பழி ஒருபக்கம் – பாவம் ஒருபக்கம் – ஆளூர் ஷாநவாஸ்

http://www.satyamargam.com/images/stories/news2014/aloor-shanawas.jpg
Share this:

நாகையில் பா.ஜ.க செயற்குழு உறுப்பினர் புகழேந்தி என்பவரை கொலை செய்த வழக்கில் குற்றவாளி முனீஸ்வரன் சரண் அடைந்தார்.

வேலூரில் பா.ஜ.க மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டியை கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளான உதயா, சந்திரன், ராஜா, தரணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

பரமக்குடியில் நகராட்சி முன்னாள் பா.ஜ.க கவுன்சிலர் முருகன் கொலை வழக்கில் ராஜபாண்டி, மனோகரன் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்.

ராமேஸ்வரத்தில் ஒன்றிய இந்து முன்னணி செயலாளர் குட்டநம்பு கொலை வழக்கில், ராமச்சந்திரன், சண்முகநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இப்படி கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து, பெண் தொடர்பு, ரியல் எஸ்டேட், சொத்து தகராறு, மணற்கொள்ளை என சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட காரணத்தாலேயே பலரும் கொல்லப்பட்டனர். கொலை செய்தவர்களும் கைது செய்யப்பட்டனர்.

அந்த வரிசையில் சங்கரன்கோவில் இந்து முன்னணி நகரச் செயலாளர் ஜீவராஜ் கொலை வழக்கில் அவரது முதல் மனைவி அய்யம்மாள் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து, குடித்து விட்டு தன்னை கொடுமைப் படுத்தியதாலேயே கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

ஏற்கெனவே நடைபெற்ற தொடர் கொலைகளுக்கு காரணமானவர்கள் இதுபோல் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும்போதே, பரோட்டா சூரி பாணியில் மொத்த கோட்டையும் அழித்துவிட்டு, அத்தனைக்கும் காரணம் போலீஸ் பக்ருதீன் – பன்னா இஸ்மாயில் – பிலால் மாலிக் ஆகியோர்தான் என்று சொல்லி ஃபைலை குளோஸ் செய்ததுபோல், ஜீவராஜ் கொலையிலும் ஏதாவது ஒரு முஸ்லிமை சிக்க வைக்காமல் இருந்தால் சரி.


பொய் வழக்கில் ஆயிஷா கைது செய்யப்பட்டபோது, ‘மனித வெடிகுண்டு ஆயிஷா கைது’ என எழுதியவர்கள், பின்னர் அவர் குற்றமற்றவராக விடுவிக்கப்பட்டபோது பதுங்கிக் கொண்டார்கள்.

‘கோவை குண்டுவெடிப்பின் பின்னணியே மதானிதான்’ என்று அட்டைப்பட செய்தி வெளியிட்டவர்கள், பின்னர் அவர் அவ்வழக்கில் குற்றமற்றவராக விடுதலையானபோது பம்மி விட்டார்கள்.

‘ரயிலில் குண்டுவைத்தது குணங்குடி ஹனீபாதான்’ என கட்டுரை தீட்டியவர்கள், பின்னர் அதில் அவருக்குத் தொடர்பில்லை என தெரியவந்ததை மறைத்து விட்டார்கள்.

‘பாகிஸ்தான் உளவாளி தமீம் அன்சாரி கைது’ என பரபரப்பு ஏற்படுத்தியவர்கள், அவரை வெறும் வெங்காய வியாபாரிதான் எனச் சொல்லி நீதிமன்றம் விடுவித்ததை அமுக்கி விட்டார்கள்.

‘திருவள்ளூர் இந்துமுன்னணி பிரமுகர் கொலை வழக்கில் அல்-உம்மாவினர் கைது’ என தலைப்புச் செய்தி வாசித்தவர்கள், கைது செய்யப்பட்ட இளைஞர்கள் அப்பாவிகள் என விடுவிக்கப்பட்டதை சொல்ல மறுக்கின்றார்கள்.

இராக்கில் தீவிரவாதிகள் இந்திய செவிலியர்களை கடத்திவிட்டார்கள், கொடுமைப் படுத்தி விட்டார்கள், கொடூரமாக நடத்தி விட்டார்கள் என்றெல்லாம் ஓயாமல் கதை வசனம் எழுதியவர்கள், இப்போது மீண்டு வந்த செவிலியர்களின் வாக்குமூலத்தைக் கேட்டு, தமது தவறுகளுக்காக மன்னிப்பா கேட்பார்கள்?

இராக்குக்குள் உனக்கென்னடா வேலை என அமெரிக்காவை கேள்வி எழுப்ப எவனுக்கும் துப்பில்லை. இராக்கை ஏகாதிபத்திய கைக்கூலிகள் ஆள்வதை எடுத்துரைக்க எவனும் தயாரில்லை. இராக் வளத்தை அம்மண்ணுக்குத் தொடர்பில்லாத எவனோ ஒருவன் சுரண்டுவதை அம்பலப்படுத்த எவனுக்கும் துணிவில்லை. அம்மண்ணின் மைந்தர்கள் துப்பாக்கி தூக்கினால் மட்டும், கதை வசனம் எழுத வரிசை கட்டி வந்துவிடுகிறார்கள்.

வெள்ளையனே வெளியேறு என நேதாஜி ஆயுதம் ஏந்தினால், அவர் விடுதலைப் போராளி. அதையே இராக் மக்கள் செய்தால் அவர்கள் தீவிரவாதி.

ஊடகங்களே! உங்கள் பொய்ப் பரப்புரைகளின் ஆயுள் மிக மிக குறைவு என்பதை, இராக்கிலிருந்து நாடு திரும்பியிருக்கும் செவிலியர்களின் வாக்குமூலங்கள் உணர்த்திவிட்டன.

மோடியை தூக்கிப் பிடித்தீர்கள்; முப்பது நாட்களிலேயே அம்பலப்பட்டீர்கள்.

இராக் கிளர்ச்சியை இழிவு செய்தீர்கள்; இருபது நாட்களிலேயே அசிங்கப்பட்டு நிற்கிறீர்கள்.

வாய்மையே வெல்லும்!

– ஆளூர் ஷாநவாஸ்

தொடர்புடைய செய்திகள்:

தொடர்ந்து தோல்வியுறும் இராம கோபாலனின் மத வியாபாரம்!

ஆடிட்டர் ரமேஷ் கொலையும் அல்லறை சில்லறை ரவுடிகளும்

ஃபேமஸ் ஆகறதுக்குதான் குண்டு வீசினேன்!” – விளம்பர ஆசையில் இந்து பிரமுகர்கள்!

கோவையில் தவிர்க்கப்பட்ட பெரும் மதக் கலவரம்!

பாஜக டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை – ரவுடி வசூர் ராஜா கைது

தீவிரவாத ஒழிப்பா – முஸ்லிம் வேட்டையா ?

மீண்டும் ஐ எஸ் ஐ செய்திகள் : வாசிப்பவர் மு.க.

ரயில் குண்டுவெடிப்பும் தயாநிதி மாறனும்! – ஆளூர் ஷாநவாஸ்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.