திருவள்ளூர் இந்து முன்னணி தலைவர் கொலை வழக்கு தொடர்பாக குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டைச் சேர்ந்த வாலிபரை சென்னை போலீசார் நேற்று பிடித்துச் சென்றனர்.
வெட்டிக்கொலை
திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவராக இருந்தவர் சுரேஷ்குமார் (வயது 45). இவர் -கடந்த மாதம் 18-ந் தேதி இரவு மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொலை செய்யப்பட்ட (படத்திலுள்ள) சுரேஷ்குமாரின் சொந்த ஊர் குமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே உள்ள கக்கோடு கிராமம் ஆகும். அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு கக்கோட்டில் தகனம் செய்யப்பட்டது.
சுற்றி வளைத்துப் பிடித்தனர்
இதற்கிடையே சுரேஷ்குமார் கொலையில் பழனியை சேர்ந்த வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக சென்னையில் இருந்து தனிப்படை போலீசார் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் சுரேஷ்குமார் கொலையில் சம்பந்தப்பட்ட வாலிபர் குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி சென்னையில் இருந்து 3 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை போலீசார் குமரி மாவட்டத்திற்கு வந்தனர். கடந்த 2 நாட்களாக அவர்கள் தாங்கள் தேடிவந்த வாலிபரை நோட்டமிட்டு, நேற்று முன்தினம் நள்ளிரவில் அவரை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
சென்னைக்கு அழைத்துச் சென்றனர்
பட்டப்படிப்பு படித்துள்ள இந்த வாலிபர் திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இவர் பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஆர்.காந்தி மீதான தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளி ஒருவரின் நண்பர் என்று கூறப்படுகிறது.
இவரை போலீசார் ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்து முன்னணி தலைவர் கொலை தொடர்பான பல விவரங்கள் இவரிடம் சேகரிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் மேல் விசாரணைக்காக போலீசார் அவரை நேற்று காலை சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.