வன்முறையைத் தூண்டிய பா.ஜ.க தலைவர்கள் மீது FIR கிடையாது! – டெல்லி காவல்துறை

இந்துத்துவ வெறியாட்டத்தில், வீடு, வியாபாரம் அனைத்தையும் இழந்தவர்களுள் ஒரு குடும்பம்
Share this:

எங்கே தொடங்கியது கலவரம்?

1984 அக்டோபர் 31 நினைவு இருக்கிறதா? இந்திய வரலாற்றில் கறுப்பு தினமாகப் பதிந்துபோன நாள்களில் அந்த நாளும் ஒன்று. அன்றைய தினம், தன் இரண்டு சீக்கியப் பாதுகாவலர்களால் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார். டெல்லி பற்றி எரிந்தது. சீக்கியர்களுக்கு எதிராக பெரும்கலவரம் வெடித்தது. டெல்லியில் மட்டும் 2,800 பேர் கொல்லப்பட்டனர். இந்தக் கலவரம்குறித்து அப்போது கருத்து தெரிவித்த ராஜீவ் காந்தி, “ஓர் ஆலமரம் விழும்போது சில அதிர்வுகள் ஏற்படத்தான் செய்யும்’’ என்றார்.

பின்னாளில் ‘அந்தக் கலவரம், அரசு உயரதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் துணையுடன் நிகழ்த்தப்பட்டது’ என்றது சி.பி.ஐ. கலவரத்தை முன்னின்று நடத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்ட காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் டைட்லர், 2007-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது குற்றப் புகார்களிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஏப்ரல் 10, 2013-ல் ஜெகதீஷ் டைட்லர் மீதான குற்றச்சாட்டை மீண்டும் விசாரிக்குமாறு சி.பி.ஐ-க்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. 2018-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி மூன்று பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்று, 1984-ம் ஆண்டு கலவரம் தொடர்பான 186 வழக்குகளை விசாரித்துவருகிறது.

1984-ம் ஆண்டின் கொடூர வரலாறு திரும்புகிறது. அப்போது காங்கிரஸ் எனில், இப்போது இந்துத்துவா அமைப்பினர் மற்றும் இஸ்லாமியர்கள். கூடுதலாகவோ குறைவாகவோ இரு தரப்பினருமே வன்முறையில் ஈடுபடுகிறார்கள். கும்பல் மனநிலையின் வேட்டைவெறி அவர்களின் கண்களில் எரிகிறது. அவர்களில் பலர் பள்ளி, கல்லூரி மாணவர்கள் என்பதைக் கேள்வியுறும்போது நம் வயிறு பற்றி எரிகிறது. இப்போது சமகால வரலாற்றின் பக்கங்களில் அவர்கள் மீண்டும் மீண்டும் ரத்தச்சாயம் பூசுகிறார்கள். எதிர்காலங்களில் இன்னும் அழுத்தமாக நினைவுகூரப்பட வேண்டும் என நினைத்து, கொத்துக் கொத்தாகக் கொலைகளைச் செய்கிறார்கள். காவல்துறையினர், பத்திரிகையாளர்கள், பெண்கள், சாமானியர்கள் எவரும் அவர்களிடமிருந்து தப்ப முடியவில்லை. பிப்ரவரி 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை சுமார் 32 பேர் வன்முறையில் கொலைசெய்யப்பட்டனர். இவர்களில் கணிசமானோர் இஸ்லாமியர். (பார்க்க, பெட்டிச் செய்தி) குறிப்பாக, டெல்லியின் வடகிழக்குப் பகுதி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

எங்கே தொடங்கியது கலவரம்?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தன் குடும்பத்தினருடன் டெல்லியில் இருந்த அதே நேரத்தில்தான், அவர் இருந்த இடத்திலிருந்து 11 மைல் தொலைவில் உள்ள வடகிழக்கு டெல்லியில் இந்த வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த வன்முறை, ஓர் இரவில் தொடங்கி விடவில்லை. கடந்த டிசம்பரில் குடியுரிமை திருத்த சட்டம் கொண்டுவந்தபோது எதிர்ப்பும் ஆதரவும் சேர்ந்தே கிளம்பின. எதிர்ப்பவர்களும் ஆதரிப்பவர்களும் வீதிகளில் இறங்கினர். எதிர்ப்பவர்கள் போராட்டம் நடத்தினர். ஆதரித்தவர்கள் பிரசாரத்தின் மூலம் ஆதரவை வலுப்படுத்திக் கொண்டிருந்தனர்.

