புதிய நம்பிக்கையை விதைத்திருக்கும் தோஹா மாநாடு (ஷியா-சுன்னாஹ் கலந்துரையாடல்)

"பள்ளிக்கூடப் புத்தகங்கள், சாட்டிலைட் சேனல்கள், இணைய தளங்கள் மற்றும் பிரசுரங்கள் வாயிலாக சுன்னாஹ் மற்றும் ஷியா முஸ்லிம் தலைவர்களுக்கிடையே ஏற்படும் வாக்குவாதங்கள் முற்றிலுமாக தடை செய்யப்படவேண்டும்" என தோஹாவில் நேற்று முன்தினம் (28-01-2007) நடந்த இஸ்லாமிய கல்வி நிறுவனங்களிடையான பேச்சுவார்த்தைக்காக அமைக்கப்பட்டுள்ள மாநாட்டுக்கூட்டத்தில் மார்க்க அறிஞர்கள், கல்வியாளர்கள், சமூக தலைவர்கள் என உரையாற்றிய பலரும் ஒருமித்த கருத்தை தெரிவித்துள்ளனர்.

இம்மாநாட்டில் கலந்து கொண்ட குவைத்தின் அல்-வஸாத்தியா மையத்தைச் சேர்ந்த டாக்டர் இஸ்ஸாம் அல்பஷீர் பேசுகையில், "முஸ்லிம்களில் ஒருவர் மற்றவரைக் குறை கூறுவதை நிறுத்த வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளார். "இராக்கிய மண் தற்போதைக்கு நாடு தழுவிய அளவில் மிகவும் பலவீனமாகி இருக்கிறது. ஒரு சாரார் பிறரை குற்றம் சாட்டுவதை அடியோடு நிறுத்திவிட்டு நாம் ஒவ்வொருவரும் நம் சொந்தப் பிரச்னையை பற்றி மட்டும் பேசவேண்டும்" என்று தொடர்ந்தார்.

 

அல் பஷீர் மேலும் பேசுகையில், "முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் இழிவுபடுத்தும்படியான விஷயங்கள் இடம் பெறும் வாக்கியங்களை பாடப்புத்தங்களில் இருந்து தணிக்கை செய்யத் துவங்க வேண்டும். தினந்தோறும் நமது கல்விக்கூடங்களிலும் ஊடகங்களிலும் முஸ்லிம்களாகிய நம்மை நாமே இழிவுபடுத்திக் கொண்டிருக்கும் மோசமான சூழலில், இதைப் பற்றிய தீர்வுகாண்பதை விட்டுவிட்டு நாட்டை வளப்படுத்துவற்கான பேச்சுவார்த்தையைத் தொடர்வதில் பயனில்லை. இத்தகைய இழிவுகள் ஏற்படுத்தும் மனக் கசப்புகள் நம்மிடம் மட்டுமல்லாது அடுத்த தலைமுறையினரிடமும் துவேஷத்தை விதைக்கும் என்பதில் வியப்பில்லை" என்றார்.

 

இராக்கிலுள்ள இனப்பிரிவுகளின் இடையே காணப்படும் இடைவெளிகளை நிரப்பும்படியான முக்கியப் பங்காற்ற ஈரான் முன் வரவேண்டும். அணு ஆயுத தொழில் நுட்ப உதவிகளை ஈரானுக்கு இராக் வழங்கியதையும், இஸ்ரேலுக்கு எதிரான போரில் அந்நாடு ஹிஸ்புல்லாஹ்(ஷியா) வின் பக்கம்  நின்றதையும் நினைவு கூர்ந்தார்.

 

உள்நாட்டுக் கலவரங்களை எதிர்த்துக் குரல் கொடுக்க சுன்னாஹ் மற்றும் ஷியா தரப்பு மார்க்க அறிஞர்களையும் அழைத்து இவ்வேண்டுகோளை விடுத்துள்ளார். குறிப்பாக சிறார்களின் மனதில் துவேஷத்தைத் தூவும்படியாக பள்ளிகளில் பரப்பப்படும் பிரச்சாரங்களையும் தடுத்து நிறுத்திட வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார். இவ்விஷயம் தொடர்பானதொரு ஒப்பந்தத்தை இப்போது செய்யாவிட்டால் நாம் கூடிப் பேசுவதில் எந்தப்பயனுமில்லை என்றும் தொடர்ந்தார்.

