டாலர் தேசத்திலுள்ள நியூயார்க் நகரிலிருந்து வெளியாகும் ‘The Nation’ ஒரு வார இதழ். 1865ஆம் ஆண்டு துவங்கி இன்றும் முதுமை தட்டாமல் அச்சாகும் பத்திரிகை. ஜெரிமி ஸ்காஹில் (Jeremy Scahill) அதில் புலனாய்வுச் செய்தியாளர்.
மனிதர் வேலையில் படுசுட்டி. அயல்நாட்டுச் செய்தித் தொகுப்பாளராகப் பணிபுரிந்த போது, 1998-இல் அவருக்கு George Polk Award எனும் விருது வழங்கப்பட்டது. அது ஊடகத் துறையில் சிறப்பாகச் சாதிப்பவர்களைத் தேர்ந்தெடுத்து வருடா வருடம் வழங்கப்படும் விருது.
ஊடகத் துறையை வெறும் தொழில் எனக் கருதாமல் சமூகக் கடமை எனக் கருதும் அப்பாவிகள் சிலரும் புவியில் தப்பித்தவறி வாழ்ந்து வருகிறார்கள். சார்பற்ற கருத்துகளுடன் பணியில் ஈடுபடும்போது அவர்களுக்குச் சில நிர்வாண உண்மைகளைக் காண வாய்க்கிறது. ஆழப்பாய்ந்து, நோண்ட ஆரம்பித்து, விஷயங்களின் மெய்யுருவம் அறிய வந்ததும் அதிர்ந்துபோகிறார்கள். அதைச் சிலருக்குப் புத்தகமாய் எழுத முடிகிறது. வேறு சிலர் ஒளி ஆவணமே தயாரித்து அழுத்தந் திருத்தமாய் மக்களுக்கு வெளிச்சமிடுகிறார்கள். ‘ஜெரிமிக்கு என்னாச்சு?’
ஈராக் போரின்போது ‘Blackwater: The World’s Most Powerful Mercenary Army’ என்ற பெயரில் கூலிப்படை நிறுவனத்தைப் பற்றிய புத்தகம் எழுதி, அது ஹிட்டாகியது. அந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனம் தனிக்கட்டுரை சமாச்சாரம் என்பதால் இங்கு தவிர்ப்போம். குறிப்பு யாதெனில் ‘இந்தா வாங்கிக்கொள்’ என்று இரண்டாவது முறையாகவும் அந்தப் புத்தகத்திற்காக George Polk Award ஜெரிமி ஸ்காஹிலுக்கு அளிக்கப்பட்டது. வாங்கி அலமாரியில் வைத்துவிட்டுத் தம் வேலையைத் தொடர ஆரம்பித்தார் ஜெரிமி.
புலனாய்வுப் பத்திரிகையாளராகச் செயல்பட ஜெரிமி தேர்ந்தெடுத்தது யுத்தக் களங்களான ஆப்கானிஸ்தான், யமன், ஸோமாலியா, முன்னாள் யுகோஸ்லாவியா போன்றவை. அயல்நாட்டுப் பிரச்சினைகளை அலச ஆரம்பித்த அவரை, அதில் ஒளிந்திருந்த அரசியல், தம் தாய்த்திருநாட்டைத் திரும்பிப் பார்த்து உற்று நோக்க வைத்தது. பொம்மலாட்ட வித்தைபோல் உலக அரசியலில் எந்த முனையைத் தொட்டாலும் நூலின் மறுமுனை என்னவோ அமெரிக்காவில் போய்தான் முடிகிறது. களங்களில் கண்ட உண்மைகள் அவரது அடுத்த புத்தகமாக உருவானது. அதற்கு அவர் இட்ட பெயர், படு பாந்தம் – Dirty Wars – The World is a Battlefield.
அமெரிக்கா அந்நிய நாடுகளில் நிகழ்த்தும் யுத்தங்களைத் தாண்டி, களத்திற்குப் பின்னால் நிகழும் கள்ள யுத்தங்களைப் பற்றிய அப்பட்டத் தகவல்கள் அடங்கிய புத்தகம் இது. அந்த யுத்தங்கள் எவ்வளவு அசிங்கமானவை, அநீதியானவை, உள் நோக்கம் பொதிந்தவை என்பதை நறுக்கெனத் தெரிவிக்கும் தலைப்புதான் Dirty Wars. இம்முறை இவரது இந்த ஆக்கம் அதிகப்படியான விசேஷம். Dirty Wars வெறும் புத்தகமாக நின்றுவிடாமல் முழு நீளத் திரைப்படமாகவும் உருவாகியுள்ளது.
