கொடூரச் சித்திரவதை விசாரணை வீடியோக்களை CIA அழித்தது!

{mosimage}CIA-வின் முன்னாள் மற்றும் இந்நாள் உயர் அலுவலர்களை மேற்கோள் காட்டி தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் கொடூரமான முறையில் சித்திரவதை செய்து கைதிகளை விசாரணை செய்யும் முறைகளைப் படமெடுத்த வீடியோக்களை CIA முற்றிலும் அழித்துவிட்டதாகச் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சித்தரவதை முறைகளைக் கைதிகளின் மேல் பயன்படுத்திய அலுவலர்களைச் சட்டச்சிக்கல்களில் இருந்து பாதுகாக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக CIA-வின் பல அலுவலர்கள் கூறியதாக அந்நாளிதழ் தெரிவித்துள்ளது. ஏற்கனவே அபூகிரைப் சிறைகளில் அமெரிக்கப் படையினர் மேற்கொண்ட சித்திரவதைப் படங்கள் மனித நேயர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். அதேபோல இந்த வீடியோக்கள் வெளியில் கசிந்து அமெரிக்க ஆட்சியாளர்களுக்கும் CIA-வுக்கும் சங்கடத்தை ஏற்படுத்தாமல் இருக்கவே இந்த வீடியோக்கள் அழிக்கப்பட்டதாகத் தெரியவருகிறது.

 

இந்த வீடியோக்களில் வாட்டர்போர்டிங் எனப்படும் நீரில் மூழ்கடிக்கப்படும் உணர்வை ஏற்படுத்தும் சித்திரவதைகளும் அடக்கம் என அந்த அலுவலர்கள் கூறினர். இந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து CIA-வின் இயக்குனர் மைக்கேல் ஹெய்டன் இந்த வீடியோக்கள் அழிக்கப்பட்டது உண்மை தான் என்று ஒப்புக் கொண்டார். இவை அமெரிக்காவின் பாதுகாப்புக்குப் பெரும் கேடு விளைவிக்கும் என்பதாலேயே அழிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

 

ஹெய்டனின் இந்தக் கூற்று வெறும் சப்பைக்கட்டு என்று கடுமையாக விமர்சித்த மனித உரிமைக் கண்காணிப்புக் கழகத்தின் (Human Rights Watch) வாஷிங்டன் பொறுப்பாளர் டாம் மிலினோவ்ஸ்கி, இதைவிட ரகசியமான ஆவணங்கள் பொதுவில் வந்துள்ளன என்றும், இவ்வகை வீடியோக்களில் அமெரிக்கப் பாதுகாப்பை அச்சுறுத்தும் எந்த உள்ளடக்கமும் இருக்க இயலாது என்றும், மனித நேயமற்றக் காட்டுமிராண்டித் தனமான CIA-வின் செயல்களை மூடி மறைத்துச் சட்டத்தின் பிடியில் இருந்து நழுவவே இந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

 

குற்றவியல் ஆவணங்களையும் தடயங்களையும் கையாடல் செய்வதோ அழிப்பதோ பெரும் குற்றமாகும். இதைக்கூட உணராத நிலையில் CIA அலுவலர்கள் இருப்பதாகத் தாம் கருதவில்லை என்று கிளைவ் ஸ்மித் என்னும் வழக்கறிஞர் தெரிவித்தார். உண்மையில் குற்றவாளிகளைத் தண்டிப்பதில் ஆர்வம் இருக்கும் பொறுப்புள்ள அலுவலர் எவரும் தடயங்களை அழிப்பதில் ஈடுபடமாட்டார். அவ்வாறு அழிப்பவர் தனது குற்றங்களை மறைக்கவே அவ்வாறு செய்வார் என்றும் அவர் தெரிவித்தார்.

 

ஒருபுறம் மனிதத் தன்மையற்ற விசாரணை முறைகளைத் தடைசெய்யக் குரல் கொடுத்துக் கொண்டே, கொடூர சித்திரவதைகளை அங்கீகரிக்கும் ஒரு வினோத நிலைபாட்டை எடுப்பதை அமெரிக்க நாடாளுமன்றம் (US Congress) உணர்ந்து இனியும் இது போன்ற ஆவணங்களை அழிக்கத் தடைவிதிக்கவேண்டும் என இன்னொரு மனித உரிமை ஆர்வலரான எலிஸா மாஸ்ஸிமோ தெரிவித்தார்.