ஒருகட்டத்தில், குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்புப் போராட்டங்கள் தீவிரமடைந்தன. போராட்டங்களில் ஈடுபட்ட அலிகார் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டனர். 70 நாள்களைக் கடந்தும் ஷாஹீன் பாக்கில் போராட்டம் தொடர்கிறது. ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்களில் சி.சி.டி.வி-யை உடைப்பது, நூலகத்துக்குள் புகுந்து மாணவர்களைத் துவம்சம் செய்வது என டெல்லி காவல் துறையின் நடவடிக்கைகளும் கேள்விக்குள்ளாகின.

பா.ஜ.க-வின் அனுராக் தாக்கூர், கபில் மிஸ்ரா உள்ளிட்டோர் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகப் போராடுபவர்கள் குறித்துப் பேசிய வெறுப்புப் பேச்சுகள் எட்டுத்திக்கும் எதிரொலித்தன. இவற்றின் ஒட்டுமொத்த உச்ச சம்பவமாகவே வடகிழக்கு டெல்லியில் வன்முறைகள் வேகமெடுத்தன என்கின்றனர் டெல்லி அரசியல் நோக்கர்கள்.

டெல்லி கலவரம்பிப்ரவரி 23-ம் தேதி, மதியம் 2 மணி இருக்கும். டெல்லி ஜாஃப்ராபாத் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டம் ஒன்றை இஸ்லாமியர்கள் முன்னெடுத்தனர். இதில் ஆவேசமடையும் பா.ஜ.க-வின் கபில் மிஸ்ரா, ‘போராட்டங்களை நிறுத்தாவிட்டால் நாங்களும் போராடுவோம். தலைநகரில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இருக்கிறார் என்று பொறுமை காக்கிறோம்’ என்று கொம்பு சீவுகிறார்.

பற்றி எரிந்த வடகிழக்கு டெல்லி

அவ்வளவுதான்… ஜாஃப்ராபாத், மஜ்பூர், கோகுல்புரி, யமுனா விஹார், பஜன்புரி என வடகிழக்கு டெல்லி முழுவதும் இருந்த குடியுரிமை சட்டத்திருத்த ஆதரவாளர்கள் மறுநாளே போராட்டத்தில் இறங்கினர். ஏற்கெனவே திருத்த சட்டத்தை எதிர்த்துப் போராடிவருபவர்கள் இருக்கும் பகுதிக்கு அருகிலேயே ஆதரவுப் போராட்டக்காரர்களும் சூழ்ந்தனர். இரு தரப்பும் மாறி மாறி கோஷங்களை எழுப்பவே, ஒருகட்டத்தில் கைகலப்பானது. அதே கைகலப்பு, வன்முறைக்கும் வழிவகுத்தது.

டெல்லி கலவரம்மசூதிகள், இஸ்லாமியர்களின் வீடுகள், கடைகள் என எதுவும் தப்பவில்லை. தெருவில் ஒரு கார் நின்றிருந்தால்கூட அதன் பதிவு எண்ணை மத்திய அரசின் ‘வாஹன்’ இணையதளத்தில் பரிசோதித்துப் பார்த்தனர். அது இஸ்லாமியர் பெயரில் பதிவாகியிருந்தால், அந்த கார் அதே இடத்திலேயே கொளுத்தப்பட்டது. அதேசமயம் இஸ்லாமியர்களும் சில இடங்களில் வன்முறையில் ஈடுபட்டனர். ஷாரூக் என்கிற இஸ்லாமிய இளைஞர் துப்பாக்கியால் சுட்டதில் காவலர் ஒருவர் பலியானார். மற்றொரு சம்பவத்தில் ஐ.பி அதிகாரி ஒருவரும் முஸ்லிம் தரப்பினரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.

இப்படியாக மூன்று நாள்களில் போர் நடந்து முடிந்த தோற்றத்தில் எரிந்து புகைந்து கொண்டிருக்கிறது வடகிழக்கு டெல்லி. நான்கு நாள்களுக்கு முன் தன் பிறந்த நாளைக் கொண்டாடிய காவலர் ரத்தன் லாலின் உடல், பிப்ரவரி 26-ம் தேதியன்று மஜ்பூரில் கழிவுநீர்க் குழாய் அருகே கண்டெடுக்கப்பட்டது. ஆட்டோ டிரைவர், பிள்ளைகளுக்காக கடைத்தெருவில் ரொட்டி வாங்க வந்தவர் எனப் பலரும் வேட்டையாடப்பட்டனர்.

