இராக்கின் பஸ்ரா பகுதியில் தற்போது நிலை கொண்டிருக்கும் 4500 பிரிட்டிஷ் படையினரில் 2008 தொடக்கத்தில் 2500 பேர் திரும்பப் பெறப்படுவர் என பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பஸ்ரா பகுதியில் சட்ட ஒழுங்கு நிலைமை கட்டுக்குள் இருப்பதாலும் இராக்கிய இராணுவம் பஸ்ராவை நன்கு நிர்வகித்து வருவதாலும் பிரிட்டிஷ் படையினர் திரும்பப் பெறப்படுவர் என அவர் தெரிவித்தார்.
இந்தத் திரும்பப் பெறல் படிப்படியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டாலும் பெயர் வெளியிட விரும்பாத பிரதமர் அலுவலக மூத்த அலுவலர் ஒருவர் 2008 இறுதிக்குள் அனைத்து பிரிட்டிஷ் படையினரும் திரும்பப் பெறப்படும் சாத்தியம் இருப்பதாகக் கூறினார்.
பிரவுனுக்கு முன் பிரிட்டிஷ் பிரதமராக இருந்த டோனி பிளேய்ர் அமெரிக்காவுடன் நெருங்கிய ஒத்துழைப்பு வழங்கி வந்தார். கார்டன் பிரவுன் பிரதமர் பொறுப்பேற்றது முதல் படிப்படியாக பிரிட்டிஷ் படைகள் திரும்பப்ப் பெறப்பட்டுள்ளன. இருப்பினும் அமெரிக்காவுடனான உறவில் எந்த மாற்றமும் இல்லை என பிரவுன் தெரிவித்தார்.
இராக்கில் இருக்கும் பிரிட்டிஷ் துருப்புகள் இனி சண்டையில் ஈடுபடாமல் இராக்கியப் படையினருக்குப் பயிற்சி அளிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவர் என்றும் அவர் கூறினார்.