{youtube}i2YT0K2fb4E{/youtube}
ஜனவரி 2013, Sundance திரைப்பட விழாவில் முன்திரையிடப்பட்டு, சிறந்த ஒளிப்பதிவிற்கான விருது இப்படத்திற்கு…. ஜுன் 7 2013 அன்று நியூயார்க், லாஸ் ஏஞ்சலீஸ் நகரங்களின் திரையரங்குகளில் இப்படம் வெளியாகியுள்ளது. மக்களின் கையைப் பிடித்து அமெரிக்காவின் கள்ள யுத்தங்களுக்கு உள்ளே பரபரவென்று இழுத்துச் செல்கிறார் ஜெரிமி என்கிறது விமர்சனம்.
இராணுவ உடை அணியாத, இராணுவத்திற்குப் பணியாற்றாத தனிப்படை ஒன்றை கெட்ட பயிற்சி அளித்து உருவாக்கி வைத்துள்ளது அமெரிக்கா. இந்தப் படையினர் அமெரிக்காவின் உள்ளே, வெளியே, அமெரிக்காவிற்கு உரிமை மறுக்கப்பட்ட பகுதிகள் என்று எங்கெங்கும் எல்லை தாண்டித் தீவிரமாகச் செயல்படத் தக்கவர்கள். உள்ளே என்றாலாவது பரவாயில்லை. அமெரிக்காவுக்கு வெளியே என்றால் அந்தந்த நிலத்திற்கும் அவரவர்க்குரிய சட்ட திட்டம் இருக்குமில்லையா? அதெல்லாம் துச்சம். சொல்லப் போனால் அது ஒரு விஷயம் என்றுகூட அமெரிக்கா பெரிதாக அலட்டிக் கொள்வதே இல்லை. அமெரிக்க அதிபர் யாரையெல்லாம் எதிரிகளாகக் கருதுகிறாரோ அவர்களைப் பற்றிய தகவல்கள் இந்தத் தனிப்படைக்கு அளிக்கப்படும். யாரை வேட்டையாட வேண்டும், கைப்பற்ற வேண்டும், செல்லமாகத் தலையில் தட்டிக் கொல்ல வேண்டும் என்று குறிப்புகள் தெரிவிக்கும். அவ்வளவே. அதைச் சாதிக்க என்னென்ன செய்யவேண்டுமோ அத்தனையையும் அந்தப் படை கவனித்துக் கொள்ளும். ஜேம்ஸ்பாண்டுக்கு Licensed to Kill என்று அடைமொழி அளித்திருப்பார்களே அதைப்போல்.
நபர்களைக் குறிவைத்துப் படுகொலை புரிவது, ஆள் கடத்தல் போன்ற சில்லறைச் சமாச்சாரங்கள் துவங்கி, Drone எனப்படும் ஆளில்லா தானியங்கி விமானம் மூலம் கொலை புரிவது, ஏவுகணைத் தாக்குதல், Ghost Militia எனப்படும் கண்மறைவுப் போராளிகள் என்று எல்லாமே ரகசியச் செயல்கள். புஷ் நிர்வாகத்தின்போது செயலுக்கு வந்த கள்ளப் போர்களின் இந்த ரகசியப் படையை, ஒபாமா நன்றாக விரிவுபடுத்தி அதன் செயல்பாடுகளுக்கான புதிய திட்டத்தையும் அங்கீகாரத்தையும் அளித்து, ‘பூந்து வெளாடுங்க கண்ணுகளா’ என்று சொல்லிவிட்டார்.
