சிமி மீதான தடை நீக்கம் – டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்திய முஸ்லிம் மாணாக்கரிடையே இஸ்லாமிய சிந்தனையுடன் இந்திய வரலாற்றைப் போதித்து வந்த இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம்(சிமி – Students Islamic Movements of India) என்ற முஸ்லிம் இயக்கத்தை 2001 ல் பாஜக திட்டமிட்டு 'பின்லாடனுடன்' தொடர்புடைய தீவிரவாத இயக்கம் எனக் கூறி மத்தியில் ஆட்சியில் இருந்தத் தருணத்தைப் பயன்படுத்தித் தடை செய்தது.

என்ன காரணம் கூறி தடை செய்ததோ அக்காரணத்தை நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் தெளிவிக்க இயலாத நிலையில் நாட்டில் நடக்கும் ஒவ்வொரு அசம்பாவிதத்தோடும் இவ்வியக்கத்தைத் தொடர்பு படுத்தி பொய் செய்திகளைப் பரப்பியதோடு அதற்கு இணங்கி முடிவெடுக்கும் நிலைக்கு மதச்சார்பற்ற அரசு என மார்தட்டிக் கொள்ளும் காங்கிரஸ் கூட்டணி அரசையும் ஏற்படுத்தி வந்தன.
 
 சிமி தடை செய்யப்பட்டப்பின் கடந்த 7 வருட கால அளவில் இவ்வியக்கதோடு தொடர்புடையதாகக் கருதப்பட்ட உறுப்பினர்கள் காவல்துறையினரால் பட்ட இன்னல்கள் சொல்லிமாளாது. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களான குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் பல்வேறு தீவிரவாதக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள் ஏராளம். இவர்களில் பெரும்பாலானவர்களும் கல்வியில் புறக்கணிக்கப்பட்டச் சமுதாயமான இச்சமுதாயத்தில் விரல்விட்டு எண்ணும் வகையில் மேற்படிப்பு படித்தப் பட்டதாரிகள் என்பது பரிதாபம். இவ்வொரு விஷயத்தை மட்டும் கவனத்தில் எடுத்து இவ்விஷயத்தை ஊன்றி பார்த்தால் சிமியின் மீதான தடையும் அதன் பின்னர் அதன் மீது வாரி இறைக்கப்பட்டக் குற்றச்சாட்டுகளும் காவல்துறையில் இருக்கும் சங்கக் கறுப்பு ஆடுகளின் துணையுடன் மலிவு விலைக்கு விலைபோகும் மூன்றாம் தரப் பத்திரிக்கைகளை விடக்கேவலமான விளம்பரச் சிந்தைக் கொண்ட சில ஊடகங்களைக் கைகளில் வைத்துக் கொண்டு சங்கபரிவாரம் செய்த மிகப்பெரிய சதி என்பது விளங்கும்.
 
 2001 க்குப் பின் நாட்டில் நடந்த பெரும்பாலான குண்டுவெடிப்புகளிலிருந்து பாராளுமன்றத் தாக்குதல் வரை அனைத்துக்கும் காரணம் சிமி தான் என கூவிக் கொண்டாடிய ஊடகங்களையும் அதற்கு உரமூட்டிய காவல்துறை கறுப்பு ஆடுகளையும் இவற்றிற்கு எண்ணை ஊற்றி தீமூட்டிய சங்கபரிவாரத்தையும் அவைகளின் அரசுகள் சிமி மீது சுமத்தியக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பச்சைப் பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் புதுடில்லி உயர்நீதி மன்றம் அதிமுக்கிய தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
 
 ஆம், பின் லாடனுடன் தொடர்புடையதாகவும் நாட்டில் நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளை நடத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்ட சிமியின் மீதான ஆதாரங்கள் இல்லாத தடையை நீக்குவதாக டில்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுவும் மத்திய உள்துறை அமைச்சகம் அதன்மீதான தடையை 2010 வரை நீட்டுவதற்காகப் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், 'சிமி மீதான தடையை நீட்டிப்பதற்கான புதிய ஆதாரங்கள் என்ன உள்ளது?' என்ற நீதிபதியின் கேள்விக்கு மவுனத்தைப் பதிலாகவே கொடுக்க முடிந்தது. 'சிமி மீதான தடைக்கு நியாயமான காரணங்களை இதுவரை நிரூபிக்காத நிலையில் புதிதாக எவ்வித ஆதாரமும் சமர்ப்பிக்க இயலாத நிலையில் மேலும் நீட்டிப்பதற்கான எவ்வித முகாந்திரமும் இல்லை' என நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.
 
 இப்பொழுது உயர்ந்து நிற்கும் கேள்வி: எனில் பாராளுமன்றத் தாக்குதல் உட்பட நாட்டில் நடந்தக் குண்டு வெடிப்புகளின் சூத்திரதாரிகள் யார்?. நாண்டட், மாலேகான், தென்காசி குண்டுவெடிப்புகளின் பின்னணியில் செயல்பட்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளவர்களின் மீது இனியாவது உளவுத்துறை மற்றும் காவல்துறையின் கவனம் திரும்புமா?. பெயருக்காவது ஒரு விசாரணை அந்த இயக்கத்தின் மீது நடக்குமா?

பொறுத்திருந்து பார்ப்போம்!