ஹரியானா (20 மே, 2025): பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ஆதாரத்தின் அடிப்படையில், இந்தியாவைச் சேர்ந்த பெண் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா-வை போலீசார் கைது செய்துள்ளனர்.
வட இந்திய மாநிலமான ஹரியானாவைச் சேர்ந்தவர் ஜோதி மல்ஹோத்ரா. பயணங்கள் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர், பலமுறை அண்டை நாடான பாகிஸ்தானுக்குச் சென்று வந்துள்ளார். கடந்த 2025 மார்ச் மாதம் அவர் கடைசியாக பாகிஸ்தான் சென்றுள்ளார்.
இந்தியாவில் இருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்ட பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவருடன் ஜோதி மல்ஹோத்ரா தொடர்பில் இருந்ததாக ஹரியானா போலீசார் தெரிவித்தனர்.
ஆனால், தனது மகள் உளவாளி என்ற குற்றச்சாட்டை அவரது தந்தை மறுத்துள்ளார். முறையான அனுமதிகளைப் பெற்ற பின்னரே அவர் பாகிஸ்தான் சென்றதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் தன்னை ‘பழைய சிந்தனைகளைக் கொண்ட நவீனப் பெண்’ என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ள ஜோதி மல்ஹோத்ராவுக்கு, யூடியூபில் 3.77 லட்சம் சந்தாதாரர்களும், இன்ஸ்டாகிராமில் 1.33 லட்சம் பின்தொடர்பவர்களும் உள்ளனர்.
உலகின் பல்வேறு நாடுகளுக்கு அவர் எவ்வாறு பயணம் மேற்கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது வீடியோக்களில் வங்கதேசம், சீனா, தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளுக்கு அவர் சென்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் பல்வேறு சுற்றுலாத் தலங்கள் மற்றும் ஆன்மிகத் தலங்களுக்கும் அவர் சென்றுள்ளார்.
ஆனால், அவருக்குத் தெரிந்த வருமான ஆதாரத்தை ஒப்பிடுகையில், இத்தனை நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டதற்கான செலவுகளை எவ்வாறு சமாளித்தார் என்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் ஜோதி மல்ஹோத்ரா தொடர்பில் இருந்ததாகவும், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவருடன் தொடர்ந்து தகவல் பரிமாற்றம் செய்து வந்ததாகவும் போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுடன் அவருக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்ட போலீஸ் எஸ்.பி., சஷாங்க் குமார் சாவன், ஏ.என்.ஐ., செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் யூடியூபருடன் இணைந்து செயல்பட்டிருக்கக்கூடிய மற்ற நபர்கள் குறித்தும் போலீசாருக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவருக்கு ராணுவம் அல்லது பாதுகாப்புத் துறை தொடர்பான ரகசியத் தகவல்களை நேரடியாக அணுகும் வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி சாவன் கூறுகையில், ”அவர் மற்ற யூடியூப் பிரபலங்களுடனும் தொடர்பில் இருந்துள்ளார். ஸ்பான்சர் அடிப்படையிலான பயணங்கள் மூலம் பாகிஸ்தானுக்குச் சென்று வந்துள்ளார்,” என்றார்.
தூதரக அதிகாரி வெளியேற்றம்:
ஜோதி மல்ஹோத்ராவுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் பாகிஸ்தான் தூதரக அதிகாரி அஹ்சன்-உர்-ரஹீம், இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் என இந்திய அரசு மே 13ம் தேதி உத்தரவிட்டது. இந்தியாவில் தனது அதிகாரப்பூர்வ அந்தஸ்துக்கு முரணான செயல்களில் அவர் ஈடுபட்டதாக அரசு குற்றம்சாட்டியது.
இதற்குப் பதிலடியாக, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி ஒருவரும், தனது சிறப்பு அந்தஸ்துக்கு முரணான செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி பாகிஸ்தானில் இருந்து வெளியேறுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டது.
போலீசில் பதிவு செய்யப்பட்ட புகாரின்படி, 2023ம் ஆண்டு பாகிஸ்தான் விசா பெறுவதற்காக டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்குச் சென்றபோது, அஹ்சன்-உர்-ரஹீமை ஜோதி மல்ஹோத்ரா முதன்முறையாகச் சந்தித்துள்ளார்.
பாகிஸ்தான் தொடர்பாக அவர் கடைசியாக வெளியிட்ட வீடியோ, 2025 மார்ச் மாதத்தைச் சேர்ந்தது. அதில், டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் நடைபெற்ற ரம்ஜான் விருந்து நிகழ்ச்சியில் அவர் பங்கேற்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
பாகிஸ்தானில் அவர் எடுத்த மற்ற வீடியோக்களில், ஹிந்து மற்றும் சீக்கிய வழிபாட்டுத் தலங்கள், பிரபலமான உள்ளூர் சந்தைகள் ஆகியவற்றுக்குச் சென்றதுடன், அங்குள்ள மக்களுடன் உரையாடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம்:
இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உளவு பார்த்ததாகக் கூறப்படும் நபர்கள் கைது செய்யப்படுவது புதிதல்ல. இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே இம்மாத தொடக்கத்தில் ஏற்பட்ட ராணுவப் பதற்றத்தைத் தொடர்ந்து ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.
காஷ்மீரின் இந்தியக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள அழகிய பள்ளத்தாக்கான பஹல்காமில், சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் பலர் உயிரிழந்தனர்.
இதற்குப் பதிலடியாக, மே 7ம் தேதி பாகிஸ்தானுக்குள் இருந்ததாக இந்தியா கூறும் பயங்கரவாதக் கட்டமைப்புகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல்களில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என பாகிஸ்தான் மறுத்தது.
அணு ஆயுத பலம் கொண்ட இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து நான்கு நாட்கள் கடுமையான மோதல் நீடித்தது. இதையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிப்பைத் தொடர்ந்து, மே 10ம் தேதி இரு நாடுகளும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன.
https://www.bbc.com/news/articles/cx2e7xv8v80o
https://edition.cnn.com/2025/05/20/india/india-travel-vlogger-spying-pakistan-intl-hnk