டெல்லி கலவரம்‘‘எங்களால் படிக்க முடியவில்லை; தொழுகை செய்ய முடியவில்லை. நாங்கள் என்ன தப்பு செய்தோம்?’’ என்று மருத்துவமனை ஒன்றுக்கு வந்த தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை இஸ்லாமிய மாணவி ஒருவர் கேள்வியால் துளைக்கிறார்.

சாந்த் பாக் பகுதியைச் சேர்ந்த ரத்தன் குமார் என்பவர், ‘‘இங்கு இந்து – முஸ்லிம் இடையே எந்தப் பிரச்னையும் இல்லை. சம்பந்தமே இல்லாமல் வன்முறை வெடித்தது. வந்தவர்களில் பாதிப்பேர் வெளியாட்கள். நிச்சயம் இது அரசியல் காரணங்களுக்காகவே நடந்திருக்க வேண்டும்’’ என்றார்.

மஜ்பூரைச் சேர்ந்த ஜாஹிர், ‘‘கடந்த காலங்களில் இங்கு எப்போதுமே மதப்பிரச்னை ஏற்பட்டதில்லை. இது எங்களுக்குப் புதியதாக இருக்கிறது. இங்கே கோயிலும் இருக்கிறது; மசூதியும் இருக்கிறது. ஜாஃப்ராபாத்தில் முஸ்லிம்கள் அறவழியில்தான் போராடினர். ஆனால், எதிர்தரப்பு திட்டமிட்டு வன்முறையைக் கட்டவிழ்த்துள்ளது” என்றார்.

டெல்லி கலவரம்இதை தொடர்ந்து ‘வடகிழக்கு டெல்லிக்கு ராணுவத்தை அனுப்ப வேண்டும்’ என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விடுத்த கோரிக்கையின் பேரில் பாரா மிலிட்டரி, கம்பெனி பட்டாலியன் வடகிழக்கு டெல்லியில் குவிக்கப்பட்டுள்ளன. யார் போராடினாலும் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியோ, ‘உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும்’ என்கிறார். அதற்குப் பிறகு, ‘டெல்லி மக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்’ என, பிப்ரவரி 26-ம் தேதி மதியம் வேண்டுகோள் விடுக்கிறார் மோடி. முன்னாள் நீதிபதியான மார்க்கண்டேய கட்ஜு, `குடியுரிமை திருத்த சட்டத்துக்கு நான் ஆதரவாளன் இல்லைதான். ஆனால், அந்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடுபவர்கள், போராட்டத்தை இப்போதைக்கு நிறுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில், இந்தப் போராட்டங்களால் ஏற்படும் கலவரங்களை முன்வைத்து ஆதாயம் தேடிக் கொள்வது பா.ஜ.க-வினர்தான்’ என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

வன்முறை ஓய்ந்துவிட்டாலும் அது ஏற்படுத்திய தாக்கமும் சுவடும் இன்னமும் வடகிழக்கு டெல்லியில் தொடர்கின்றன. எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்கிற பீதியிலேயே மக்கள் இருக்கின்றனர். எங்கு நோக்கினாலும் சீருடை அணிந்த வீரர்கள் தென்படு கின்றனர். 144 தடை உத்தரவு தொடர்வதால், யார் வெளியே வந்தாலும் ராணுவமும் கம்பெனி படையும் விசாரணை நடத்துகின்றன. வெளியில் தலைகாட்டவே மக்கள் அச்சப்படும் சூழலில், கடைகள் அடைத்துக் கிடக்கின்றன. இயல்பு வாழ்க்கைக்கு எப்போது திரும்புவோம் என்பதே வடகிழக்கு டெல்லிவாசிகளின் இப்போதைய கேள்வி.

1984-ம் ஆண்டும் திட்டமிட்டேதான் கலவரம் நிகழ்த்தப்பட்டது. அப்போது 3,500 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த எண்ணிக்கை 8,000 வரை இருக்கும் என்பது அதிகாரபூர்வமற்ற தகவல். இதில், சஜ்ஜன் குமார் உள்ளிட்ட சிலர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் மீதான வழக்குகள் இன்னும் நடைபெற்று வருகின்றன.

தற்போதைய கலவரத்தில் இதுவரை 32 பேர் கொல்லப்பட்டனர். பலி எண்ணிக்கை குறைவே. அதற்காக, கலவரத்தின் தீவிரத்தைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. 1984-ம் ஆண்டிலிருந்து 36 ஆண்டுகள் இந்தச் சமூகம் மேலும் மேலும் பண்பட்டிருக்கிறது. ஆனாலும்கூட மதம், சாதி, அரசியல் ஆகியவற்றின் பெயரால் கலவரங்கள் தொடர்வது, நாட்டுக்கே அவமானம்.

