‘மார்க்கத் தீர்ப்பு வழங்குவதற்குப் பெண் நீதிபதிகளை நியமிக்கும் திட்டத்தை விரைவில் செயல்படுத்தப் போகிறோம்’ என்ற சிரியாவின் தலைமை நீதிபதி (முஃப்தீ) அல்-ஷைக் அஹ்மத் பத்ருத்தீன் ஹஸ்ஸூனின் அண்மை அறிவிப்பு, இஸ்லாமிய அறிஞர்கள் இடையே ஒரு புதிய கருத்துக் களத்தை உருவாக்கி இருக்கிறது.
‘இஸ்லாமியச் சட்டக் கல்லூரியில் படித்துத் தேறியப் பெண்களுள் பலர் நீதிபதிகளாகப் பொறுப்பேற்கத் தகுதி பெற்றுத் தயாராக உள்ளனர். பெண்கள் தொடர்பான அன்றாட நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வு சொல்வதற்குப் பெண் நீதிபதிகள் மிகப் பொருத்தமானவர்களாகத் திகழ்வர். மார்க்கத் தீர்ப்புக் குழுவின் மேல்மட்ட அளவில் பெண் நீதிபதிகள் உறுப்பினர் பொறுப்பும் வகிப்பர்’ என்ற ஹஸ்ஸூனின் கருத்தை சிரியாவின் இஸ்லாமியப் பெண் அறிஞர்கள் பெரிதும் வரவேற்று உள்ளனர்.
‘பெண் அறிஞர்களுக்குச் சாதகமானத் தலைமை நீதிபதியின் அறிவிப்பு வரவேற்புக்குரியது’ என்று ஹுதா ஹப்ஷ் என்ற இஸ்லாமியப் பெண் அறிஞர் ‘அரபிக் ஆன் லைன் நியூஸ்’ நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
‘திருமண உறவுகளிலும் குடும்ப உறவுகளிலும் ஏற்படும் பிணக்குகளிலும் பிரச்சினைகளிலும் மட்டுமின்றி பெண்கள் தொடர்பான அனைத்துச் சிக்கல்களிலும் தெளிவான தீர்ப்பைப் பெண் நீதிபதிகளால் வழங்க முடியும்’ எனத் தன்னம்பிகையுடன் கூறும் ஹுதா, ‘பெண் நீதிபதிகளிடம் பெண்கள் தங்கள் பிரச்சினைகளைத் தயக்கமின்றி மிக வெளிப்படையாகக் கூறும் வாய்ப்பு அதிகமிருக்கிறது’ என்று மேலும் கூறினார்.
இதே கருத்தை, சவூதி அரேபியாவின் நீதித்துறை அமைச்சக ஆலோசகரும் ஷூரா கமிட்டியின் உறுப்பினருமான அல்-ஷைக் அப்துல் முஹ்ஸின் அல் ஒபைக்கான், ‘தங்களின் நீதிபதி ஒரு பெண்ணாக இருந்தால் தங்கள் உள்மட்டப் பிரச்சினைகளைப் பெண்கள் வெளிப்படையாக நீதிபதியிடம் எடுத்துரைக்க இயலும்’ என்று எதிரொலித்தார். ‘பெண் நீதிபதிகளுக்குப் பெண்களின் பிரச்சினைகளைத் தெளிவாக அணுகுவதும் தீர்த்து வைப்பதும் மிக எளிதாக இருக்கும்’ என்று மேலும் அவர் கூறினார். சவூதியில் ‘பெண்நீதிபதிகளைப் பதவியில் அமர்த்த வேண்டும்’ என்று அல்-ஒபைக்கான் வலியுறுத்தி வருபவர் என்பது குறிப்பிடத் தக்கது.
***
இனி, வரலாற்றின் ஏடுகளிலிருந்து…
ஒரு பெண் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘மாதவிடாய் நின்ற பிறகு எப்படிக் குளிப்பது?’ எனக் கேட்டபோது நபி(ஸல்) அவர்கள் அவள் குளிக்கும் முறையை அவளுக்குப் படிப்படியாக விளக்கி விட்டு ‘கஸ்தூரி தோய்த்தப் பஞ்சினால் அதைச் நீ சுத்தம் செய்து கொள்’ என்றார்கள். ‘எப்படிச் சுத்தம் செய்வது?’ என அப்பெண் மீண்டும் கேட்டார். ‘அதைக் கொண்டு நீ சுத்தம் செய்து கொள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மீண்டும் அந்தப் பெண், ‘எப்படி?’ என்று கேட்டபோது, ‘ஸுபஹானல்லாஹ்! சுத்தம் செய்து கொள்!’ என்று கூறினார்கள். உடனே நான் அந்தப் பெண்ணை என் பக்கம் இழுத்து, ‘கஸ்தூரி கலந்த பஞ்சைக் கொண்டு மாதவிடாய் பட்ட இரத்தச் சுவட்டைச் சுத்தம் செய்து கொள்’ என்று அவளிடம் கூறினேன் என ஆயிஷா(ரலி) அறிவித்தார். (புகாரீ 303).
அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் குரைஷிப் பெண்களுள் மிகச் சிறந்த அறிவாளியாகவும் கவிதை இயற்றக் கூடிய அளவுக்கு அரபு மொழிவளம் மிக்கவராகவும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களது மறைவுக்குப் பின்னர் மதினமாநகரில் மார்க்கத் தீர்ப்பு வழங்கக் கூடிய அளவுக்கு இஸ்லாத்தின் சட்டங்களில் தேர்ச்சி பெற்ற பெண் நீதிபதியாகவும் திகழ்ந்தார்.
பழமையைப் புதுமை என்று கூறிக் கொண்டாலும் புதுமையைப் பழமை என்று கூறினாலும் பெண்மைக்கு நன்மை விளைந்தால் மகிழ்வே!