இராக் விவகாரத்தில் US முட்டாள்தனம் – US உயர் அலுவலர்

பக்தாத்: US, இராக் விவகாரத்தில் பெரும் முட்டாள்தனத்துடனும் முரட்டுத்தனமாகவும் நடந்து கொண்டதாக US வெளியுறவு அமைச்சக அலுவலர் ஒருவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

US வெளியுறவு அமைச்சக உயர் அதிகாரியான ஆல்பெர்ட்டோ ஃபெர்னாண்டஸ் என்பவர், அல்ஜஸீரா தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில் இவ்வாறு தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவிக்கிறது.

“நாங்கள் எங்களால் முடிந்த அளவு முயற்சி எடுத்து செய்த செய்கைகள் எல்லாம் பெரும் விமர்சனத்துக்குள்ளாகின. எனினும் US அரசு தரப்பு இந்த விவகாரத்தில் முட்டாள்தனமாகவும், பெரும் மூர்க்கத்துடனுமே நடந்து கொண்டது” என்று அவர் தெரிவித்தார்.

இந்தச் செவ்வியை அவர் அரபு மொழியில் அளித்தார். இதனை அல்ஜஸீரா ஒளிபரப்பியுள்ளதுடன், தனது ஆங்கிலத் தளத்திலும் பதிவு செய்துள்ளது.

இருப்பினும் இராக்கில் நடைபெறும் இத்தனை அழிவுகளும் மனித உயிர்பறிப்புகளும், இராக்கில் அமைதியை நிலைநாட்டவே என்று US நம்புவதாகவும் உரையாடலுக்கு US என்றுமே தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். US-ன் நிலை குறித்து இராக்கின் தற்போதைய அரசுக்கு நன்றாகவே தெரியும் என்றும் அவர் கூறினார்.

இந்தச் செய்தி குறித்து US செய்தித் தொடர்பாளர் கருத்துத் தெரிவிக்கையில் திரு ஆல்பெர்ட்டோவின் கூற்றுகள் திரிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். எனினும் அவர் சொன்னது இதுதான் எனவும் அவர் செவ்வியின் போது “முட்டாள்தனம்” மற்றும் “முரட்டுத்தனம்” என்ற சொற்களைப் பயன்படுத்தியதையும் அல்ஜஸீரா உறுதி செய்துள்ளது.

ஆட்சி கவிழ்க்கப்பட்ட முந்தைய அதிபர் சதாம் ஹுசைனின் பாத் கட்சியினைச் சேர்ந்த ஆயுதம் தாங்கிய குழு ஒன்றின் பேச்சுவார்த்தைக்கான கருத்து ஒன்றைக் குறித்தே மேற்கண்ட செவ்வி மேற்கொள்ளப்பட்டதாக அல்ஜஸீரா தெரிவிக்கிறது.

இதற்கிடையே US அதிபர் புஷ் தற்போது US இராணுவத்தினருக்கு இராக்கில் மிகவும் கடுமையான காலம் என்று கூறியிருக்கிறார். இந்த மாதத்தில் மட்டும் 80 இராணுவ வீரர்கள் இவ்வாண்டிலேயே மிக அதிகமாக இறந்துள்ளனர். இராக்கிலிருக்கும் யுஎஸ் இராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் வில்லியம் கால்டுவெல் யுஎஸ் படையினரின் நடவடிக்கைகளுக்கு பலனில்லாமல் இந்த மாத முதல் மூன்று வாரங்களில் மட்டும் இராக்கில் வன்முறை 22 விழுக்காடு அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.