ஆதாரங்களின்றி முஸ்லிம்களைக் கைது செய்த காவல்துறையினருக்கு எதிராக தேவகௌடா!

பெங்களூர்: அண்மையில் கர்நாடகாவில் தீவிரவாதத் தொடர்பு எனக் கூறி மாணவர்கள் உட்பட முஸ்லிம் இளைஞர்களை, எவ்வித ஆதாரங்களும் இன்றி காவல்துறை கைது செய்துள்ளதாக முன்னாள் இந்தியப் பிரதமரும் ஜனதா தளம்(S) கட்சியின் தேசியத் தலைவருமான H.D. தேவகௌடா குற்றம் சுமத்தியுள்ளார்.

“தெளிவான ஆதாரங்கள் ஏதுமின்றி மாணவர்களைத் தீவிரவாதிகள் எனக் கூறி காவல்துறை செய்துள்ளது. இது போன்ற கைதுகள் செய்யும் பொழுது காவல்துறை மிகுந்த கவனமாகச் செயல்பட வேண்டும்” என அவர் கூறினார்.

 

எவ்வித ஆதாரங்களும் இன்றி அப்பாவிகளைத் தீவிரவாதிகள் என முத்திரை குத்தும் நடவடிக்கையை தேவகௌடா கடுமையாக விமர்சித்தார். கடந்த ஒரு சில வாரங்களாக தீவிரவாதிகள் எனச் சந்தேகப்பட்டு மாணவர்கள் உட்பட சில முஸ்லிம் இளைஞர்களைக் காவல்துறையின் புலன் விசாரணை ஆட்கொணர்வுக் காவலில் (Corpus of Detective Custody) எடுத்திருந்தது. வெறும் சந்தேகத்தை அடிப்படையாக வைத்துக் கைது செய்யப்பட்ட அவர்களைக் குறித்தத் தகவல்கள் ஊடகங்களால் “முஸ்லிம் தீவிரவாதிகள் கைது” என்ற தலைப்புடன் செய்திகளாக்கப்பட்டிருந்தன. ஊடகங்களின் தான்தோன்றித்தனமான, பொறுப்பற்ற இத்தகையச் செயல்பாடுகளையும் தேவகௌடா கடுமையாக விமரிசித்தார்.

கடந்த நாட்களில் தீவிரவாதிகள் எனக் கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் உட்பட எவருக்கு எதிராகவும் சந்தேகங்களுக்கு மேல் உறுதியான எத்தகைய ஆதாரமும் இதுவரை காவல்துறையால் சமர்ப்பிக்க இயலவில்லை. எனினும் தொடர்ந்து கூக்குரலிடும் ஊடகங்களின் “முஸ்லிம் தீவிரவாதிகள் கைது” கயமைத் தனத்திற்கு எதிராகவும் காவல்துறையின் இதுபோன்ற கைதுகளுக்கு எதிராகவும் தேவகௌடா விமர்சனம் உயர்த்தியுள்ளார்.

“தீவிரவாதத் தொடர்பு” என்ற சந்தேகத்தில் விசாரணைக்காகக் காவலில் எடுப்பவர்களைக் குறித்து இல்லாத கதைகளை உருவாக்கி வெறுப்புத் தீயைப் பற்ற வைக்கும் ஊடகங்களின் செயல்பாடுகளுக்கு எதிராகச் சில    நாட்களுக்கு முன்னரும் இதே போன்று தேவகௌடா கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில், ஊடகங்கள் சிறு விஷயங்களையும் தேவையின்றிப் பெரிதாக்கி அனாவசியமான பிரச்சனைகளைச் சமூகத்தில் ஏற்படுத்துகின்றன என அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.

தீவிரவாதம் தொடர்பாகப் பாராளுமன்றத்தில் ஒரு திறந்த விவாதம் நடத்த வேண்டும் எனவும் இது ஒரு சர்வதேசப் பிரச்சனையாக மாறியிருக்கின்றது எனவும் அவர் கூறினார்.