கைலார்ஞ்சியில் இந்துத்துவாவின் மற்றுமொரு குஜராத் பாணி வெறியாட்டம்.

2002 ஆம் வருடம் குஜராத்தில் ஹிந்துத்துவவாதிகள் முஸ்லிம்களை கொலை செய்ததை போன்று கைலார்ஞ்சியில் மேல் ஜாதிக்காரர்கள் தலித்களை படுகொலை செய்தனர்.

மேல்ஜாதிக்காரர்களின் கைகளில் இருந்த ஓர் நிலத்தை தலித் குடும்பம் வாங்கியதைத் தொடர்ந்து உருவான பிரச்சனை ஒரு குடும்பத்தில் நான்கு பேரை படுபயங்கரமான முறையில் படுகொலை செய்வதில் சென்று முடிவடைந்தது.

பிரச்சனையின் ஆரம்பம் ஓர் மேல்ஜாதிக்காரரின் கையில் இருந்த நிலம் தலித்தான பய்யாலால் வாங்கியதில் தொடங்கியது. நிலத்தை வாங்கிய பய்யாலாலின் பெயரில் அந்நிலத்தை பதிவு செய்வதற்கு அதிகாரிகள் தயாராகவில்லை.

மேல்ஜாதிகாரர்கள் இந்த சந்தர்ப்பதைப் பயன்படுத்திக் கொண்டு புத்தமதத்தைச் சேர்ந்த பய்யாலாலின் குடும்பத்திற்கு பிரச்சனை தர ஆரம்பித்தனர். இதனைத் தொடர்ந்து பய்யாலாலின் உறவினரான சித்தார்த் கஜபய்யாவை பயங்கரமாக தாக்கினர். இச்சம்பவத்திற்கு பய்யாலாலின் மகள் ப்ரியங்கா கண்ணால் கண்ட சாட்சியாக இருந்தாள். இவ்வழக்கிற்கு பய்யாலாலின் மகள் சாட்சி கூறியதற்கு பதிலடியாக அக்குடும்பத்தின் நான்கு பேரை நடுவீதில் போட்டு படுபயங்கரமாக மேல்ஜாதியினர் படுகொலை செய்தனர்.

2006 செப்டம்பர் 29 அன்று அக்கிராமத்திலுள்ள மேல்ஜாதி ஆண்களும், பெண்களும் அடங்கிய ஒரு பெருங்கூட்டம் பய்யாலாலின் வீட்டை ஆக்ரமித்தனர். அச்சமயம் பய்யாலால் வீட்டில் இல்லாமலிருந்தார்.

அப்போது வீட்டிலிருந்த பய்யாலாலின் மனைவி சுரேகா(45, மகன் சுதீர்(20), ரோஷன்(19) மற்றும் மகள் ப்ரியங்கா(18) ஆகியவர்களை அவர்கள் தாக்கினர். பின்னர் அவர்களை நிர்வாணமாக்கி கிராமம் முழுவதும் சுற்றி நடக்க வைத்தும் தாக்குதலை தொடர்ந்தனர்.

அதன் பின்னர் கிராமத்தின் நடுவில் ஆள்கூட்டத்தின் நடுவில் அவர்களை நிர்வாணமாகவே நிற்கவைத்து சகோதரி ப்ரியங்காவை பலாத்காரம் செய்ய சுதீர் மற்றும் ரோஷனை நிர்பந்தித்தனர். இதற்கு அவர்கள் மறுத்த போது அவர்களின் மர்ம உறுப்பை அங்கேயே வைத்து துண்டித்தனர்.பின்னர் சுரேகாவையும் ப்ரியங்காவையும் கூட்டமாக சேர்ந்து கற்பழித்து, மர்ம உறுப்புக்களில் கொடூரமாக ஆயுதங்களை பாய்ச்சி கொலை செய்தனர்.

சம்பவத்தை அறிந்து ஆரம்பத்திலேயே அவ்விடம் வந்து சேர்ந்த பய்யாலால் இவையனைத்திற்கும் மறைந்திருந்து சாட்சியாக இருந்தார்.

இச்சமபவத்திற்கு மற்றொரு சாட்சியான சித்தார்த் உடனேயே அந்தர்கோன் காவல்நிலையத்தில் விவரம் அறிவித்த போதிலும் போலீஸ் சம்பவ இடத்திற்கு வரவோ வழக்கை பதிவு செய்யவோ தயாராகவில்லை.ஊடகங்களும் இச்சம்பவத்தை வெளிக்கொணராமல் மறைத்து வைத்திருந்தது. இறுதியில் அக்கிராமத்திலுள்ள புத்தமதத்தினர் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்திய பின்னர் தற்போது போலீஸ் இவ்வழக்கை பதிவு செய்துள்ளது.