 

ஈரானின் இஸ்லாமிய அடிப்படைக் கல்வி நிறுவனங்களின் உலக ஒருங்கிணைப்புப் பேரவையின் பொதுச் செயலாளர் ஆயத்துல்லா முஹம்மத் அலி அல்-டஸ்க்கிரி  பேசுகையில், ஷியாக் கோட்பாடுகளை விதைப்பதன் மூலம் இஸ்லாமிய உலகத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள ஈரான் முயற்சி செய்கிறது என்ற கூற்றை தான் அடியோடு மறுப்பதாகக் கூறிய அவர், அப்படி ஈரான் ஒருவேளை செய்திருக்குமேயானால், ஏன் ஈரானில் வசிக்கும் இலட்சக்கணக்கான சுன்னாஹ் முஸ்லிம்கள் ஷியாக்களாக மாறவில்லை? என்று தொடர் வினா எழுப்பியுள்ளார்.

 

அமெரிக்க பாதுகாப்புச் செயலாளரின் தற்போதைய முயற்சியான ஈரானுக்கு எதிராக அரபு நாடுகளை திசை திருப்பும் திட்டத்தைக் கடுமையாகச் சாடிய அவர், இத்தகைய முயற்சிகள் இஸ்லாமிய நாடுகளுக்கு எதிராக அமெரிக்காவினால் திட்டமிட்டுத் தயாரிக்கப் பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார். ஷியாக்களுக்கும் சுன்னாஹ்வினருக்கும் இடையே உள்ள விரிசலை அதிகப்படுத்துவதன் மூலம் அமெரிக்கா, அரபு நாடுகளை ஈரானுக்கு எதிராகத் திருப்புகிறது என்பதையும் மேற்கோள் காட்டினார்.

மேலும் அவர் கூறுகையில் இஸ்லாம் கூறும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் இராக்கிய முஸ்லிம்கள் பின்பற்றி நடந்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இறைத்தூதரின் தோழர்கள் மற்றும் நபியவர்களின் மனைவிமார்களைப் பற்றி இழிவாகப் பேசுவதை ஷியாக்கள் நிறுத்திக்கொள்ளவேண்டும். அதே போல் ஷியாக்களை இனத்துரோகிகள் என்று அழைப்பதை சுன்னத் வல் ஜமாஅத்தினரும் நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று தொடர்ந்தார்.

இராக்கில் தொடரும் இனப்பிரிவினைகளின் பிரச்னைகளுக்கு ஈரானும் ஒரு காரணம் என்று கூறப்படும் கூற்றை முற்றிலுமாக மறுத்த அவர், ஈரானே இப்பிரச்னையை இஸ்லாமிய நாடுகளின் கவனத்திற்குக் கொண்டு போனதை சுட்டிக்காட்டினார்.

மேலும் பேசுகையில், கலவரங்களில் பாதிக்கப்படுவோரில் பெரும்பான்மையினர் சுன்னாஹ்வினர் என்பது தவறான தகவலே. இரு  பிரிவினருக்கிடையில் நடக்கும் இனக்கலவரங்களை முடிவுக்குக் கொண்டு வரத் தேவையான நடவடிக்கைகளே இப்போதைய மிக முக்கியத் தேவைகளாகும். இதைத் தொடர்ந்து அலசி ஆராய்ந்து இதற்கானத் தீர்வுகளை இப்போது முன்வைக்காது போனால் இராக்கிய முஸ்லிம்கள் முடிவற்ற ஒரு போரையே சந்திப்பார்கள் என்று உறுதியாக கூறினார்.

தோஹாவில் நடந்த இம்மாநாடு உலக முஸ்லிம்களிடையே புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் விதைத்திருக்கும் அதேவேளை இஸ்லாத்தையும் இஸ்லாமியரையும் குறிவைக்கும் மேற்கத்திய, சியோனிஸ கூட்டு சக்திகளுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும் என்பதையும் இஸ்லாமிய உலகின் இப்புதிய ஒற்றுமையை எதிர்நோக்கிய பயணத்தை சிதைக்க எல்லா வழிகளிலும் முயற்சிகளை மேற்கொள்ளும் என்பதிலும் எந்த சந்தேகமுமில்லை. எனவே அதனை எதிர்கொள்வதற்கும் அத்தகைய சூழ்ச்சி வலைகளில் விழாமல் தன்னை தற்காத்துக் கொள்ளவும் முஸ்லிம் உலகம் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

தகவல்: MuSa