பாஜக தலைவரின் ஷாப்பிங் காம்ப்ளக்ஸிலிருந்து வெடிப் பொருட்கள் வேட்டை!

தெற்குக் கர்நாடகாவிலுள்ள புத்தூர் எனும் இடத்தில் செயல்படும் பாஜக தலைவர் சுரேஷ் காமத்துக்குச் சொந்தமான ஷாப்பிங் காம்ப்ளக்ஸிலிருந்து 397 ஜெலட்டின்குச்சிகள், 1200 டெட்டனேட்டர்கள் மற்றும் வெடிகுண்டு தயாரிப்பதற்குத் தேவையான பொருட்கள் அடங்கிய குவியல் குவியலாவெடிபொருட்களைக் கைப்பற்றிசுரேஷ் காமத்தைக் காவல்துறை கைது செய்துள்ளது.

 

சிறுபான்மையினருக்கு எதிராக, கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட இப்பகுதியில் 20.09.2009 காலை 11 மணியளவில் மாவட்ட குற்றவியல் துறை இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரசன்னாவின் தலைமையில் காவல்துறை ரெய்ட் நடத்திய பொழுது இவ்வெடிப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அதி பயங்கர சக்திவாய்ந்த வெடிகுண்டுகளைத் தயார் செய்வதற்கு உதவும் வெடிமருந்துகள் சுரேஷ் காமத்தின் காம்ப்ளக்ஸில் இருந்ததாகவும் காவல்துறை கூறியது.

 

நாட்டின் பல பாகங்களுக்கும் இந்நபர் வழியாக வெடிபொருட்கள் அனுப்பிக் கொடுக்கப் பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை எங்கெங்கு பயன்படுத்தப்பட்ட என்பதும் இதுவரை பயன்படுத்தப்படாமல் பதுக்கி வைத்துள்ளவை எவ்வளவு என்பதும் அவை எங்கெல்லாம் பயன்படுத்தத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்பதும் இதுவரை கண்டறியப்படவில்லை. டில்லி தொடர் குண்டு வெடிப்புகளுக்குத் தேவையான வெடிபொருட்கள் கர்நாடகாவிலிருந்து வந்தவை என, ஸ்பெஷல் செல்லிலுள்ள டில்லி காவல்துறை துணை கமிஷனர் கர்ணால் சிங் டில்லியில் அறிவித்திருந்தார்.

 

பஜ்ரங்தள் தலைவர் மஹேந்திர குமாரை மங்கலாபுரத்தில் வைத்துக் காவல்துறை கைது செய்ததற்குப் பிறகே இந்த வெடிப் பொருட்கள் கண்டெடுக்கப் பட்டன என்பது குறிப்பிடத் தக்கது.