்ந்த இருவருக்கிடையிலான கடுமையான போராட்டம். இருவரில் யாருக்கும் விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை. இருவருமே ஒரே இடத்தில் விளையாடி வளர்ந்தவர்களும் உறவினர்களுமாவர். இருவருக்கிடையில் ஒருவருக்கொருவர் தெரியாத மல்யுத்த வித்தைகள் எதுவுமில்லை. இருவரின் வயதும் பதினான்கு அல்லது பதினைந்துக்கு மிகாது.

இறுதியில் அது நிகழ்ந்தது!. மோதிக் கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவர் கால் தடுமாறிக் கீழே விழுந்தார். எதிராளியின் முதுகில் மண் படியச் செய்தவர் வலீதின் மகன் காலித். இறுதிவரை எவ்வித சமரசத்துக்கும் இடமில்லாமல் கடுமையான போராட்டம் நடத்தியவர் கத்தாபின் மகன் உமர்!

வருவார், இன்ஷா அல்லாஹ்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.