ருகூ, ஸஜ்தாவில் அதிக நேரம் எடுத்துக் கொள்வது சரியா?

ஐயம்:

 

எங்கள் பகுதி பள்ளி இமாம் சுப்ஹ் தொழுகைக்கான ருகூ மற்றும் சுஜூதுவில் மிக அதிகமான நேரம் எடுத்துக்கொள்கிறார். வழக்கமாக ஓதும் தஸ்பீஹ் தவிர வேறு எதுவும் துஆ அல்லது தஸ்பீஹ் உள்ளதா?
(மின்மடல் மூலம் வாசக சகோதரர் ஒருவர் அனுப்பிய கேள்வி)

தெளிவு:

நபி (ஸல்) அவர்கள் ருகூவிலும், ஸஜ்தாவிலும் வழக்கமாக ஓதும் தஸ்பீஹ் தவிர வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு விதமாக இறைவனைப் புகழ்ந்து ஓதியிருக்கிறார்கள்.

 

எடுத்துக்காட்டாக,

நபி (ஸல்) அவர்கள் தமது ருகூவில் ''ஸுப்ஹான ரப்பியல் அளீம்'' என்றும், தமது ஸஜ்தாவில் ''ஸுப்ஹான ரப்பியல் அஃலா'' என்றும் மூன்று தடவை ஓதுவார்கள். (இப்னுமாஜா)

நபி (ஸல்) அவர்கள் தமது ருகூவிலும் ஸஜ்தாவிலும் ''ஸுப்புஹுன் குத்தூஸுன் ரப்புல் மலாயிகதி வர்ரூஹ்'' என்று ஓதுவார்கள். (முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ)

''அல்லாஹும்ம லக ரகஃது வபிக ஆமன்து வலக அஸ்லம்து வ அலைக்க தவக்கல்து அன்த ரப்பி கஷஅ ஸம்ஈ வபஸரீ வதமீ வஅள்மீ வஅஸபீ லில்லாஹீ ரப்பில் ஆலமீன்'' என்று நபி (ஸல்) அவர்கள் தமது ருகூவில் ஓதுவார்கள். (நஸயீ)

நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் ருகூவின் போது இவற்றை ஓதியிருக்கிறார்கள். இன்னும் ஸஜ்தாவில் சுருக்கமாகவும், விரிவாகவும் நபியவர்கள் சிலவற்றை ஓதியிருக்கிறார்கள்.

''அல்லாஹும்ம லக ஸஜத்து வபிக ஆமன்து வலக அஸ்லம்து…'' என நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாவில் ஓதுவார்கள். (அஹ்மத், நஸயீ)


அல்லாஹும்ம அவூதுபிக பிரிளாக மின்ஸகதிக வபிமுஆஃபாதிக மின் உகூபதிக…'' (முஸ்லிம்)


இதுபோல் மேலும் சிலவற்றையும் ஸஜ்தாவில் ஓதுவதற்கு நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்திருக்கிறார்கள்.
 

தொழுகை முழுமையடைய வேண்டும் எனில் தொழுகையின் ஒவ்வொரு நிலையையும் நிறுத்தி நிதானமாகச் செய்ய வேண்டும்.

தொழுகையில் கோழி கொத்துவது போல் (அவசரமாக) குனிந்து நிமிர்வதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (அஹ்மத்)


''ருகூவையும், ஸஜ்தாவையும் முழுமையாகச் செய்யாதவனை தொழுகைத் திருடன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கண்டித்திருக்கிறார்கள். (அஹ்மத், ஹாகீம், தப்ரானீ)

 

எனவே ருகூவில் குனிந்து நிமிர்ந்தோம் என்றில்லாமல், ஸஜ்தாவில் தலையைத் தரையில் வைத்தவுடன் நிமிர்ந்து விடாமல், ருகூவையும், ஸஜ்தாவையும் நிறுத்தி, நிதானமாகவும் ஓதவேண்டியவைகளை அழகாக நிதானித்து ஓதியும் முழுமையாகவும் அழகாகவும் நிறைவேற்ற வேண்டும்.

மேலும் ஸஜ்தா வேளையில் அல்லாஹ் அடியானுக்கு மிக நெருக்கமாக வருகின்றான் எனவும் அவ்வேளையில் நீங்கள் அதிகமாக அல்லாஹ்விடம் உங்களின் தேவைகளைக் கேளுங்கள் எனவும் நபி(ஸல்) அறிவுறுத்தியுள்ளார்கள்.

எனவே மேற்கூறிய காரணங்களால் தொழுகையில் ருகூவிலும், ஸஜ்தாவிலும் இமாம் அதிக நேரமெடுத்து ஓதுவது நபிவழியே! அதில் தவறேதுமில்லை!

 

அல்லாஹ் மிக அறிந்தவன்.