இத்தகைய பணிகளுக்கு ஆளெடுக்க ‘உதவி தேவை’ என்றெல்லாம் அமெரிக்கா விளம்பரப் படுத்துவதில்லை. தங்களுடைய கடற்படை SEAL, Delta Force, Blackwater, தனியார் பாதுகாவல் ஒப்பந்தக்காரர்கள், CIAவின் சிறப்பு நடவடிக்கைப் பிரிவு ஒற்றர்கள், Joint Special Operations Command (JSOC) போன்ற அமைப்புகளிலிருந்து பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுத்த, பயிற்சி பெற்ற வீரர்கள். இப்படி ஆயிரக்கணக்கான ரகசிய கமாண்டோக்கள்; நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் ரகசியப் பணி என்று ஊடக வெளிச்சத்திற்கு அப்பாற்பட்ட பெரும் போர்தான் Dirty Wars. இதற்கான செலவு ஏராளம் அல்லவா? அதற்காக பட்ஜெட் சமர்ப்பித்துப் பணம் ஒதுக்கும் வேலையெல்லாம் சரிப்படுமா என்ன? Black budgets எனப்படும் கள்ள பட்ஜெட் உருவாக்கி இதற்கான நிதி வசதியைப் பார்த்துக்கொள்கிறார்கள்.
இப்படியான கள்ள யுத்தங்களின் அடிமட்டம் வரை சென்றிருக்கிறது ஜெரிமியின் புலனாய்வு. ஊடகங்களின் எல்லைக்கு அப்பாற்பட்ட அவை, அமெரிக்காவின் நாடாளும் அவைகளிலும் விவாதிக்கப்படுவதில்லை. பொது விவாதம், அறிவிப்பு என்ற சம்பிரதாய மண்ணாங்கட்டியும் கிடையாது. உதாரணமாக, முன்னெப்போதும் இல்லாத வகையில் அமெரிக்க நாட்டின் குடிமகன் ஒருவரை அமெரிக்காவே குறிவைத்துக் கொலை செய்ததை பேட்டியொன்றில் விரிவாகவே சொல்லியிருக்கிறார் ஜெரிமி.
அன்வர் அல்-அவ்லாகி அமெரிக்கக் குடிமகன். பெற்றோர் யமன் நாட்டிலிருந்து குடிபெயர்ந்தவர்கள். அவரது இஸ்லாமியப் பிரச்சாரத்திலும் பிரசங்கங்களிலும் இஸ்லாத்திற்கு எதிராக நிகழும் போர்களைப் பற்றியும் அரசியலைப் பற்றியும் கடுமையான எதிர்ப்புணர்வு இருந்தது. மேலை நாடுகளையும் அமெரிக்காவையும் சாடுவதும் இருந்தது. ஒரு கட்டத்தில் யமன் நாட்டிற்குச் சென்ற அவர் அமெரிக்கா திரும்பவில்லை. அங்கேயே தங்கிவிட்டார்.
யமனிலிருந்து இயங்கும் அல்-காயிதாவுடன் அவரைத் தொடர்புபடுத்தித் தீவிரவாதக் குற்றச்சாட்டுகளை அமெரிக்கா முன்வைத்தது. அமெரிக்காவிற்கு எதிரான தீவிரவாதத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டன என்று இரு நிகழ்வுகளைச் சொல்லி, அதைத் திட்டமிட்டவர் அன்வர் அல்-அவ்லாகி என்று குற்றம் சுமத்திய அமெரிக்கா, அவரைத் தன்னுடைய ‘ஹிட் லிஸ்ட்டில்’ கொண்டுவந்தது. Drone எனும் தானியங்கி விமானத்தின் மூலம் யமன் நாட்டினுள் அவரைத் தாக்கும் வேட்டை துவங்கியது. முதல் தாக்குதலில் தப்பிய அவரை இரண்டாவது தாக்குதலில் கொன்றது அமெரிக்கா. பிறகு என்ன நினைத்ததோ, ஏது நினைத்ததோ…. அவருடைய பதினாறு வயது மகன் அப்துர் ரஹ்மான் அல்-அவ்லாகியையும் Drone தாக்குதல் நிகழ்த்திக் கொன்றது.
இதன் விபரங்களை வெகு நுணுக்கமாகப் பேசுகிறார் ஜெரிமி. அவ்லாகியின் பெற்றோர், குடும்ப உறுப்பினர்களிடம் சென்று பழகி விபரங்களை நேரடியாக அறிந்திருக்கிறார். அவர்களுடன் தமக்கு ஏற்பட்ட நட்பு உள்ளார்ந்த ஒட்டுதலாக வளர்ந்துபோய், அவர்கள் யார், எவர் என்ற உண்மைகளை ஒப்பனையின்றி, பாவனையின்றி அவரால் மிகத் தெளிவாக உணர முடிந்திருக்கிறது.
