கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு: மதானி விடுதலை

கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் அப்துல் நாசர் மதானி விடுதலை செய்யப்பட்டுள்ளார். அல் உம்மா தலைவர் எஸ்.ஏ.பாட்ஷா, அவரது மகன் சித்திக் அலி உட்பட 153 பேரை குற்றவாளிகளாக தனி நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் நாள் நடந்த இந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, கேரளாவைச் சேர்ந்த மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானி உட்பட 167 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் முதல் கட்ட தீர்ப்பு, இன்று (1/8/2007) வழங்கப்பட்டது. கோவை தனி நீதிமன்ற நீதிபதி உத்ராபதி தீர்ப்பை அறிவித்தார்.

இந்த வழக்கில், அப்துல் நாசர் மதானி மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால், ஒன்பது ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பின் அவர் விடுதலை செய்யப்பட்டார். இவர் குற்றமற்றவர் என்று கேரள அரசு கடந்த 9 ஆண்டுகளில் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த ஜெயலலிதாவும், கருணாநிதியும் கேரள அரசின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை.

மதானிக்குக் கடும் சர்க்கரை நோய் பாதித்ததால் காலில் கேங்ரீன் எனும் கட்டி வந்திருந்தது. அதற்கான சிகிச்சை பெற பிணையில் வெளியில் வர நீதிமன்றத்தை அவர் தரப்பினர் அணுகியபோது அவர் வெளிவருவதற்குத் தமிழக அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்து வந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அல்-உம்மா அமைப்பின் தலைவர் எஸ்.ஏ. பாஷா, அவரது மகன் சித்திக் அலி உள்ளிட்ட 153 பேர் குற்றவாளிகள் என நீதிபதி உத்ராபதி அறிவித்தார்.

கேரள அரசு மட்டுமல்லாது பல்வேறு மனித உரிமைக் குழுக்களும் கோவை குண்டுவெடிப்பு தொடர்பான நீதி விசாரணையின் போது மதானியைக் குற்றமற்றவர் என்று வலியுறுத்தி வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.