புதுதில்லி: கடந்த வெள்ளிக்கிழமை UPA தலைவர் சோனியாகாந்தியின் ஜம்மு காஷ்மீர் சுற்றுப்பயணத்தின் பொழுது பதர்வா மாவட்டத்தில் RDX வெடிபொருள் கண்டுபிடிக்கப் பட்டச் சம்பவம் மத்திய ஆயுதக்காவல் படை (CRPF)யின் நாடகம் என்பது நிரூபணமாகியுள்ளது. மாநிலக் காவல்துறையோ மத்தியப் புலனாய்வு துறையோ இதுவரை எவ்வித வெடிபொருட்களும் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கவோ அத்தகைய சம்பவம் உண்மையானது என்று ஏற்றுக் கொள்ளவோ இல்லை.
இச்சம்பவத்தின் பின்னணியில் சோனியாகாந்தியின் பாதுகாப்பு பொறுப்பை ஏற்றிருந்த CRPF தான் செயல்பட்டுள்ளதாக காஷ்மீர் உள்துறை அமைச்சகத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சோனியா சுற்றுப்பயணத் திட்டத்தில் கடந்த வெள்ளியன்று பதர்வா மாவட்டத்தில் உள்ள சின்னோட்டு எனும் கிராமத்தில் வர இருந்தார். அக்கிராமத்திலுள்ள டெலிகேட் எனும் பாகத்தில் உள்ள பயனில் இல்லாத ஒரு வீட்டில் இருந்து பணியில் இல்லாத சாதாரண உடையில் இருந்த CRPF-ஐச் சேர்ந்த சிலர் வெடிபொருட்களைக் கண்டுபிடித்தனர். விஷயம் அறிந்துச் சம்பவ இடத்திற்கு விரைந்தக் காவல்துறையினரிடம், சம்பவ இடத்தை முதலில் சென்று பார்வையிட்டுத் திரும்பியதாகக் கூறிய CRPF-ஐச் சேர்ந்தவர்கள் வெடிபொருட்கள் கண்டு பிடித்த விஷயத்தை விவரித்துள்ளனர்.
வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலிருந்து லஷ்கரே தொய்பா தீவிரவாதிகள் தப்பி ஓடியதாகவும் வெடி பொருட்கள் மட்டுமே கண்டெடுக்க முடிந்ததாகவும் அவர்கள் காவல்துறையினரிடம் கூறியிருந்தனர். தப்பி ஓடிய தீவிரவாதிகளிடம் (ராக்கட் லாஞ்சரைப் போன்ற ஒருவகை) பிக்கா ரகத் துப்பாக்கிகள் இருந்ததாகவும் அவர்கள் கூறினர். “80 கிலோகிராமுக்கு மேல் எடையுள்ள பிக்கா ரக துப்பாக்கிகளைத் தூக்கிக் கொண்டு அவர்களால் எப்படி தப்பி ஓட முடிந்தது” என்பது போன்ற காவல்துறையினரின் கேள்விகளுக்கு முறையான பதில்களை CRPF வழங்கவில்லை.
ஜம்மு காஷ்மீர் மாநில உள்துறை அமைச்சகம் CRPF தலைமைக்காவல் ஆய்வாளர் (IG) ஜெஸி டபாஸிடம் சம்பவம் குறித்து விளக்கம் கோரியுள்ளது. மேலதிக விளக்கம் அளிக்க CRPF தயாராகவில்லை.
இதற்கிடையில் CRPF படையினருக்கு எதிராகச் சதி வழக்குப் பதிவு செய்ய உள்துறைச் செயலகம் காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளது. வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட விஷயம் கேள்விபட்டதைத் தொடர்ந்து சோனியாகாந்தியின் சுற்றுப் பயணம் ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.