‘அன்வர் அல்-அவ்லாகியைப் பற்றி நான் இப்படி நினைக்கிறேன்’ என்று அமெரிக்க ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கருத்துத் தெரிவித்துள்ளார் ஜெரிமி. அவரது பேட்டியில் எளிமையான, நியாயமான கேள்விகள் பல உள்ளதால் அதன் தொகுப்பு கீழே.
ஜான் வாக்கர் லின்த் (John Walker Lindh) என்பவர் மீது குற்றஞ்சாட்டி சட்ட நடவடிக்கை எடுத்தீர்களே! போர்க் களத்தில் அமெரிக்காவுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர் அவர். ஜான் வாக்கர் லின்திற்கு மட்டும் பொது நீதிமன்ற வழக்குமுறைக்கு ஏன் அனுமதி வழங்கப்பட்டது? நிடால் ஹஸன் என்பவர் Ft. Hood-ல் துப்பாக்கிச்சூடு நடத்தித் தம்முடைய சக படைவீரர்கள் பதின்மூன்று பேரைக் கொன்றார். பலரைக் காயப்படுத்தினார். அவருக்கும் முறையான வழக்கு விசாரனை நடைபெற்றது.
என்னைப் பொறுத்தவரை அன்வர் அல்-அவ்லாகி மிகப் பெரிய மனிதரா இல்லையா என்பதன்று பிரச்சினை. அவர் குற்றஞ்சாட்டத் தக்கவராக இருக்கலாம். அதுவும் எப்படி? அவருடைய பேச்சினால் மட்டுமே. அதற்காக அவரை நாம் இப்படியா கையாள்வோம்?
இந்த அதிபர் அக்கறையானவர்; தாக்குதல்களின்போது அநியாயமாகப் பொது மக்கள் கொல்லப்படுவதைக் கண்டு கவலைப்படுபவர் என்றெல்லாம் நிறைய பேச்சு உள்ளது. தாம் அங்கீகரித்த தாக்குதல்களில் பொது மக்கள் கொல்லப்படுவது தம்முடைய வாழ்நாளுக்கும் தம்மை நோகடிக்கும் என்று ஓர் அமெரிக்க அதிபர் சொல்வதும் முன்னெப்போதும் இல்லாததுதான். ஆனால் அத்தகைய உரைகளில், அமெரிக்கக் கொள்கைகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுவிடும் என்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லையே!
குவாண்டானமோ இன்னும் மூடப்படாமல் இருப்பதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன. ஒன்று எதிர்க்கட்சிகளின் முட்டுக்கட்டை. இரண்டாவது அதிபர் ஒபாமாவின் முன்னுரிமைப் பட்டியலில் அது இல்லவே இல்லை. குவாண்டானமோ நமது சமுதாயத்தின்மீது படிந்த பெரும் அழுக்கு. அமெரிக்காவின்மீது பன்னிரண்டு ஆண்டு காலமாகத் தொடர்கிறது அது. விடுதலை செய்யலாம் என அனுமதி வழங்கப்பட்டவர்கள்கூட இன்னும் கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். எதிர்ப்புத் தெரிவித்து உண்ண மறுக்கும் அவர்களுக்கு வலுக்கட்டாயமாக உணவைத் திணிக்கும் கொடுமை, இன்னும் நடந்துகொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் நாம் முற்றிலும் வெட்கப்படவேண்டும்.
இத்தனையும் யாருடைய ஆட்சி அதிகாரத்தில் நடக்கின்றன? அமைதிக்கான நோபல் பரிசை வென்ற, அரசியலமைப்புச் சட்டப் பேராசிரியரான அதிபர் ஒபாமாவின் தலைமையில்!
ஒபாமா தம்முடைய ஓர் உரையில், ‘தீவிரவாதத்திற்கு எதிரான போரை நாம் காலாகாலத்திற்கும் நடத்திக்கொண்டிருக்க முடியாது’ என்று வலியுறுத்திச் சொல்கிறார். ‘நான் எப்பொழுதுமே போரில் ஈடுபட்டிருக்க விரும்பவில்லை. நாம் இதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். அப்பாவிப் பொதுமக்களின் மரணம் என்னைத் துன்பப்படுத்துகிறது. நாம் drone தாக்குதல்களைக் குறைக்க வேண்டும்’ என்கிறார். எனில், எல்லாம் முடிந்தது, ஆட்டம் க்ளோஸ் என்று ஏன் அறிவிக்கவில்லை? மாறாக என்ன நடக்கிறது என்று பாருங்கள்.’
