நேபாளத்தில் மஸ்ஜித் மீது வெடிகுண்டு தாக்குதல் – இருவர் பலி!

காட்மண்டு: நேபாளத்தில் காத்மண்டு நகரத்திற்கு அருகே உள்ள பிராத் நகரில் (Biratnagar) ஒரு மஸ்ஜிதின் மீது நடந்த வெடிகுண்டு தாக்குதலில் இருவர் அநியாயமாகக் கொல்லப் பட்டனர். பலர் மிகக் கடுமையாகக் காயமடைந்தனர்.

கடந்த சனிக்கிழமை மாலை நேரம் மஸ்ஜிதில் தொழுகை நடக்கும் வேளையில் இத்தாக்குதல் நடந்தது. இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் மஸ்ஜிதில் தொழுகை நடந்து கொண்டிருக்கும் வேளையில் வெடிகுண்டை மஸ்ஜிதின் உள்ளே வீசி எறிந்து விட்டுத் தப்பினர்.

மஸ்ஜிதின் உள்ளேயே வெடிகுண்டு வெடித்துச் சிதறியதில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் நிலைகுலைந்தனர்.

தாக்குதலில் பலத்தக் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியிலேயே இருவர் அநியாயமாக உயிரிழந்தனர்.

தாக்குதலுக்குப் பின் நேபாளத்திலுள்ள ஹிந்துத்துவ இயக்கமான “நேபாள் பாதுகாப்புப் படை(நேபாள் டிஃபன்ஸ் ஆர்மி)” மஸ்ஜித் மீதான வெடிகுண்டுத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றிருக்கிறது.

வெடிகுண்டு தாக்குதலுக்குப் பின்னர் நகரில் பதட்டம் நிலவியதால் பிராத் நகரம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

நேபாள் முஸ்லிம் சிறுபான்மையினரில் பெரும்பாலானவர்களும் நேபாளின் இரண்டாவது பெரிய நகரமான இந்த பிராதில் வசிக்கின்றனர்.

பிராத்நகர் எனும் நகரம் நேபாள பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா-வின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத் தக்கது.

“நேபாள் பாதுகாப்புப் படை” என்றப் பெயரில் இயங்கும் ஹிந்துத்துவத் தீவிரவாத இயக்கம் நேபாள் மதசார்பற்ற நாடாக மாறுவதை எதிர்க்கும் இயக்கமாகும்.