இந்தக் கலவரம் தொடர்பாக விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான முரளிதர், தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது, ஏற்கெனவே எடுத்த முடிவுதான் எனக் கூறப்பட்டாலும், நாட்டையே உலுக்கும் வகையிலான ஒரு கலவரம் நடந்திருக்கும் சூழலில், அவரை மாற்றியிருப்பது கேள்விகளை எழுப்பியுள்ளது.

இப்போதைய அதிஅவசர தேவை, அமைதி!

***

குஜராத் வன்முறை!

இந்தியாவை உலுக்கிய குஜராத் வன்முறைச் சம்பவங்களையும் நம்மால் எளிதில் மறந்துவிட முடியாது. 2002 பிப்ரவரி 27 அன்று, அயோத்தியிலிருந்து வந்து கொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் மர்மநபர்களால் எரிக்கப்பட்டது. இதில் 58 கரசேவகர்கள் உயிரிழந்தனர். தொடர்ச்சியாக, குஜராத்தில் முஸ்லிம்கள்மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. சுமார் இரண்டாயிரம் பேர் கொல்லப்பட்டார்கள். வதோதராவில் பெஸ்ட் பேக்கரியைச் சூறையாடிய கும்பல், பேக்கரி உரிமையாளர், அவரின் குடும்பம், பேக்கரி பணியாளர்கள் உட்பட 14 பேரை தீவைத்துக் கொன்றது. நரோடா பாட்டியா பகுதியில், பத்து மணி நேரத்துக்குள் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 97 பேர் கொல்லப்பட்டனர். அகமதாபாத் குல்பார்க் சொசைட்டி பகுதியில் 69 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையாளர்களைத் தடுக்கச் சென்ற முன்னாள் காங்கிரஸ் எம்.பி-யான இஹ்ஸான் ஜாஃப்ரியும் கொல்லப்பட்டார்.

அப்போதைய குஜராத் முதல்வரான மோடி, காவல்துறை உயரதிகாரிகளிடம் `முஸ்லிம்கள்மீது இந்துக்கள் கோபத்தைத் தணித்துக்கொள்ளட்டும்’ என்று கூறியதாக, அப்போதைய குஜராத் மாநில உளவுத்துறை துணை ஆணையர் சஞ்சீவ் பட் குற்றம்சாட்டினார். அவரின் குற்றச்சாட்டு நிராகரிக்கப்பட்டது. பிறகு, என்கவுன்டர் வழக்கு ஒன்றில் அவருக்கு சிறைத்தண்டனை வழங்கப் பட்டு, தற்போது சிறையில் இருக்கிறார். இறுதியாக குஜராத் படுகொலையை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நானாவதி மெஹ்தா ஆணையம், 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ‘மோடி குற்றமற்றவர்’ எனத் தீர்ப்பு வழங்கியது.

அதிர்ச்சியில் உறைந்த நீதிபதிகள்!

டெல்லி வன்முறை தொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் முரளிதர் மற்றும் அனுப் ஜெ.பம்பானி அமர்வு, `வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசிய மூன்று பா.ஜ.க தலைவர்கள்மீது ஏன் எஃப்.ஐ.ஆர் போடவில்லை?’ எனக் கண்டித்துள்ளது. ‘குற்றம் சாட்டப்பட்டுள்ள கபில் மிஸ்ராவின் வன்முறையைத் தூண்டும் வீடியோவை, தான் பார்க்கவில்லை’ என்று டெல்லி காவல்துறை துணை ஆணையர் நீதிமன்றத்தில் தெரிவித்தபோது அதிர்ச்சியடைந்த நீதிபதிகள், உடனடியாக நீதிமன்றத்திலேயே கபில் மிஸ்ராவின் வீடியோவைக் காட்சிப்படுத்தினர். கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர், பர்வேஷ் வர்மா ஆகிய மூவர்மீதும் 24 மணி நேரத்துக்குள் எஃப்.ஐ.ஆர் பதிந்து நடவடிக்கை எடுக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், ‘தற்போதைய சூழலில் முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்ய முடியாது. எந்தச் சூழலிலும் அது கலவரத்தைக் கட்டுப்படுத்த உதவாது’ என்று டெல்லி காவல்துறை உயர் நீதிமன்றத்தில் மறுத்துவிட்டது.