அவர்கள் தங்களுக்குச் சார்பான அட்டவணை ஒன்றைத் தயாரித்து வைத்துள்ளார்கள். அதில் யாருக்கு வாழ்வு; யாருக்குச் சாவு, யாரை உயிருடன் பிடிக்க வேண்டும்; யாரைக் கொல்ல வேண்டும் என்று நிர்ணயம் செய்து வைத்துள்ளார்கள். அதிபரின் கையொப்பத்துடன் அவை நிறைவேற்றப்படுகின்றன. கையொப்பத்தின் பேரில் நிகழ்த்தப்படும் மரணத் தாக்குதல்களை அவர்கள் நிறுத்தப் போகிறார்கள் என்பதற்கான எந்த முகாந்திரமும் அவர்களிடம் தென்படவில்லை. ஏதொன்றும் மாறுவதற்கான அறிகுறியே இல்லை.
கடந்த ஐந்து ஆண்டுகளில், அவர் அமல்படுத்திய தீவிரவாதத்திற்கு எதிரான கொள்கைகளில் வெகு சில மட்டுமே சரி. மற்றவை அனைத்தும் அலட்சியப் போக்கு. எனக்கு அவருடைய பேச்சு எப்படிப் படுகிறதென்றால் ‘என்னைப் போல் ஒருவன் பொறுப்புமிக்க இந்த அலுவலில் இருந்தால், இவையெல்லாம் ஏற்றுக்கொள்ளத்தக்க கொள்கைகளே. ஏனெனில் நீதியும் நானே; காவலும் நானே.’ இவரிடம் அடிப்படையே பெரும் தவறு. சுருக்கமாகச் சொன்னால், ‘எங்களை நம்புங்கள். நாங்கள் திறம் வாய்ந்த நேர்மையாளர்கள்’ என்கிறார்.
இத்தகைய எதேச்சாதிகாரப் போக்கை உலகில் வேறு யாரிடமாவது கண்டால் நாம் ஏற்றுக்கொள்ளப் போவதே இல்லை.
எதிர்க்கட்சிக்காரர்களிடம் (Republicans) மட்டும் என்ன வாழ்கிறது? எத்தகைய வழக்கும் இன்றி அமெரிக்கர் ஒருவரைக் கொல்லும் உரிமை ஒபாமாவுக்கு உண்டு எனச் சொன்னால், பெரிதாக எதிர்த்து ‘இல்லை ஒபாமா அப்படிச் செய்யக்கூடாது’ என்பார்கள். ஆனால் அன்வர் அல்-அவ்லாகி, அவரொரு முஸ்லிம் என்று சொல்லிப் பாருங்கள், அவரைப் போட்டுத் தள்ளினால் ஒன்றும் தப்பில்லை என்பார்கள். குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் அமெரிக்கக் குடிமகனைக் கொலைப் பட்டியலில் இணைத்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி. நமது அவை உறுப்பினர்கள், இதற்கான விவாதத்தைக் கோரியிருக்க வேண்டுமில்லையா?
தீவிரவாதத்திற்கு எதிரான அமெரிக்கக் கொள்கையினால், நாம் எத்தனைத் தீவிரவாதிகளைக் கொன்றுள்ளோமோ அதைவிட அதிகமான எதிரிகளை ஈன்றிருக்கிறோம். இராணுவத்திலுள்ள என் நண்பர்களிடம் பேசி அறிந்தது; நானே கண்டது என்று நமது தவறுகள் எக்கச்சக்கம். எண்ணிலடங்கா மோசமான இரவுத் தாக்குதல்கள் நடைபெறுகின்றன. பல தாக்குதல்களுக்கு, ‘இவனைக் கொன்றோம், அவனைச் சிறைப் பிடித்தோம்’ என்று இராணுவம் காரணம் காட்டுகிறது. ஆனால் பற்பலத் தாக்குதல்கள் பிழையான உளவுத் தகவல்களின் அடிப்படையிலேயே நிகழ்ந்துள்ளன.
