இராக்கியர்கள் பலியாக்கப்பட்டது போதும் – போப்

{mosimage}இராக்கில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் வன்முறைகளை எதிர்த்தும் அங்கே மலர வேண்டிய அமைதிக்காகவும் போப் பெனெடிக்ட் XVI அவர்கள் தமது கடுமையான கண்டனங்களைக் கடந்த (16.03.2008) ஞாயிற்று கிழமையன்று அவர் வெளியிட்டுள்ளார். கடத்தப்பட்ட சால்டியன் கத்தோலிக் ஆர்ச் பிஷப்பின் உடல் மோசூல் நகரத்தின் வடபகுதியில் கண்டெடுக்கப்பட்ட பின்னர் அவர் இக்கோரிக்கையை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக இராக்கில் தொடரும் இடைவிடாப் போரினால் இராக்கியர்கள் சமூக வாழ்க்கை முழுதும் சீர்குலைந்து விட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

 

”பலிகள் போதும்; வன்முறைகள் போதும்; இராக்கில் நிலவும் வெறுப்புணர்வுகள் போதும்” என்ற வரிகளுடன் பெனெடிக்ட் அவர்கள் ஸெயின்ட் பீட்டர் ஸ்குவெரில் கடந்த ஞாயிறு அன்று நடந்த தமது திருச்சபையின் உரையின் இறுதியில் மக்களின் கைத்தட்டல் ஆதரவு முழக்கத்துக்கிடையில் கூறினார்.

 

போப் அவர்கள் ஆழமான உணர்ச்சிகளுடன் இந்த உளப்பூர்வமான கோரிக்கையை விடுத்து, ”இராக்கில் படுகொலைகளையும் வன்முறைகளையும் வெறுப்புணர்வுகளையும் நிறுத்துங்கள்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

 

”அதே நேரத்தில் நான் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தப் போரினால் ஏற்பட்ட தனிப்பெரும் இழப்புகளும் சமூக வாழ்வில் ஏற்பட்ட சீர்குலைவையும் பாதிப்புகளையும் தாங்கி வரும் இராக்கிய மக்களிடமும் ஒரு கோரிக்கை விடுக்கிறேன்: இராக்கில் உள்ள எல்லா மத-இனக் குழுக்களும் பழங்குடிக் குழுவினரும் ஒன்றிணைந்து, தங்களுக்கிடையே மன்னிப்பு, நீதி, பரஸ்பரம் விட்டுக் கொடுத்தல் போன்ற சுமுகநிலையை உருவாக்கித் தலை நிமிர்ந்து வாழ்வதற்கானத் தங்கள் வாழ்க்கை முறையை ஆராய்ந்து சீரமைத்துக் கொள்ள முன்வர வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

கூடவே, அமெரிக்கத் தலைமையிலான இராக் மீதான ஆக்கிரமிப்புக்குக் கடுமையாக எதிர்ப்பும் தெரிவித்தார்.

 

போப்பின் இந்தக் கோரிக்கை, சர்ச்சுடைய புனித வாரப் பண்டிகைக் கொண்டாட்டம் துவங்கும் ஞாயிறு அன்று நடந்த திருச்சபையின் குருத்தோலைக் கூட்டத்தில் ஆற்றப்பட்ட உரையின் இறுதியில் முன்வைக்கப்பட்டது.

 

கடந்த வியாழன் (13.3.2008) அன்று ஆர்ஷ் பிஷப் பாவ்லொஸ் ஃபராஜ் ராஹோ அவர்களுடைய இறந்த உடல் மோசூலுக்கு அருகே கண்டெடுக்கப்பட்டது. அவர் 29.2.2008 அன்று கடத்தப்பட்டிருந்தார்.  ராஹோவின் கொலையை, “மனிதாபிமானமற்ற வன்முறைச்செயல்” என்றும் “இது மனித நேயத்தின் அந்தஸ்தையே தாக்கியுள்ளது” என்றும் பெனெடிக்ட் அவர்கள் குறிப்பிட்டார்.  கொலை செய்யப்பட்ட ஆர்ச் பிஷப் ராஹோவின் ஏசு கிருஸ்து மீதுள்ள நம்பிக்கையைப் பெரிதும் புகழ்ந்து, “அவர் தமக்கு பல பயமுறுத்தல்கள் கஷ்டங்கள் ஏற்பட்ட போதும் தமது ஜெபக்கூட்டத்தை கைவிடாமல் தமது பணியைத் தொடர்ந்தார்” என்று கூட்டத்தில் பெனெடிக்ட் கூறியுள்ளார்.

 

கத்தோலிக்க சர்ச்சின் புனித வாரத்தின் துவக்க விழாவில் ராஹோவின் இந்த மரணத்தை அவர் நினைவு கூர்ந்தார். இந்த வாரத்தை (கிறித்துவ) நம்பிக்கையாளர்கள் புனித வாரமாகவும் ஏசு கிறிஸ்து அவர்கள் பெற்ற துன்பத்தையும் மரணத்தினையும் நினைவு கூர்வர். ராஹோவின் கத்தோலிக்க சர்ச்சுக்கான அர்ப்பணிப்பு மனப்பான்மையும் அவரது மரணமும் இந்தக் கடுமையான வேதனைக்குரலை எழுப்பிடவும் இராக்கில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இதே வாரம் துவங்கி நிகழ்ந்து வரும் வன்முறைகளை வன்மையாகக் கண்டிக்க வேண்டிய நிலைக்குத் தம்மைத் தள்ளியுள்ளதாகவும் போப் பெனடிக்ட் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

போப் பெனெடிக்ட் அவ்வப்போது இராக்கிய கிறித்துவச் சமுதாயத்தினர்கள் மீது தீவிரவாதிகளின் தாக்குதல்களையும் விமர்சித்து இருக்கிறார் என்பதும் சென்ற ஆண்டு அவர் அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷிடம் இராக்கிய கிறித்துவர்களின் பாதுகாப்பை கவனத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.