ஆப்கனில் ஜெர்மானியப் படையினரின் ‘அமைதி காக்கும்’ பணி!

{mosimage}குவாண்டனாமோவிலும், அபூகுரைபிலும் மனித உரிமைகளை நிலைநாட்டுவதாகக் கூறிக்கொள்ளும் யுஎஸ் அங்குள்ள கைதிகளிடம் சற்றும் மனிதத்தன்மையற்ற சித்திரவதைகளை விசாரணை என்ற பெயரில் அரங்கேற்றி வருகிறது. இது ஒருபுறமிருக்க, தற்போது ஆப்கனில் 'அமைதியை நிலைநாட்டுவதற்காக' அங்கு நிலைகொண்டுள்ள நேட்டோவின் சார்பாகப் பங்கேற்றுள்ள ஜெர்மன் வீரர்கள் ஒரு மண்டையோட்டுடன் அதனைக் கேவலப் படுத்தும் நிலையில் எடுக்கப்பட்ட படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

இந்தப் படங்கள் தனக்கு அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்ததாக ஜெர்மன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஃப்ரான்ஸ் ஜோசஃப் ஜங் தெரிவித்துள்ளார். ஜெர்மன் படைவீரர்கள் இவ்வாறு நடந்து கொள்வது சற்றும் தமக்கோ தமது நாட்டிற்கோ தமது இராணுவத்திற்கோ ஏற்புடையதன்று என்றும் இந்த மாபாதகச் செயலைச் செய்திருப்போர் மீது இராணுவ மற்றும் குற்றவியல் வழக்குகள் தொடுக்கப்பட்டு அதிக பட்ச தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இப்படி நடப்பவர்களுக்கு ஜெர்மன் படையில் இடம் இல்லை எனவும், முழு அளவில் முனைப்புடன் உயர்மட்ட விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒருபடத்தில் ஒரு ஜெர்மன் வீரர் ஏளனமாக மண்டையோட்டை கையில் பிடித்திருப்பதும், மற்றொரு படத்தில் கம்பிகளை வெட்டும் கருவியில் மண்டையோட்டை வெட்டுவது போல் வைத்திருப்பதும், இன்னொன்றில் மண்டையோட்டைக் கேவலைப்படுத்தும் வகையில் தன் பிறப்புறுப்பின் அருகே வைத்திருப்பதும் ஜெர்மனியின் பிரபலப் பத்திரிக்கையான பில்ட்(Bild)  பத்திரிகையில் வெளியாகி உள்ளது. இந்தப்படங்கள் 2003ல் எடுக்கப்பட்டதாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

ஜெர்மன் அதிபர் ஏங்கலா மர்க்கல் இந்த படங்களால் அதிர்ச்சியும் வெறுப்பும் அடைந்துள்ளதாகக் கூறியுள்ளார். ஆப்கனில் சட்ட ஒழுங்கை நிலைநாட்டவும், அங்குள்ள உள்ளூர் போர்க்குழுக்களின் இடையே சண்டை மூளாமல் காக்கும் பணிக்காகவே நேட்டோ சார்பில் சுமார் 2800 ஜெர்மன் படையினர் அங்குள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.