நாட்டை கடவுளாலும் காப்பாற்ற முடியாது!-உச்ச நீதிமன்றம்.

டெல்லி: 'கடவுளே இறங்கி வந்தாலும் இந்த நாட்டை அரசியல்வாதிகளிடமிருந்து காப்பாற்ற முடியாது' – இம்முறை இப்படி வாய்ஸ் கொடுத்திருப்பது ரஜினிகாந்த் அல்ல உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.என். அகர்வால் மற்றும் ஜி.எஸ். சாங்வி இருவரும் தான் இப்புதிய வாய்ஸுக்குச் சொந்தக்காரர்கள்.

அரசு குடியிருப்புகளைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருக்கும் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைக்கு வகைசெய்யும் புதிய சட்டத்திருத்தம் கொண்டு வர அரசு மறுத்து விட்டதால் கடுப்படைந்த நீதிபதிகள் நாட்டை ஆளும் அரசுக்கு எதிராகத் தெரிவித்த கருத்துதான் மேலே நீங்கள் படித்தது.

இது மட்டுமல்ல… இது வரை எந்த வழக்கிலும் நீதிபதிகள் சொல்லாத, அரசுக்கெதிரான கடுமையான கருத்துக்களையும் இவ்விரு நீதிபதிகளும் தெரிவித்துள்ளனர்.

'இந்த அரசின் நடவடிக்கைகள் எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது. ஒரு சாதாரண எழுத்தருடைய கையெழுத்துக்கெதிராகக் கூட நடவடிக்கை எடுக்கத் திராணியற்ற அரசாகத்தான் இது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தியாவை கடவுளால் கூட காப்பாற்ற முடியாத அளவுக்கு மோசமான தேசமாகிவிட்டது. ஒருவேளை கடவுளே இந்த நாட்டுக்கு இறங்கிவந்தால்கூட, அவரால் இங்குள்ள மோசமான நிலைமைக்கு எதிராக எதுவும் செய்ய முடியாது. இந்த தேசத்தின் ஒழுங்கீனங்களை மாற்ற முடியாது. நம் நாட்டு லட்சணம் அப்படி.

பல்வேறு பிரச்சினைகளில் அரசின் கையாலாகாத்தனம் வெட்ட வெளிச்சமாகத் தெரிவதால்தான், வெறுத்துப் போன மக்கள் பொது நல வழக்குகளோடு கோர்ட் படி ஏறுகின்றனர்'.

நேரத்துக்கொரு பேச்சு:

'அரசியல்வாதிகளைப் பாருங்கள். இவர்களை விட கேவலமாக யாராலும் நடந்து கொள்ள முடியாது. அதிகாரம் கையிலிருக்கும்போது நீதிமன்றத்தைவிட அரசு இயந்திரமும், நாடாளுமன்றமும் தான் பெரிது என முழங்குவார்கள். நீதிபதிகளை விமர்சிப்பார்கள். ஆனால் அதிகாரத்தில் இல்லாதபோது, நியாயம் தேடி அதே நீதிமன்றத்துக்கு ஓடிவருவார்கள்', என இரு நீதிபதிகளும் அரசியல்வாதிகளின் நேரத்திற்குத் தகுந்தது போல் தங்களை மாற்றிக் கொள்ளும் பச்சோந்தித்தனத்தைக் கடுமையாக விமர்சித்தனர்.

'அரசுக் குடியிருப்புகளில் சட்டவிரேதமாக ஆக்கிரமித்திருக்கும் உயர் அதிகாரிகளை விரட்ட தற்போதுள்ள இந்தியக் குற்றவியல் சட்டம் 441-ல் போதிய வழிவகைகள் இல்லாததால் அதைத் திருத்த வேண்டும், கடுமையான சட்டங்களைக் கொண்டுவந்து இந்த அதிகாரிகளுக்குத் தண்டனை தரவேண்டும்' என்று சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல வழக்குத் தொடரப்பட்டது.

இது குறித்து உடனடியாக பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் இதற்கு பொறுப்பான பதிலைத் தராத மத்திய அரசு 'புதிய சட்டங்கள் எதுவும் தேவையில்லை. ஏற்கெனவே உள்ள சட்டத்தைப் பயன்படுத்தியே கடும் நடவடிக்கை எடுக்க முடியும்' என கூடுதல் சொல்லி சிட்டர் ஜெனரல் அமரீந்தர் சரண் மூலம் பதிலளித்தது.

இதில் கடுப்பான நீதிபதிகள் தான் அரசை இப்படி விளாசித் தள்ளிவிட்டனர். நாட்டில் உள்ள கிட்டத்தட்ட 1 லட்சம் உயர் தர அரசுக் குடியிருப்புகள் பெரும்பாலானவற்றில் பதவிக் காலம் முடிந்த பின்னரும் அரசு அதிகாரிகள் பலர் ஆக்கிரமித்துள்ளனர். இன்னும் பல குடியிருப்புகளில் அதிரகாரிகளின் பெயர்களில் அவர்களது உறவினர்கள் ஆக்கிரமித்துள்ளனர். சில அதிகாரிகள் உள்வாடகைக்கும் (Sun-Letting) விட்டுள்ளார்களாம்.

ஆனால் அரசு வழக்கறிஞரோ இவற்றை மறுத்ததோடு, 'மொத்தம் 300-க்கும் குறைவான குடியிருப்புகள் மட்டுமே அந்த மாதிரி சட்டவிரோத ஆக்கிரமிப்பில் இருப்பதாகவும், மீதி 99 ஆயிரம் வீடுகளில் எந்தப் பிரச்சினையும் இல்லை' என்றும் ஒரே போடாகப் போட்டார்.

'அப்படியெனில் மனுதாரர் எங்களிடம் அளித்துள்ள அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் பொய்யா…? அரசே குற்றவாளிகளுக்கு உடந்தையாய் இருந்தால் எப்படி…?' என மடக்கிய நீதிபதிகள், அடுத்த சில நிமிடங்களில் மத்திய அரசை காய்ச்சி எடுத்துவிட்டார்கள்!

நன்றி: தட்ஸ்தமிழ் ஆகஸ்ட் 06, 2008

 

சமீபத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கட்சி பாகுபாடின்றி அரசியல்வாதிகள் காசுக்கு விலைபோன அசிங்கமும் அதிகாரத்தை நிலைநிறுத்த எப்படிப்பட்டக் கேவலமான செயல்பாடுகளுக்கும் இறங்கத் தயார் என்பதை நிரூபித்த ஆளும் கட்சியின் செயல்பாட்டின் மூலம் அரசியல்வாதிகளின் அசிங்கமான முகம் நாட்டு மக்களுக்கு…. அல்ல, உலக மக்களின் முன் பட்டவர்த்தனமாக வெளிச்சமான நிலையில், நாட்டின் உயர் நீதிபீடம் கூறியிருக்கும் கருத்துகள் நாட்டின் அரசியலில் உடனடியாக ஒரு துப்புரவு அவசியம் என்பதைப் பறைசாற்றி நிற்கின்றன.

நாட்டுக்குத் தேவை, தன்னலமில்லா அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் கூடிய தலைவர்களே. அப்படிப்பட்டத் தலைவர்களை உருவாக்கி நாட்டுக்கு அளிக்கும் சக்தி, 'எந்நேரமும் நாம் கண்காணிக்கப்படுகின்றோம்' என்ற இறை ஆளுமையை மக்கள் மனதில் விதைப்பதை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாத்தினால் மட்டுமே முடியும். – சத்தியமார்க்கம்.காம்