ஹிந்துக்கள் ஒன்றிணைந்து இஸ்லாத்தை அழித்தொழிக்க வேண்டும் – பால்தாக்கரே

{mosimage}மொழி மற்றும் மாநில வேறுபாடுகளை மறந்து நாடுமுழுவதும் ஹிந்துக்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவ்வாறு ஒன்றிணைந்தால் மட்டுமே இஸ்லாத்தை இந்தியாவில் இருந்து ஒழிக்க முடியும் என்றும் சிவசேனா தலைவர் பால்தாக்கரே கூறியுள்ளார். மேலும் ஹிந்துக்களின் ஹிந்துஸ்தானம் தான் தன்னுடைய நீண்ட நாள் கனவு என்றும் தாக்கரே கூறியுள்ளார்.

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை என முடிவு செய்திருந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே, கட்சியின் பலமான இருதூண்களான அவரின் இரு மகன்களும் சிவசேனாவிலிருந்து விலகிய பின்பு தனது முடிவை மாற்றிக் கொண்டு தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கலந்து கொள்ள ஆரம்பித்துள்ளார்.

சிவாஜி பார்க்கில் நடந்த ஒரு தேர்தல் பிரச்சார பேரணியில் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசும் பொழுது மேற்கண்டவாறு ஹிந்துக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அக்கூட்டத்தில், குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை லட்சியத்தில் உறுதியான ஹிந்து என்றும் சிலாகித்துப் பேசினார். இந்த பேரணியில் வாழ்த்துரை வழங்க நரேந்திரமோடியும் வந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இதற்கிடையில் தாணேயில் நடந்த மற்றொரு பேரணியில் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமை தனிப்பட்ட முறையில் அவர் செய்த விமர்சனத்திற்கு எதிராக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் குற்றவாளி எனக்கருதப்படும் முஹம்மத் அஃப்ஸல் குருவிற்கான தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதை தாமதப்படுத்துவது சட்டத்தை அவமதிக்கும் செயல் என்று குடியரசுத்தலைவருக்கு எதிராக குற்றம்சாட்டிய தாக்கரே தொடர்ந்து தன்னிடம் பரிசீலனைக்கு வந்த அஃப்ஸல் குருவின் கருணைமனுவை அவர் மத்திய அரசுக்கு அனுப்பியிருக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறினார். தனது தலையில் இருக்கும் பெருமளவு முடியின் காரணமாக கருணைமனுவில் அடங்கியுள்ள உள்ளடக்கத்தை கலாமால் படித்து புரிந்துகொள்ள முடியவில்லையா? என்று அவரை நையாண்டி செய்த தாக்கரேயின் பேச்சு துரதிர்ஷ்டவசமானது என காங்கிரஸ் குற்றம் கூறியது.

தாக்கரே நாட்டைத் துண்டாட முயல்வதாக முதிர்ந்த காங்கிரஸ் தலைவரும் சுற்றுலாத் துறை அமைச்சருமான அம்பிகா சோனி கண்டனம் தெரிவித்தார். தாக்கரேயின் இந்த விமர்சனம் பைத்தியக்காரத்தனமானதும் தள்ளப்படவேண்டியதுமாகும் என NCP தலைவர் ஷரத்பவாரும் கூறியுள்ளார். குடியரசுத்தலைவர் என்பவர் ஒரு தனிமனிதன் அல்லர் என்றும் அவர் இந்நாட்டின் தலைமைக் குடிமகன் என்றும் CPM தலைவர் சீதாராம் யெச்சூரி கூறினார். இந்திய இறையாண்மையின் கீழ் வசிக்கும் எவரும் அப்பதவியை மதிக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் கூறினார். தாக்கரேயின் கலாமுக்கு எதிரான இந்த விமர்சனத்தை அவரின் தனிப்பட்ட கருத்து என BJP தலைவர் வெங்கய்யா நாயுடு கூறினார். அஃப்ஸல் குருவின் தண்டனையை தாமதப்படுத்துவதற்கு எதிராக தனது எதிர்ப்பை தாக்கரே வெளிப்படுத்தியதாகத் தான் கருதுவதாகவும் நாயுடு கூறினார்.

தேசிய அளவில் சர்ச்சைக்கு இடமளிக்கும் விதத்தில் தாக்கரே வெளிப்படுத்தி இருக்கும் இஸ்லாத்தை அழிக்க ஹிந்து ஒற்றுமை, ஹிந்துக்களின் ஹிந்துஸ்தான், குடியரசுத்தலைவருக்கு எதிரான விமர்சனம் போன்றவை அவரின் கட்சியை தேசிய அளவில் வளர்த்து எடுக்க முயலும் அவரின் அடுத்த கட்ட நாடகத் தந்திரமாகவே கருதப்பட வேண்டியுள்ளது. சிவசேனாவின் ஆரம்பகால கொள்கை மும்பையையும் பின்னர் மஹாராஷ்டிரா மாநில வளர்ச்சியையும் மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்தது. மஹாராஷ்டிர மாநிலத்தவர்கள் தவிர மற்ற அனைவரும் அம்மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என அறிவித்து, ஹிந்துக்கள் உட்பட இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்களுக்கு எதிராக படுபயங்கர அநியாயங்களை கட்டவிழ்த்து விட்டு சிவசேனா வளர்ந்த வரலாறு உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியதாகும்.

அன்று சிவசேனா ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமே மஹாராஷ்டிர மாநிலத்தவர்களை தவிர, ஹிந்துக்கள் உட்பட மற்றவர்களை மஹாராஷ்டிராவிலிருந்து அடித்து விரட்டப்படுவதற்காகவே என்பது அனைவரும் அறிந்த ரகசியமாகும். இன்று அதே சிவசேனாவின் தலைவர் தனது கட்சியின் கொள்கைக்கு எதிராக மொழி-பிரதேச எல்லைகளை மறந்து ஹிந்துக்கள் இஸ்லாத்தை அழிக்க ஒன்றுபட வேண்டும் என அழைப்பு விடுத்திருப்பது அரசியல் நோக்கர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.