எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் அல்லர் – பாஜக நிலைபாட்டில் மாற்றம்?

Share this:

{mosimage}புதுதில்லி: எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் அல்லர் என பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கூறினார். பாஜக தலைமையகத்தில் நடந்த பாஜக சிறுபான்மை பிரிவின் (மைனாரிட்டி மோர்ச்சா) தேசிய சமிதி கூட்டத்தைத் தொடங்கி வைத்து பேசும் பொழுது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

"சிறு அளவிலான இளைஞர்கள் மட்டுமே தவறான வழிகாட்டல்கள் மூலம் தீவிரவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு உண்மை என்ன என்பதைத் தெளிவுபடுத்தி தேசிய நீரோட்டத்தில் கொண்டு வர வேண்டும். இந்த இலட்சியத்தை அடைய பாஜக சிறுபான்மை பிரிவு முயற்சிகள் செய்ய வேண்டும்" என ராஜ்நாத் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

"நாட்டில் வாழும் எவருடைய நம்பிக்கைகளையும் சிதைக்காத வண்ணம் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். பொது சிவில் சட்டத்தைக் குறித்து நாடு முழுவதும் திறந்த விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். இடஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டியது பொருளாதாரத்தின் அடிப்படையில் ஆக வேண்டும். எல்லா மதத்திலும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.

 

சுதந்திரம் அடைந்து பல காலமாக மதசார்பற்ற கட்சி என தம்பட்டம் அடித்துக் கொள்ளும் காங்கிரஸ்தான் நாட்டை ஆட்சி செய்துள்ளது. முஸ்லிம்களின் பின்தங்கிய நிலைக்கு அவர்கள் தான் காரணம். 

 

அயோத்தியில் இராமர் கோவில் கட்ட முஸ்லிம் தலைவர்கள் முன்முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இது மட்டும் நடந்து விட்டால், மிகப்பெரிய ஒரு தேசிய-கலாச்சார பிரச்சனைக்கு பரிகாரம் காணப்படுவது மட்டுமல்லாது மதச் சகிப்புத்தன்மையின் முன்னுதாரணமாக ஒரு சரித்திரம் படைப்பதும் இதனுடன் நடக்கும்" என ராஜ்நாத் சிங் கூறினார்.

 

சாதாரணமாக நாட்டில் தேர்தல் நெருங்கும் பொழுது, குறிப்பாக நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் பொழுது, RSS உள்ளிட்ட சங்பரிவார இயக்கங்களின் தலைமைகள் கூறுவதற்கு மறுபேச்சின்றி தலையாட்டிவிட்டுத் தன் பாதையை தூய இந்துத்துவ பாணியில் மாற்ற முயலும் பாஜக, இம்முறை தனது நிலைபாட்டில் சற்று மாற்றம் கொண்டு வந்திருப்பது அதன் சிறுபான்மை பிரிவு தேசிய கூட்டத்தின் பொழுது வெளிப்படையாகத் தெரிந்தது.

 

ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் பயங்கரவாதிகளாகவும், தீவிரவாதிகளாகவும் சித்தரித்து வந்துள்ள பாஜகவின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங், தனது நிலைபாட்டில் மாற்றம் வந்ததைத் தெரிவித்த இதே சிறுபான்மை சமிதி கூட்டத்தின் துவக்கம் திருக்குர்ஆன் வசனங்களுடன் ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கதாகும்.

 

தங்களது தூய இந்துத்துவ நிலைபாட்டில் உறுதியாக நிற்பதாகக் காட்டிக் கொள்ளும் அதே நேரத்தில், வாஜ்பாய் போன்ற நடுநிலை முகமூடிகள் தேர்தல் காலங்களில் தலையில் தொப்பி போட்டுக் கொண்டு, பெயர் தாங்கி முஸ்லிம்களை முன்னணியில் நிற்கவைத்து முஸ்லிம்களின்  ஓட்டு வாங்கும் தந்திரம் செல்லுபடியாகவில்லை.

 

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தில்லி ஜும்ஆ மஸ்ஜித் இமாம் புகாரியின் அமோக ஆதரவை பெற்ற பின்பும் கூட தேர்தலில் முஸ்லிம் ஓட்டுவங்கியில் எந்த மாற்றமும் பாஜகவுக்கு ஆதரவாக ஏற்படவில்லை. 

 

சமீபத்தில் இலண்டன், கிளாஸ்கோ விமானநிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் முயற்சி தொடர்பாக டாக்டர் ஹனீஃபை அநியாயமாக ஆஸ்திரேலிய அரசாங்கம் கைது செய்ததைக் கண்டித்து அவருக்காக களமிறங்கிய இந்திய அரசின் செயல்பாட்டைத் தீர விசாரிக்கும் முன்பே டாக்டர் ஹனீஃப் ஒரு முஸ்லிம் என்ற ஒரே காரணத்தினால் கண்ணை மூடிக் கொண்டு இந்திய அரசு தீவிரவாதத்திற்கு துணை போகின்றது என அத்வானி போன்ற பாஜக பெருந்தலைகள் பிரச்சாரம் செய்திருந்ததன.

 

டாக்டர் ஹனீஃப் தற்போது நிரபராதி என நிரூபணமாகி விடுதலை ஆனதால் பாஜகவின் தேசியவாத பிம்பம் கேவலமான முறையில் கலைந்து போனதைத் தூக்கி நிறுத்த பாஜக செய்யும் தந்திரமாகத் தான் இப்புதிய நிலைபாட்டை காணமுடிகின்றது.

 

இக்கூட்டம் நடைபெற்ற மன்றத்தின் நடுவே தீனதயாள் உபாத்யாயா மற்றும் ஷியாம் சர்மா முகர்ஜியின் படங்களுக்கு நடுவே மௌலானா ஆஸாதின் படமும் மாலையிடப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. மேலும் கூட்டம் நடந்த இடத்தில் அரபி மற்றும் உருது மொழிகளில் அறிவிப்புப் பலகைகளும் வைக்கப்பட்டிருந்ததும் பாஜகவின் அரசியல் நிலைபாட்டை நகைப்பிலாழ்த்தும் விதத்தில் அமைந்திருந்தது.

 

பாஜகவின் சிறுபான்மை சமிதியில் சில முஸ்லிம்களைப் போன்று கிறிஸ்தவர்களும் இடம்பெற்றுள்ளனர். எனினும் திருக்குர்ஆன் வசனங்களுடன் ஆரம்பமான கூட்டத்தில் பின்னர் வந்தே மாதரம் பாடப்பட்டாலும் பைபிளின் வசனங்கள் எதுவும் வாசிக்கப்படாததும் குறிப்பிடத்தக்கதாகும்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.