திறமை மருத்துவத்துறைக்குத் தேர்வுப் பெற்றுள்ளது! இனி தேவை…

பெஹ்ராம்பூர்: முர்ஷிதாபாத்தில் ரிக்ஷா இழுப்பவரின் மகள், ஆண்டில் ஒரு புத்தாடையும் நாளுக்கு இருவேளை உணவைவிட அதிகம் பெறுவது அரிதான நிலையில் இருந்த மாணவி கல்கத்தாவிலுள்ள மருத்துவக் கல்லூரியில் கல்விப்பெற தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ஆயினும் அதில் அவருக்கு கல்வி பெறுவது இன்னும் ஒரு கனவைப் போன்ற நிலையிலேயே உள்ளது.

ஸஃபீனாவின் தந்தையின் மாதாந்திர வருமானத்தைவிட மூன்று மடங்கு அதிகமாக நுழைவு கட்டணம் கட்ட வேண்டியுள்ளது. இது மட்டுமின்றி ஆரம்ப நுழைவுகட்டணமாக ரூபாய் 6,500ம் மாதம் ரூபாய் 750 ட்யூஷன் கட்டணம் மற்றும் தங்குமிட வசதிக்கும் கட்ட வேண்டியுள்ளது. ‘இவ்வளவு பெரிய தொகையை (ரூ 6,500) நான் எனது வாழ்க்கையில் பார்த்ததே இல்லை’ என்று ஸஹாதத் பிஸ்வாஸ் – ஸஃபீனாவின் தந்தை கூறினார்.

தந்தை ஸஹாதத்திற்கு மகள் ஸஃபீனாவின் இந்த அபாரமான தகுதி ஒரு விதத்தில் கவலைக் கிடமாகியுள்ளது. ஸஃபீனாவிற்கு நான் இந்தத் தொகையைச் செலவிட்டு மருத்துவ கல்லூரியில் சேர்த்தால் எனது மற்ற மூன்று குழந்தைகளின் கல்விக்குச் செலவு செய்வது என்னால் இயலாததாகி விடும் என்று அவர் கூறினார்.

ஸஃபீனா எனும் இம்மாணவி உள்ளூர் மதரஸாவில் பத்தாம் வகுப்புவரை படித்தார். பத்தாம் வகுப்பில் அவர் 94%  மதிப்பெண்கள் பெற்றார். பின்னர் கல்விச் சேவை உதவி நிறுவனத்தினர் ஒருவர் உதவியோடு ஹவ்ராவில் ஒரு ஹாஸ்டலில் சேர்ந்து பிளஸ் டூ வரை படித்தார்.

அதுவே அவள் முதல் முறை மின்சார விளக்கின் கீழ் படிக்கும் முதல் வாய்ப்பாகவும், மின் விசிறியின் கீழ் தூங்கும் முதல் அனுபவமாகவும் இருந்தது.

பிளஸ் டூ தேர்வில் அவள் 82.4% மதிப்பெண்கள் பெற்று மாநில இணை நுழைவுத் தேர்வில் 247 ம் இடத்தை வகித்தார். இதன் மூலம் அவள் கல்கத்தாவில் உள்ள ஒரு நல்ல மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து கல்வியைத் தொடரும் தகுதியைப் பெற்றார்.

அவருடைய கிராமத்தில் இருந்த ஒரு மாணவன் அறுவைச்சிகிச்சை பிரிவின் டாக்டர் ஆன செய்தியறிந்ததில் இருந்து தானும் டாக்டர் ஆக வேண்டுமென்பது ஸஃபீனாவின் கனவாக இருந்தது. உபைதுர் ரஹ்மான் எனும் அந்த மாணவன் பாப்தா அஜீஸியா ஹை மதரஸா எனும் அதே மதரஸாவில் 20 ஆண்டுகளுக்கு முன்பு படித்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்கள் கங்காபுரில் உள்ள குடிசை வீட்டில் மண்ணெண்ணை விளக்குடன் படித்து ஒரு நாள் இப்படி மருத்துவக் கல்லூரியில் சேரக்கூடிய தகுதிவரை அடைய முடியும் என்று நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை என்று 19 வயது இம்மாணவி மகிழ்ச்சியுடன் கூறினார். ஸஃபீனா இந்த மண் குடிசையில் தமது இதர சகோதர சகோதரி உட்பட மொத்தம் நால்வரும் ஒரே மண்ணெண்ணை விளக்கின் குறைந்த வெளிச்சத்தில் அமர்ந்து படித்து வந்தனர்.

அக்கா ஸஃபீனாவைப் பார்த்து மற்ற மூன்று குழந்தைகள் ஷபீர் வயது 17  ஆரீஃப் வயது 15 மற்றும் ஸகீனா வயது 14 ஆகியவர்களும் நன்றாக படிக்கும் நிலையில் உள்ளனர்.

கல்கத்தாவில் தொழில் செய்துவரும் கங்காபூரைச் சேர்ந்த ஒரு வியாபாரி ஸஃபீனாவை அல் அமீன் மிஷன் எனும் கல்விச் சேவையுதவி அறக்கட்டளையிடம் அறிமுகப்படுத்தினார். அதன் செயலாளராகிய நூருல் இஸ்லாம் கூறியதாவது ‘ஸஃபீனா மிகவும் அறிவுகூர்மையான மாணவியாவாள். அவளுக்கு கல்வியுதவி வழங்குவதில் நாங்கள் பெருமையடைகிறோம்.’

அவளுடைய தந்தையின் கவலையைப் பற்றி கூறிய போது நூருல் கூறினார் ‘அரசாங்கமோ வேறு ஒருவரோ இந்த மாணவிக்கு உதவிட முன் வரவில்லையென்றால் நாங்கள் அவளுடைய கனவை நனவாக்கிட முழு ஆதரவு அளித்திடுவோம்.’

ஹவ்ராவிலிருந்து இயங்கும் இந்த அறக்கட்டளைக்குத் தங்கி படிக்கும் வசதியுடைய கல்விக்கூடங்கள் கல்கத்தாவிலும் முர்ஷிதாபாத் மற்றும் தெற்கு தினாய்பூரிலும் உள்ளன. ஹவ்ராவிலும் கல்கத்தாவிலும் உள்ள பள்ளிக்கூடங்களில் மட்டுமே பிளஸ் டூ வரை உள்ளது ஆயினும் போர்டின் அங்கீகார வசதியின்மையால் தேர்விற்கு பிற நிறுவனங்கள் மூலம் மாணவர்களை அனுப்புகின்றனர். ஸஃபீனா தனது பிளஸ் டூ தேர்வை ஹூக்ளியில் உள்ள ஒரு பள்ளியின் மூலம் நிறைவு செய்தார்.

இந்த அறக்கட்டளையில் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். ஆயினும் ஸஃபீனா போன்ற சிறந்த திறமைச்சாலிகள் விதி விலக்கு பெறுகின்றனர்.

ஸஃபீனாவின் தந்தை ஸஹாதாத் ‘நானும் என் மனைவி பஹாருனும் பள்ளிக்குச் (படிக்க) சென்றதே இல்லை. ஆனால் இப்போது ஸஃபீனாவின் திறமையைப் பார்க்கும் போது அவள் கனவு நிறைவேற வேண்டும் என்று விரும்புகிறோம்.’ என்று கூறினார்.

செய்தி : இப்னு ஹனீஃப்

கல்வி ஏழைக்கு எட்டாக் கனி என்பார்கள். சகோதரி ஸஃபீனாவுக்கு இறைவன் அதை எளிதாக்கட்டும்! – சத்தியமார்க்கம்.காம்