”நான் புகைப்படம் எடுக்கச் செல்கிறேன்” என்று அவர்களிடம் தெரிவித்தேன். அதற்கு அவர்கள், ”நீங்களும் ஒரு இந்து. ஏன் அங்கு செல்கிறீர்கள்? இந்துக்கள் இன்று எழுச்சி பெற்றுள்ளனர்” என்று கூறியுள்ளனர்.
டெல்லியின் வடகிழக்குப் பகுதிகளில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டக்களம், கடந்த சில நாள்களாக போர்க்களமாகக் காட்சியளித்துவருகிறது. அங்கு, மத அடையாளத்தின் அடிப்படையில் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். அதன்மூலம் இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்பட்டு, எவ்வாறு சட்டத்தைக் கையில் எடுக்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள். வடகிழக்கு டெல்லியில் நடைபெறும் சம்பவங்களின் கோர முகத்தை, ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ புகைப்படக் கலைஞர், தனது அனுபவம் மூலம் விளக்கியிருக்கிறார்.
`மஜ்பூர், மெட்ரோ ரயில் நிலையத்தை மதியம் 12:15 மணியளவில் அடைந்தபோது, எனது திகிலான அனுபவங்கள் ஆரம்பித்தன” என்று விவரிக்கத் தொடங்குகிறார், பத்திரிகையாளர் அனிந்தியா சட்டோபாத்யாய். “இந்து சேனாவைச் சேர்ந்த நபர், எனது நெற்றியில் பொட்டு வைப்பதற்காகத் திடீரென்று என் அருகில் வந்தார். `பொட்டு வைப்பது எனது வேலையை எளிதாக்கும்’ என்றார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. என்னை புகைப்படக் கலைஞராக அடையாளம் காட்டும் எனது கையிலிருந்த கேமராக்களைப் பார்த்தார். ஆனால், மீண்டும் என்னை வற்புறுத்தினார்” என்று தெரிவித்துள்ளார். மேலும் அவரிடம், “நீங்களும் ஒரு இந்து பையா. இதனால் என்ன தீங்கு?” என்று அந்த நபர் கேட்டுள்ளார்.
தொடர்ந்து, “சுமார் 15 நிமிடங்களில் அந்தப் பகுதியில் இருவேறு குழுவினர் கற்களை வீசித் தாக்கதல் நடத்தத் தொடங்கினர். மோடி… மோடி… என்ற முழக்கங்களுக்கு மத்தியில், கரும்புகை வானத்தை நோக்கி செல்வதைக் கண்டேன். கூட்டத்தின் நடுவே, தீப்பிடித்த கட்டடத்தை நோக்கி ஓடினேன். ஆனால், அங்கிருந்த ஒரு சிவன் கோயிலின் அருகே என்னை சிலர் தடுத்து நிறுத்தினர். நான் புகைப்படம் எடுக்கச் செல்கிறேன்” என்று அவர்களிடம் தெரிவித்தேன். அதற்கு அவர்கள், `நீங்களும் ஒரு இந்து. நீங்கள் ஏன் அங்கு செல்கிறீர்கள்? இந்துக்கள் இன்று எழுச்சி பெற்றுள்ளனர்’ எனக் கூறியுள்ளனர்.
தடுப்புகளைக் கடந்து, சிறிது நேரத்தில் அந்த இடத்தை அடைந்து புகைப்படங்களை அவர் எடுக்கத் தொடங்கியுள்ளார். கம்புகள் மற்றும் இரும்புக் கம்பிகளுடன் சிலர் அவரைச் சுற்றியுள்ளனர். கேமராவை அவரிடமிருந்து பறிக்க முயன்றுள்ளனர். ஆனால், அவருடன் சென்ற செய்தியாளர் தலையிட்டு `முடிந்தால் அவரைத் தொடுங்கள்’ எனக் கூறியுள்ளார். பின்னர், அவர்கள் பின்வாங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சிறிது நேரத்தில், கூட்டத்தில் இருந்த சிலர் அவர்களை பின்தொடர்வதாக பத்திரிகையாளர்கள் இருவரும் உணர்ந்துள்ளனர். “நீங்கள் மிகவும் புத்திசாலிதனமாக செயல்படுகிறீர்கள். நீங்கள் இந்துவா அல்லது இஸ்லாமியரா?” என்று பின்தொடர்ந்தவர்கள் கேட்டுள்ளனர். இதைக் குறிப்பிட்ட அவர்கள், “என் மதத்தை உறுதிப்படுத்த என்னுடைய பேன்ட்டை கழற்றப்போவதாக அச்சுறுத்தினர். நான், என்னுடைய கைகளைக் கூப்பி, `நான் சாதாரண புகைப்படக்காரர்’ என்றேன். எனினும், தொடர்ந்து என்னை அச்சுறுத்தினர். ஆனால், என்னை சில மணித்துளிகளில் அங்கிருந்து போகச் சொன்னார்கள்” என்று அதிர்ச்சி விலகாமல் விவரித்தார்.
மேலும், “அந்தப் பகுதியிலிருந்து வெளியேற முடிவுசெய்தேன். என்னுடைய அலுவலக வாகனத்தைத் தேடினேன். அதை எங்குமே காணவில்லை. பின்னர், ஜாஃப்ராபாத்தை நோக்கி நடக்கத் தொடங்கினேன். அவ்வழியாக வந்த ஆட்டோவில் ஏறினேன். டிரைவர் என்னை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்ல சம்மதித்தார். ஆனால், ஆட்டோவில் பொறிக்கப்பட்டிருந்த பெயர் அப்பகுதியிலுள்ள கும்பலுடன் பிரச்னையை ஏற்படுத்தும் என உணர்ந்தேன்” என்றவருக்கு, அவர் நினைத்தபடியேதான் நடந்திருக்கிறது.
நான்கு பேர் அவர்களை வழி மறித்து, அவர்களுடைய சட்டையின் காலரைப் பிடித்து ஆட்டோவிலிருந்து வெளியே இழுத்துள்ளனர். “நாங்கள் பத்திரிக்கையாளர்கள். ஆட்டோக்காரர் ஒரு அப்பாவி” என்று கூறி தங்களை விடுமாறு கேட்டுக் கொண்டதால், ஒருவழியாக அவர்கள் அங்கிருந்து புறப்பட்டிருக்கின்றனர்.
பத்திரிகையாளரை அலுவலகத்தில் இறக்கிவிட்ட பின்னர், `என் வாழ்க்கையில் இவ்வளவு கொடூரமான முறையில் எனது மதத்தைப் பற்றி யாரும் என்னிடம் கேள்வி கேட்டதில்லை’ என்று ஆட்டோ டிரைவர் கூறியிருக்கிறார்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா: https://timesofindia.indiatimes.com/city/delhi/are-you-hindu-or-muslim-toi-photojournalist-recounts-maujpur-horror/articleshow/74291844.cms
விகடன்: https://www.vikatan.com/social-affairs/controversy/a-photo-journalist-shared-his-experience-in-delhi-caa-protest