அமெரிக்கா, சவூதி அரேபியா போன்ற நாடுகளின் முன்னிலையில் பாலஸ்தீனத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்களையும் பாலஸ்தீனப் பகுதிகளில் தொடரும் குடியேற்ற நடவடிக்கைகளையும் நிறுத்தப் போவதாக வாக்களித்த இஸ்ரேல் அந்த ஒப்பந்தங்களைச் சற்றும் மதிக்காமல் தனது தாக்குதல் நடவடிக்கைகளையும் குடியேற்றங்களையும் தொடர்ந்து செய்து வருகிறது.
செவ்வாயன்று காஸாப் பகுதிகளில் விமானங்கள் மூலம் குண்டு மழை பொழிந்து இராணுவ பீரங்கிவண்டிகள், பெரும் புல்டோசர்கள் உதவியுடன் கடும் தாக்குதல்களை நடத்திய இஸ்ரேல் இத்துடன் 18 முறை அன்னாபோலிஸ் ஒப்பந்தத்திற்குப் பிறகு தாக்குதல்கள் நடத்தியுள்ளது. இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட அப்பாவி மக்கள் பலர் பலியாகி உள்ளனர். காஸாப்பகுதியில் தீவிரவாதிகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவதாகச் சொல்லும் இஸ்ரேல், இது போன்ற தாக்குதல்களை அதிகரிக்கப் போவதாகவும் சொல்லியுள்ளது.
இஸ்ரேலின் நயவஞ்சகத் தனம் புதிதானது இல்லை; இது போன்ற அத்துமீறியத் தாக்குதல்களுக்கு ஹமாஸ் நிச்சயம் பதிலடி கொடுக்கும் என ஹமாஸின் செய்தித் தொடர்பாளர் ஃபவ்ஸி தெரிவித்தார். ஒருபுறம் சமாதானப் பேச்சுகள் நடத்திக் கொண்டு அதனைப் பற்றித் துளியும் அக்கறை இல்லாமல் அப்பாவிகளைக் கொன்று குவிக்கும் இஸ்ரேலின் நடவடிக்கையை சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டும் என பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸின் செய்தித் தொடர்பாளர் நபீல் கருத்துத் தெரிவித்தார்.
அன்னாபொலிஸ் மாநாட்டில் இஸ்ரேலியப் பிரதமர் யஹூத் உல்மர்ட், பாலஸ்தீன எல்லையில் புதிய குடியேற்றங்களை நிறுத்தப் போவதாகவும், ஏற்கனவே இருக்கும் குடியேற்றங்களை இடித்துவிட்டு அந்நிலங்களை பாலஸ்தீனர்களிடமே வழங்கப் போவதாகவும் தெரிவித்திருந்தும், மேலும் புதிய 88 குடியிருப்புகள் அன்னாபொலிஸ் மாநாட்டிற்குப் பின் கட்டப்பட்டுள்ளதாக பீஸ்நௌ (PeaceNow) என்னும் இஸ்ரேலைச் சேர்ந்தத் தன்னார்வு நிறுவனம் ஆதாரத்துடன் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் இத்தகைய நடவடிக்கைகள் குறித்து இதுவரை அமெரிக்கா எந்த ஓர் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
இதற்கிடையே புனித ஹஜ் பயணம் செய்யவிரும்பும் பாலஸ்தீனியர்களின் பயணத்திற்காக எகிப்து தனது ரஃபா எல்லையைத் திறந்து விட்டுள்ளதைக் குறித்து இஸ்ரேல் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.