{mosimage}சமீப காலமாக அசாமில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் அங்குப் பணி புரிவதைத் தடுத்து அவர்கள் அசாமை விட்டு வெருண்டோடுவதற்காக அவர்களை அச்சுறுத்தும் விதமாக உல்ஃபா(ULFA) இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் வெளிமாநிலத் தொழிலாளர்களைக் கூட்டம் கூட்டமாகக் கொன்று குவித்து வந்துள்ளார்கள். இதனைக் குறித்து பிரபல இந்தியப் பத்திரிக்கைகளும் ஊடகங்களும் சிறு அளவிலேயே செய்தி வெளியிட்டு வந்தன.
இந்நிலையில் தற்போது உல்ஃபா தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளது. இந்தப் பிரச்சனை குறித்து பேசுவதற்காக இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று மியான்மருக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அசாமில் கொலைச் செயல்கள் புரிந்து விட்டு இத்தீவிரவாதிகள் அண்டைநாடான மியான்மரில் பதுங்குவதாக இந்திய ராணுவம் கருதுகிறது. மியான்மரில் உல்ஃபா தீவிரவாதிகள் பதுங்குவதை அந்நாடு அனுமதிக்கக்கூடாது என அவர் தனது பயணத்தின் போது வலியுறுத்துவார் எனத் தெரிகிறது.
இருநாட்டு உறவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த ஆலோசனை பிரணாப் முகர்ஜியின் இந்த மூன்று நாள் பயணத்தில் இடம்பெற உள்ளது.
பிரணாப் முகர்ஜியின் மியான்மர் பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத் துறை செயலர் நவ்தேஜ் சார்னா, வடமேற்கு மாநிலங்களில் நிலவும் தீவிரவாத நடவடிக்கைகள் குறித்தும் இச்சந்திப்பின் போது இந்தியாவின் கவலையை திரு.முகர்ஜி தெரிவிக்க இருப்பதாக தெரிவித்தார்.
உல்ஃபா தீவிரவாதிகள் மியான்மரில் தஞ்சம் அடைவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் இதனை அந்நாடு அனுமதிக்கக்கூடாது என்றும் ஏற்கெனவே இந்தியா அந்நாட்டை வலியுறுத்தியுள்ளது. தற்போது அதற்கான உறுதியை அந்நாட்டிடம் இருந்து இந்தியா கேட்டுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.