அதெல்லாம் இருக்க, இப்பொழுது ஆப்கானிஸ்தானில் நாம் யாரிடம் இன்னும் போரிட்டுக் கொண்டிருக்கிறோம்? எத்தனை தீவிரவாதத் துணைத் தளபதிகள் அங்குள்ளனர்? தாலிபானின் பெருந்தலைகள் எல்லாம் தப்பி மறைந்துவிட்டனர். எனில் நாம் அங்கு யாரைக் கொலை புரிகிறோம்? ஆப்கானிஸ்தான் எனும் ஒரு நாட்டில் மட்டுமேயே நாம் கொன்ற தீவிரவாதிகளைவிட சம்பாதித்துள்ள எதிரிகள் அதிகம் என்பது வெகுநிச்சயம். விளைவாக அந்தப் பொதுமக்களின் பார்வையில் இப்பொழுது நாம்தான் அவர்களுக்குத் தீவிரவாதிகள். அவர்களின் அந்த வாதத்தை நான் மறுக்கவே முடியாது.
உலகெங்கும் நடைபெறும் போராட்டங்களுக்குள் அமெரிக்க நாட்டின் தலைவர்கள் தங்களது நாட்டை ஆழமாக உள்ளிழுத்துச் செல்கிறார்கள். அது உலக அரங்கை மாபெரும் உறுதியற்ற நிலைக்குத் தள்ளி எதிர்வினைக்கு வழி செய்கிறது.
நாம் வெளிநாட்டில் நிகழ்த்தும் செயல்கள் உள்நாட்டில் தீவிரவாதச் செயல்கள் உருவாக உந்துதலாக அமையும். அமெரிக்காவின் உள்ளேயே தீவிரவாத மனோநிலை கொண்டவர்கள் உருவாகித் தாக்குதல்கள் அதிகரிக்கலாம். ஆனால் தீவிரவாதம் என்ற சொல்லை மேம்போக்காக நான் பயன்படுத்தமாட்டேன். ஏனெனில் இதையெல்லாம்விட, நமது பாதுகாப்பான வாழ்விற்கு நமது துப்பாக்கிச் சந்தைகளால் அதிகமான அச்சுறுத்தல் உள்ளது என நம்புகிறேன். தீவிரவாதத்தைவிட நமது பாதுகாவலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்கள் பல உள்ளன. நமது பொருளாதாரச் சூழல் நம் நாட்டில் உள்ள குடும்பங்களை ஒவ்வொரு நாளும் அச்சுறுத்தி வருகிறது. இப்படியான இதர காரணங்களுடன் ஒப்பிட்டால் தீவிரவாதம் என்பது நமக்குச் சிறிய அச்சுறுத்தல் மட்டுமே. இருந்தும் அதற்காக நாம் ஏகப்பட்ட பணத்தைச் செலவழிக்கிறோம், நூதனமான போர்த் தளவாடங்களாகத் தயாரித்துக் குவித்து வைத்திருக்கிறோம்.
திரையில் உலக நாயகனாகும் ஆவல், வர்த்தக லாபம் போன்ற ‘பெரும்’ நோக்கங்கள் இல்லாததால் அமெரிக்கராகவே இருந்தாலும் தமது நாட்டின் உண்மை அசிங்கமானதாகவே இருந்தாலும் ஜெரிமி ஸ்காஹில் போன்றவர்களால் அதை உரத்துச் சொல்ல முடிகிறது. Dirty Wars என்று திட்டித் தலைப்பிட்டு எழுத முடிகிறது; படமெடுக்க முடிகிறது. மாறாக அமெரிக்கத் தரப்பு ஊடகத்தின் பொய் விளம்பரத்தை மட்டுமே நம்பும் அப்பாவிகள் என்ன செய்வார்கள்? அதற்கு விசுவாசமாய் திரையில் ரூபமெடுக்கிறார்கள். போகட்டும்.
அமெரிக்காவின் கள்ள யுத்தங்களையும் உண்மை ரூபத்தையும் திரைப்படமாகவே ஆவணப்படுத்திவிட்டாரே ஜெரிமி, இதைத் தமிழில் ‘டப்’ செய்து வெளியிட்டால் என்ன தலைப்பு பரிந்துரைக்கலாம் என்றபோது தோன்றியது – ஜெரிமிரூபம்!
– நூருத்தீன்