அல்-இத்ரீஸி

Share this:

சென்ற மாதம் வழக்கம்போல ஒரு இ-மெயில் அழைப்பு. மற்றுமொரு கம்பெனியின் மற்றுமொரு மென்பொருளைப் பற்றிய விளக்கப் பொதுக்கூட்டம் சிற்றுண்டி மற்றும் பேருண்டியுடன் இன்ன தேதியில் இன்ன இடத்தில் நடக்கப் போவதாகவும், என்னுடைய வருகை மிக மிக போற்றத்தக்கதாக அமையும் என்று கண்டிருந்ததாலும், வீட்டில் கிடைக்கும் மிலிட்டரி கட்டுப்பாடு உணவிலிருந்து ஒரு நாளேனும் கிடைக்கும்  விடுதலையை விரும்பியும், இன்னும் சொல்லவியலாத சில காரணங்களாலும் விளக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கெடுத்தேன்.

கோட் சூட் போட்ட அமெரிக்கத் துரைகள் படம் காட்ட ஆரம்பித்தார்கள். சிறந்த அமெரிக்கப் பல்கலைக் கழகங்களுள் ஒன்றான கிளார்க் யூனிவர்சிட்டியின் மென்பொருள் சோதனைச் சாலையில் வடிவமைக்கப்பட்ட மென்பெருள்தான் விஷயம்.  பெயர் இத்ரீஸி. இது ஒரு புவியியல் தகவல் துறை (GIS – Geographic Information System Software)  சார்ந்த மென்பொருள். ஜி.ஐ.எஸ் பற்றியும் அதன் தனிச் சிறப்புகள் பற்றியும் எழுதி வாங்கிக் கட்டிக்கொள்ள விருப்பமில்லை. தெரிந்து ஆச்சரியத்தோடு பிரமித்தே ஆகவேண்டும் என்று அடம் பிடிப்பவர்கள் மட்டும் மேற்சொன்ன சுட்டியில் போய்ப் பார்த்துக்கொள்ளுங்கள்.

இங்குச் சொல்லவந்த விஷயம் இத்ரீஸியின் பெயர்க்காரணம் பற்றி. நான் (1982இல்) ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போது ‘உலக நாகரிக வளர்ச்சிக்கு இஸ்லாம் செய்துள்ள நற்பணிகள்’ என்று ஒரு வரலாற்றுப் பாடம் உண்டு. (இப்போதும் விட்டு வைத்திருக்கிறார்களா எனத் தெரியவில்லை). அவிசென்னா (இப்னு சீனா)அல்குவரிஸ்மி, அல்-இத்ரீஸி முதலானோர்கள் பற்றிக் கோடிட்டுக் காட்டப்பட்டிருக்கும். அதே அபூ அப்துல்லாஹ் முஹம்மத் அல் இத்ரீஸி என்ற  மேதையின்  பெயர்தான் இந்த மென்பொருள் தொகுப்பிற்குச் சூட்டப்பட்டிருக்கிறது என்று அறிந்ததும் ஒரு பரவசம்!

அல்-இத்ரீஸியைப் பற்றியும் அன்னாரது மேதமையைப் பற்றியும் தெரிந்தால் பிரமித்துப் போவீர்கள்! விஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒருசேர ஒளிவீசிக் கொண்டிருந்த அல்-அந்தலுஸைப் (இன்றைய ஸ்பெயின்) பகுதியாகக் கொண்ட அல்மொராவித் தேசத்தில் கி.பி 1110இல் பிறந்த அல்-இத்ரீஸி,  அன்றைய ‘இருண்ட கண்டமான’ ஐரோப்பாவிற்குக் கல்வி கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த, கொர்தோவாவில் கல்வி கற்று, அன்றைய நாளின் மிகச் சிறந்த புவியியலாளராகத் திகழ்ந்தார்.

அறிவுத்தாகத்தை தணிப்பதற்காகத் தமது 16ஆவது வயதில்  ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மத்திய தரைக்கடல் நாடுகள் மற்றும்  மத்திய ஆசிய நாடுகளுக்குப் பயணம் செய்து பல பாகங்களில் கிடைத்த புவியியல் தகவல்களைத் திரட்டினார். இத்ரீஸுக்கு முன்பிருந்த முஸ்லிம் அறிஞர்கள் பூமியின் பரப்பைத் துல்லியமாக கணக்கிட்டிருந்தனர். சிறியதும் பெரியதுமாக அன்றைய நாடுகளின் வரைபடங்கள் (MAPS) கிடைத்தன. திரட்டிய எல்லாத் தகவல்களையும் ஒன்று சேர்த்து, அன்று அறியப்பட்ட நிலப் பரப்புகளின் தகவல் களஞ்சியத்தை ‘Nuzhat al-Mushtaq fi Ikhtiraq al-Afaq,'(The Delight of Him Who Desires to Journey Through The Climates) முதல் முறையாக உருவாக்கினார்.

