போலி என்கவுண்டர்கள்: அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

புதுதில்லி: போலி என்கவுண்டர்கள் மற்றும் கஸ்டடி மரணங்கள் நிகழாமல் தடுக்க பயன்தரத்தக்க ரீதியிலான தேசிய நிலைப்பாட்டை உருவாக்குவது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இவ்விஷயம் தொடர்பாக எம். ரமேஷ் ரெட்டி சமர்ப்பித்த மனுவின் மீது வாதங்களைக் கேட்ட தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் மற்றும் நீதிபதி ஆர்.வி. ரவீந்திரன் அடங்கிய பெஞ்ச், அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இது போன்ற காவல்துறையினரின் அக்கிரமங்களைத் தடை செய்வதற்கு நிலுவையில் எந்த ஒரு முறையும் இல்லையெனவும், சில இடங்களில் மாநில மனித உரிமை அமைப்புகள் கூட செயல்படுவதில்லை எனவும் மனுதாரர் முறையிட்டார்.

 

"கடந்த 10 வருடங்களில் நாட்டில் நடந்த போலி என்கவுண்டர்களையும், கஸ்டடி மரணங்களையும் குறித்து விசாரணை நடத்தவும், அவற்றிற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைக் குறித்து ஆராயவும் ஒரு கண்காணிப்பு குழுவை (Monitoring Committee) நியமிக்க வேண்டும்."

 

"இவ்விஷயமாக நீதிமன்றம் வழங்கிய அறிவுரைகளின் படியும், 2003 டிசம்பர் 12 அன்று தேசிய மனித உரிமைக் கழகம் வெளியிட்ட நடவடிக்கை முறைகளின் அடிப்படையிலும் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதைக் குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கவும்" மனுதாரர் நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்தார். இதன் அடிப்படையில் அரசுகள் உடனடியாக பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.