இஃதிகாஃப் எனும் இறை தியானம்!

Share this:

புனித ரமலான் மாதத்தின் முதல் இருபது நோன்புகளை முறையாக நோற்ற நிலையில், ஈமானை உறுதியாக்கிக் கொண்டும் இறைவனை நெருங்க வைக்கும் அமல்களை அதிகப் படுத்திக் கொண்டும் ஹலாலான உணவுகளை உண்பதையும் தண்ணீர் முதல் ஏனைய அனைத்து ஹலாலான பானங்களைப் பருகுவதையும் ஹலாலான மனைவியை/கணவனைக் கூட நோன்பு வைத்த நிலையில் அணுகுவதைத் தவிர்த்து, தமக்கு விருப்பமும் நாட்டமும் தேவையானவையுமான இவற்றை நோன்பு எனும் இறை அருளின் மூலம் விட்டு விலகியிருக்கப் பழகியுள்ளோம்.

இப்புனித மாதமான ரமளான் மாதத்தின் சுமார் முப்பது நாட்களிலும் முஸ்லிம்கள் மேற்கண்ட ஹலாலானவற்றை அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்கித் தவிர்க்கப் பழகியதோடு மட்டுமல்லாமல் வீணான பேச்சுகள், பொய்கள், மோசடிகள், தீமைகள் போன்ற அனைத்துப் பாவமான காரியங்கள், பழக்க வழக்கங்களையும் விட்டு விலகி தூய்மையானவர்களாக இருக்க நோன்பு பயிற்றுவிக்கிறது. இப்பயிற்சியின் மூலம் பெற்ற இறையச்ச உணர்வினையும் அதன் விளைவாக உலகத்தினை அணுகும் கண்ணோட்டமும் தமது வாழ்நாள் முழுவதும் தக்க வைத்துக் கொண்டு ஒருவர் வாழ்ந்தால் அவருக்கும் அவர் வாழும் சமூகத்திற்கும் அவரால் எந்த விதத் தீமையோ பாதிப்போ ஏற்படாது என்பது திண்ணம்.

நோன்புப் பயிற்சியின் மூலம் அல்லாஹ் எனும் ஏக இறைவனின் கட்டளைக்காக ஹலாலானதையே தவிர்த்து வாழத் தயாராகும் ஒருவர், ஹராமான உணவையோ, குடி பானங்களையோ, விபச்சாரத்தின் வழிகளையோ, வட்டி முதல் வரதட்சணை வரை அனைத்துத் தீமைகளையும் அல்லாஹ்வுக்காகத் தவிர்ப்பதைச் சாத்தியப் படுத்திக் கொள்வார் என்பதில் எவ்விதச் சந்தேகமுமில்லை.

ரமளான் நோன்பு எனும் இந்த ஆன்மீகப் பயிற்சியைக் கொண்ட நோன்புகளை நோற்ற நிலையில் முஸ்லிம்கள், இப்புனித மாதத்தின் இறுதிப் பத்து நாட்களில் தற்பொழுது உள்ளனர். அல்ஹம்து லில்லாஹ் – எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!.

இத்தகைய மகத்துமும் கண்ணியமும் நன்மைகளை குவித்துக் கொள்ள வாய்ப்பான மாதத்தினை மீண்டும் ஒருமுறை அடைவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தந்த வல்ல ரஹ்மானுக்கு அவரவரால் எவ்வளவுக்கெவ்வளவு நன்றி செலுத்த இயலுமோ அவ்வளவு நன்றி செலுத்த முயன்றிட வேண்டும். முன்பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட எம்பெருமானார் நபி(ஸல்) அவர்கள் இம்மாதத்தை அதற்காகவே உபயோகப்படுத்திக் கொண்டார்கள் என்பதை முஸ்லிம்கள் நினைவில் நிறுத்த வேண்டும்.

அதிகமதிகம் நன்றி செலுத்துவதன் மூலம், ரமளானில் அல்லாஹ்வின் சிந்தனையையும் நெருக்கத்தையும் அதிகம் ஏற்படுத்த வல்ல நபிவழியில் அமைந்த ஒரு அமல் தான், உலகக் காரியங்களில் இருந்து முழுமையாக ஒதுங்கி, பள்ளிவாசலில் தங்கி இறைவழிபாட்டிலும் இறைச்சிந்தனையிலும் முழுமையாக ஈடுபடக்கூடிய இஃதிகாஃப் எனும் விசேஷ வணக்கமாகும்.

இதனை ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் நபி(ஸல்) அவர்கள் தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் கடைபிடித்துள்ளார்கள். அவர்கள் மரணித்த ஆண்டில் ரமளானின் இறுதி இருபது நாட்கள் இந்த அமலைச் செய்துள்ளார்கள். அவ்வளவு சிறப்புகுரிய நன்மை பெற்றுத்தரத்தக்க அமல் தான் இந்த இஃதிகாஃப் எனும் பள்ளிவாசலில் தங்கி இருக்கும் அமலாகும். ரமளானின் இறுதி பத்தில் செய்ய வேண்டிய இந்த சிறப்பான அமலினால் கிடைக்கும் மிகப் பெரிய பாக்கியம் என்பது, இவ்வுலகிற்கு அருள் கொடையான திருகுர்ஆன் இறக்கியருளப்பட்ட அந்த மகத்துவமிக்க லைலத்துல் கத்ர் எனும் இரவு கிடைக்கப்பெறுவதாகும். லைலத்துல் கத்ர் இரவு மற்றும் இஃதிகாஃபினைக் குறித்து மேலும் விரிவாக இங்கே காணலாம்.

லைலத்துல் கத்ரு எனும் ஆயிரம் மாதங்களுக்கு நிகரான மகத்துவமிக்க அந்த இரவைப் பெற்று, இவ்வுலக அற்ப வாழ்வில் வாழ்நாள் முழுவதும் நின்று வணங்கினாலும் கிடைக்கப்பெறாத அளவுக்கு ஆயிரம் மாதங்கள் வணக்கத்தில் ஈடுபட்டால் கிடைக்கும் நன்மைகளை வாரிக் கூட்டத் துணைபுரியும் இஃதிகாஃப் எனும் இந்த விசேஷ அமலை – நபிவழியை முஸ்லிம்கள் அனைவரும் இயன்றவரை ஹயாத்தாக்க முனைய வேண்டும். இந்நாட்களில் இரவுத் தொழுகைகளுக்கு (கியாமுல் லைல்/தஹஜ்ஜுத்) முயல்வது நபிவழியைப் பேணுவதில் சிறப்புக்குரிய செயலாகும்.

அளவிட முடியாத அளவிற்கு நன்மைகள் கிடைக்கக் கூடிய, நிரந்தரமான மறுமையில் நிலையான நிம்மதி வாழ்விற்கு உறுதுணை புரியும் இந்தப் பாக்கியமிக்க நபிவழி அருகி வருவது கைசேதமாகும். இஃதிகாஃப் எனும் இந்த அரிய வணக்கத்தை மறந்தவர்களாக ஆங்காங்கே யாரோ ஒரு சிலர் பள்ளிக்கு ஒருவர் இருவர் என்று இஃதிகாஃப் இருக்கும் நிலை மாறி அதிகமானோர் இதை செயல் படுத்தி முஸ்லிம்கள் அனைவரும் வெற்றிபெற அல்லாஹ் அருள் புரிவானாக!


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.