இத்ரீஸியின் செல்வாக்கு அன்றைய அறிவுலகில் பற்றிக் கொண்டது. மாலுமிகளுக்கும் ராணுவத் தளபதிகளுக்கும் இத்ரீஸியின் அறிவு இன்றியமையாததாகியது.

ஸிசிலி அரசன்  (இன்றைய இத்தாலி)  இரண்டாவது ரோஜரின் (King Roger II of Sicily) அரசவையிலிருந்து இத்ரீஸிக்கு அழைப்பு. ரோஜருக்கு அரபியும் கிரீக்கும்  சரளமாகப் பேசத் தெரியும். பொன்னும் பணமும் கொடுத்து மொத்த  உலகத்தின் வரைபடத்தை அந்தந்த நாட்டுத் தகவல்களுடன் (The beginning of Modern GIS) வரைந்து தரும்படி கேட்டுக் கொண்டார். பரவசத்துடன் ஒப்புக் கொண்டு தனது குழுவுடன் பயணித்து, தகவல்களைத் திரட்டி பதினெட்டு வருட உழைப்பிற்குப் பின் 1154ஆம் ஆண்டு அன்றைய உலகின் மிகத் துல்லியமான  ‘டாபுலா ரொஜாரியான’  Tabula Rogeriana என்ற உலக வரைபடத்தை சுமார் 6 அடி விட்டமும், 450 பவுண்ட் கனமும் உள்ள வெள்ளித் தட்டில் பொறித்து அரசவையில் சமர்ப்பித்தார் இத்ரீஸி. உலகின் முதலாவது தகவல்களுடன் கூடிய துல்லியமான மேப்.

இந்தப் படைப்பு அறிவியல் வரலாற்றில் ஒரு சகாப்தம் என்று வர்ணிக்கப்படுகிறது. எந்த அளவுக்குத் துல்லியம் என்றால், இத்ரீஸியின் மேப்பில் எகிப்தின் நைல் நதியின் குறிப்பு, சுமார் எழுநூறு ஆண்டுகள் கழித்து முன்னேறிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் கணக்கிடப்பட்ட குறிப்புடன் பெரிய வித்தியாசமின்றி அச்சு அசலாகப் பொருந்திப் போனதுதான்! இத்ரீஸியின் இந்த மேப்தான் முதன் முதலாக ‘கிரிட்’ (grid) எனப்படும் குறுக்கும் நெடுக்குமான வரைகள் போடப்பட்டு, குறிப்பிட்ட காரணிகளின் அடிப்படையில் குறுகிய நிலப்பரப்புகளாக அடையாளப்படுத்தப்பட்ட மேப். தற்கால நவீன மேப்களின் முன்னோடி.

இன்றும் உலகின் பல நிலப் பரப்புக்கள் இத்ரீஸியின் மேப்புடன் ஒத்துப்போகின்றன. சுமார் ஐநூறு ஆண்டுகளாக, அறிஞர்கள் இந்த மேப்பை எந்தவிதமான மாறுதலுமின்றி எல்லாத் துறைகளிலும் பின்பற்றினார்கள்! இத்ரீஸியின் இந்த அறிவை முழுமையாகப்  பயன்படுத்தும் நிலைக்கு வர  ஐரோப்பாவிற்கு சில நூற்றாண்டுகள் தேவைப்பட்டாலும், அமெரிக்காவைக் ‘கண்டுபிடிக்க’ கிளம்பிய கிரிஸ்டோபர் கொலொம்பஸ் இத்ரீஸியின் மேப்புடன்தான் சென்றார்.

Tabula Rogeriana – இத்ரீஸியின் உலக வரைபடம். தற்கால உலக வரைபடத்துடன் எப்படி ஒத்துப் போகிறது பாருங்கள்!. அமெரிக்கா அன்று ‘கண்டுபிடிக்கப்’ படவில்லை

இத்ரீஸியின் மேப் ஒரு சாதாரண வரைபடம் மட்டுமில்லை. நவீன கால ஜி.ஐ.எஸ்ஸிற்கு முன்னோடியான ஒரு தகவல் களஞ்சியம். ஒவ்வொரு நாட்டின் மீதும் அதன் தட்பவெப்ப நிலை, பயிர்கள், நீர் நிலைகள், சூரிய சந்திர நட்சத்திரத் தோற்றங்கள் முதலான தகவல்களும் அரபியில் எழுதப்பட்டிருந்தன.

எந்த விதமான நவீன உபகரணங்களும் இல்லாத காலத்தில் இவ்வளவு துல்லியமான தகவல்களுடன் வரையப்பட்ட மேப்பைப் பற்றி ஆச்சரியப்படாமல் தற்காலப் புவியியல் துறையால் இருக்க இயலவில்லை. அதனால்தான் இந்த மென்பொருளுக்கு இத்ரீஸியின் பெயர் வைத்து ஒரு சலாம் செய்திருக்கிறார்கள் போலும்.

ஆக்கம் : அபூபிலால்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.