பாக்தாத்: தெற்கு இராக்கின் மிகப்பெரிய நகரமான பஸராவில் கடந்த நான்கு வருடத்திற்கும் மேலாக நடத்திய இராணுவ நடவடிக்கையினால் எந்தப் பயனும் இல்லை எனவும், அவை அர்த்தமற்றவையாகவே இருந்தன எனவும் பிரிட்டிஷ் உயர் இராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
தி ஸண்டே டெலக்ராஃப் தினசரிக்குப் பெயர் வெளிப்படுத்தாமல் அளித்தப் பேட்டியின் பொழுது, பஸ்ரா நகரத்தின் இராணுவப் பொறுப்பு வகித்திருந்த உயர் அதிகாரியான இவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளார். இராக்கில் இராணுவ நடவடிக்கைக்குப் பதிலாக அரசியல் தீர்வு காண்பதே தேவையானது எனவும் அவர் கூறினார்.
பஸ்ரா நகரத்தின் பொறுப்பு பிரிட்டிஷ் இராணுவத்தினருக்கு அளிக்கப்பட்டிருந்தது. கடந்த மாதம் இராக்கிய இராணுவத்தினரிடம் தங்களின் பொறுப்பை மாற்றிய பிறகு, பிரிட்டிஷ் இராணுவம் சர்வதேச விமானநிலையத்தின் அருகிலுள்ள பிரிட்டிஷ் இராணுவத் தளத்திற்குப் பின்வாங்கியிருந்தது. "பிரிட்டிஷ் இராணுவத்தினர் ரோபோக்களைப் போன்று இருந்தனர். அவர்களை நோக்கி வெடி குண்டு வீசப்பட்டால், இலட்சியம் இன்றி கண்ணை மூடிக்கொண்டு திருப்பிச் சுடுவர். இதில் அதிகமான நேரங்களில் நிரபராதிகளே பலிகடாவாகியிருக்கின்றனர். சாதாரண மக்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி எங்களுக்குப் போதும் போதும் என்றாகி விட்டது. விரக்தியின் எல்லையில் நாங்கள் இருந்தோம்" என்று அவர் கூறினார்.
அரபி மொழி தெரியாதது, பயம் காரணமாக அங்குள்ளவர்கள் எங்களுக்கு உதவி செய்யத் தயாராகாததும் சாதாரண மக்களிடமிருந்துத் தங்களை அகற்றியதாகவும் அவர் கூறினார். ஷியா போராளி இயக்கங்களுடன், "அங்கிருந்து பிரிட்டிஷ் படைகள் பின்வாங்கினால், அவர்களின் மீது போராளிகள் தாக்குதல் தொடுக்கமாட்டார்கள்" என்ற விதத்தில் உடன்பாடு ஏற்படுத்திக் கொண்டு ஷியா இயக்கங்கள் அளித்த உத்தரவாதத்திலேயே பிரிட்டிஷ் படைகள் பஸ்ராவிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டன.
பிரிட்டிஷ் இராணுவ உயர் அதிகாரியின் இந்தப் பேட்டிக்கு எதிராக அரசியல்வாதிகளும், இராணுவத்தினரும் ஒன்றிணைந்து களமிறங்கியுள்ளனர். இராக்கில் இதுவரை பணிபுரிந்த இராணுவத்தினரிடையேயும், மக்களிடையேயும் இப்பேட்டி நம்பிக்கையின்மையை உருவாக்கும் எனப் பாதுகாப்புச் செயலாளர் லியாம் போக்ஸ் கருத்து தெரிவித்தார்.