பிரணாப் முகர்ஜி இந்தியாவின் புதிய வெளியுறவு அமைச்சர்

{mosimage}புதுதில்லி: இந்தியாவின் புதிய வெளியுறவு அமைச்சராக திரு.பிரணாப் முகர்ஜி நியமிக்கப் பட்டுள்ளார். உணவுக்கு எண்ணெய் திட்டத்தில் வோல்கர் அறிக்கையில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு முந்தைய வெளியுறவு அமைச்சர் திரு நட்வர்சிங் தன் பதவியை ராஜினாமா செய்தார். கிட்டத்தட்ட ஓராண்டு காலமாகக் காலியாக இருந்து வந்த இந்தப் பதவிக்கு தற்போது மன்மோகன்சிங் அரசு திரு முகர்ஜியை நியமித்துள்ளது.

இந்திய-பாகிஸ்தான் உறவுகள் மேன்மேலும் நலிவடைந்து வரும் தற்போதைய சூழலில், வெளியுறவுத் துறையில் பழுத்த அனுபவம் கொண்டுள்ள திரு முகர்ஜி இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டிருப்பது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடும் எதிர்ப்பைச் சந்தித்துவரும் இந்திய-யுஎஸ் அணுஆயுத ஒப்பந்தமும் இவரது தற்போதைய முக்கியப் பணிகளுள் ஒன்றாக இருக்கும்.

சீன அதிபர் ஹு-வின் இந்தியப் பயணம் நெருங்கி வரும் சூழலில் சீனாவுடனான எல்லைத் தகராறுக்கு ஒரு சுமுகத் தீர்வுக்கு திரு முகர்ஜி திட்டம் வகுப்பார் என்றும் தெரிகிறது.

கடந்த ஓராண்டுகாலமாக பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங்கே இதுவரை வெளியுறவுத் துறையையும் கூடுதலாக நிர்வகித்து வந்தார். திரு முகர்ஜி இதுவரை வகித்து வந்த பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவி திரு ஏ.கே அந்தோணிக்கு வழங்கப்பட்டுள்ளது.