யார் இந்த அனுராக் தாக்கூர்?

இந்த அனுராக் தாக்கூர்இமாசலப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் பிரேம் குமார் தூமலின் மகன் அனுராக் தாக்கூர். ஹமீர்பூர் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். பா.ஜ.க-வின் இளைஞரணித் தலைவரான அனுராக் தாக்கூர், மத்திய நிதித்துறை இணை அமைச்சராகவும் பதவி வகிக்கிறார். டெல்லி மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக பேரணி ஒன்றுக்குத் தலைமையேற்ற அனுராக் தாக்கூர், ‘நாட்டின் துரோகிகளைச் சுட்டுக் கொல்வோம்’ என்று கோஷமிட்டு பேரணியை வழிநடத்தியது, கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

யார் இந்த கபில் மிஸ்ரா?

கபில் மிஸ்ராஅம்நெஸ்டி இன்டர்நேஷனல் மற்றும் கிரீன் பீஸ் அமைப்புகளில் பணியாற்றிய கபில் மிஸ்ரா, 2015-ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ-வாக வெற்றிபெற்றவர். கெஜ்ரிவால் அமைச்சரவையில் நீர்வள மேலாண்மை அமைச்சராகவும் பதவி வகித்தார். சில மாதங்களிலேயே அவருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் மற்ற தலைவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தொடர்ந்து 2019, ஆகஸ்ட் மாதம் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். பிறகு பா.ஜ.க-வில் இணைந்த கபில் மிஸ்ரா, 2020-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மாடல் டவுன் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அப்போதே, மிஸ்ராவின் பேச்சு வன்முறையைத் தூண்டுவதாகக் கூறி அவர் தேர்தல் பிரசாரத்தில் பேசுவதற்கு தேர்தல் ஆணையம் 48 மணி நேரம் தடைவிதித்தது. ஒருகாலத்தில் அண்ணா ஹஜாரேவின் ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய கபில் மிஸ்ரா, மோடியை ஐ.எஸ்.ஐ ஏஜென்ட் எனக் கடுமையாக விமர்சித்தவர். காலம்தான் எவ்வளவு கொடியது!

யார் இந்த பர்வேஷ் வர்மா?

டெல்லி... மீண்டும் ஒரு குருதியாட்டம்டெல்லி பா.ஜ.க மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான ஷாஹிப் சிங் வர்மாவின் மகன்தான் பர்வேஷ் வர்மா. மேற்கு டெல்லி தொகுதியில் வெற்றிபெற்றவர். டெல்லி தேர்தலின்போது ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த பர்வேஷ் வர்மா, “ஷாஹீன் பாக்கில் ஆயிரக்கணக்கில் அவர்கள் (முஸ்லிம்கள்) கூடியிருக்கிறார்கள். நாளை அவர்கள் உங்கள் வீடுகளுக்குள் புகுந்து உங்கள் சகோதரிகள், மகள்களை பலாத்காரம் செய்வார்கள்; கொலை செய்வார்கள். இன்று உங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு நேரம் இருக்கிறது. டெல்லி தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெறவில்லையென்றால் மோடி, அமித் ஷாவால்கூட உங்களைக் காப்பாற்ற முடியாது” என்று பேசியுள்ளார். இவரின் இந்தக் கருத்து, கடும் விமர்சனத்தைக் கிளப்பியது.

வன்முறையில் இறந்தவர்கள்!

கிழக்கு டெல்லியில் அமைந்துள்ள ஜி.டி.பி மருத்துவமனை மற்றும் லோக் நாயக் மருத்துவமனை நிர்வாகங்கள், உயிரிழந்தவர்களில் அடையாளம் காணப்பட்டவர்களின் பெயர்களை மட்டும் வெளியிட்டுள்ளன. உயிரிழந்தவர்களின் பெயர்கள்:

இஷக் கான் (24), முகம்மது முதாசர் (30), விர்ஃபான் (50), முகம்மது முபாரக் ஹூசைன் (28), ஷா முகம்மது (35), ப்ரவேஷ் (48), ஜாகீர் (24), மேக்தாப் (22), ஆஷ்ஃபக் (22), ஷாகித் (25), முகம்மது ஃபுர்கான் (30), பாபு சல்மானி (30), மக்ரூஃப் அலி (32), அமான், தில்பர், தீபக் (34), ராகுல் சோலாங்கி (26), ராகுல் தாக்கூர் (23), ரத்தன் லால் (42), அன்கித் ஷர்மா (26)

நன்றி: விகடன்.காம்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.