{mosimage}அரபு அமீரக ஒன்றியத்தில் விரைவு ரயில் போக்குவரத்துச் சேவைக்கான கட்டுமானப் பணிகள் அடுத்த வருடத்தின் துவக்கத்தில் ஆரம்பமாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமீரக மக்களிடையே கடுமையான தலைவலியை ஏற்படுத்தி வரும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காகத் திட்டமிடப்பட்டுள்ள 800 கிலோமீட்டர் நீளமுள்ள இப்பணி வரும் 2013 க்குள் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்மூலம் பயணிகளுக்காகவும் சரக்குகள் போக்குரத்திற்காகவும் பயன்படுத்தப்படும் கனரக வாகனங்களின் எண்ணிக்கை சாலைகளில் பெருமளவில் குறைந்து, போக்குவரத்து சீராக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்தத் திட்டம் அமீரகத்தில் நிறைவு பெற்றப் பின்னர் ஏனைய வளைகுடா நாடுகளுக்கும் இது விரிவாக்கம் செய்யப்படும். GCC நாடுகளை ஒன்றினைக்கும் ஆயிரம் கி.மீ நீளமுள்ள மாபெரும் திட்டம் ஒன்றை 2010 ல் செயல்படுத்தவும் இது தயாராக இருக்கும்.
ஜெர்மனியின் ரயில்வே கூட்டமைப்பு ஒன்று இத்திட்டத்தின் சாத்தியக்கூறுகளை அலசி ஆராய்ந்து, அதற்கான முழு திட்டவரைவு ஒன்றை வரைந்து சமர்ப்பித்துள்ளதாக இந்தத் திட்டத்தில் பணியாற்றும் ஓர் அலுவலர் கூறுகிறார். அமீரக அதிபரின் முழு சம்மதத்தையும் பெற்ற இத்திட்டம், முழு மூச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளதாகச் செய்திக்குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.
இந்த மாபெரும் திட்டப் பணிக்கான செலவின மதிப்பு இன்னும் முழுமையாக வெளியாகாத சூழலில் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (11 பில்லியன் திர்ஹம்கள்) வரை செலவாகக் கூடும் என்று செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. இறக்குமதி, ஏற்றுமதி செய்யப்படும் சிமெண்ட், கற்கள், மணல் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் ஆகியவையும் இந்தத் தொடர்வண்டிகள் உரிய இடங்களுக்குக் கொண்டுச் சேர்க்கும்.
அபூதபிக்கும், சவூதி அரேபியாவிற்கும் இடைப்பட்ட எல்லைப்பகுதியில் துவங்கும் இப்பணி முழு அமீரகத்தையும் இணைக்கும். தூரத்தினையும், போக்குவரத்து நெரிசலையும் கருத்தில் கொண்டு நெருக்கியடித்து நகரத்திற்குள்ளாகவே குடியிருக்கும் மக்களின் சிரமமான மனோநிலையை இத்திட்டம் மாற்றியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மிக நீண்ட காலங்களுக்குப் பிறகு அரபு நாடுகள் தங்களிடையே ஒன்றிணைந்து முன்செல்லத் துவங்கியிருப்பதன் அடையாளமாக, GCC உறுப்பினர்களாகிய அனைத்து அண்டை நாடுகளும் இத்திட்டத்தில் முழு ஒற்றுமையுடன் இணைந்து தங்களது ஒத்துழைப்பினை அளிப்பதாக உறுதி கூறியுள்ளன. இந்நிலையில் இதிலுள்ள இடர்ப்பாடுகளைக் களையும் முயற்சிகளில் அனைத்து வளைகுடா நாடுகளும் ஈடுபட்டு வருவதாகக் கூறி நம்பிக்கையூட்டுகிறார் உலக வங்கியின் தேசிய ரயில்வே போக்குவரத்துத்துறைத் தலைவருமான ரமிஜ் அல் அஸ்ஸார். நேற்று நடந்த மத்திய கிழக்கு இரயில் திட்டங்களுக்கான 2007 ஆம் ஆண்டின் மாநாட்டில் (30-10-2007) பேசியுள்ள அவர் Sistra, Canarail and Khatib Al Alami ஆகிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இதில் ஈடுபட்டுள்ளன என்றும், அந்நிறுவனங்கள் 2009 ஆம் ஆண்டிற்குள் முழுமையான திட்டவரைவினை அளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
1000 கிலோமீட்டர்கள் வரை நீட்டிப்பு செய்யப்படவிருக்கும் இப்பணி வளைகுடா நாடுகளின் கடற்கரைப் பிரதேசங்களில் அமையவுள்ளது. இன்ஷா அல்லாஹ், இப்பணி நிறைவுற்றால் இதில் 180 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பயணிக்கும் ரயில்களானது, ஒமானின் மஸ்கட்டில் துவங்கி அமீரகம் முழுவதும் பரவி கத்தர் மற்றும் சவூதி அரேபியாவைக் கடந்து குவைத்தில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒமான் நாட்டினுள் அடுத்த 1000 கி.மீ தொலைவில் செய்யப்படும் விரிவாக்கம் பற்றி எதிர்வரும் டிசம்பரில் நடைபெறவுள்ள GCC உச்சி மாநாட்டில் அலசப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய கிழக்கு அரபு நாடுகளை ஒன்றிணைய விடாமல் அவர்களின் பெட்ரோல் வளத்தின் மீது தங்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதில் போட்டியிட்டுச் செயலாற்றும் இஸ்ரேலிற்கும், அதற்கு எல்லா வகையிலும் துணைபுரியும் மேற்குலகிற்கும் அரபு நாடுகளின் எதிர்காலத்தை நோக்கிய இத்திட்டமிட்ட ஒருங்கிணைந்த செயல் திட்டம் வயிற்றில் புளியைக் கரைக்கும். அது அரபு நாடுகளின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளுக்கு ஊறு விளைவிக்கும் விதத்தில் காய்களை நகர்த்தும் என்பதையும் அரபு நாடுகள் புரிந்து கொண்டு அதற்குத் தகுந்தது போல் ஒற்றுமையுடன் முன்செல்லத், திட்டங்களை வடிவமைத்துக் கொள்ள வேண்டும் என்பது முஸ்லிம் உலகின் எதிர்பார்ப்பாகும்.
வளைகுடா நாடுகளில் தற்போது சவூதி அரேபியாவில் மட்டுமே தம்மாமிற்கும் தலைநகர் ரியாதிற்கும் இடையே ஒரு நாளைக்கு நான்கு முறை ரயில் போக்குவரத்துச் சேவை நடைபெற்று வருகிறது என்பது தனித் தகவல்.