இந்து முன்னணி ஹரீஷ் காரை உடைத்து சிறுபான்மையினர் மீது பழி போட்ட இந்து முன்னணி தமிழ்செல்வன்!

கோவை, செப்.28- இந்து இளைஞர் முன்னணியின் நிர்வாகியின் கார் கண்ணாடி உடைத்து சமூக பதட்டத்தை ஏற்படுத்திய வழக்கில் இந்து முன்னணியின் நிர்வாகி இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை மேட்டுப்பாளையம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் ஹரிஷ் (21). இவர் மேட்டுப்பாளையத்தில் இந்து இளைஞர் முன்னணி நகர பொறுப்பாளராக உள்ளார்.

இந்நிலையில் செவ்வாயன்று இவரது வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் முன் பக்க கண்ணாடியை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்துள்ளனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர்.

தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மேட்டுப்பாளையம் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் பாலாஜி உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த இந்து முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் அவரது வீட்டு முன்பு திரண்டனர். இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திசை திருப்ப முயற்சி: தாக்குதல் குறித்து கேள்விப்பட்ட இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஹரீஷின் வீட்டுக்கு நேற்று வந்து விசாரித்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘இந்து மதத்தைச் சேர்ந்த சிலரை பணம் கொடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுத்தி பிரச்சினையை திசை திருப்ப சதி திட்டம் தீட்டப்பட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன. இதுகுறித்து உளவுத்துறை தீவிர கவனம் செலுத்தி கலவரம் ஏற்படுவதை தடுக்க வேண்டும்” என்றார்.

ஒரு குறிப்பிட்ட சிறுபான்மை சமூகத்தவர்களே இந்த வன்முறை செயலில் ஈடுபட்டனர் என்றும் காரை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி இந்து முன்னணி நிர்வாகிகள் தொடர்ந்து காவல் துறையினரை நிர்பந்தப்படுத்தி வந்தனர்.

சிறுபான்மை சமுகத்தினர் மீது பார்வை விழுந்ததால், இந்து அமைப்பு நிர்வாகியின் காரை சேதப்படுத்திய சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் போலிசாரின் தீவிர விசாரணைக்கு பின்னர் இருவர் கைது செய்யப்பட்டனர். இக்கைது மூலம் இந்து முன்னணியினரே இதைச் செய்துவிட்டு பிற சமூகத்தினர் மீது பழி போட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

முழு விசாரணை முடிந்த பின்னர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் பகுதியில் இந்து இளைஞர் முன்னணியை சேர்ந்த ஹரீஷ் என்பவரின் கார் தாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகி தமிழ்ச்செல்வன் (24), அவரது நண்பர் ஹரிஹரன் (25) ஆகிய இருவரை கைது செய்துள்ளோம்.

விநாயகர் சதுர்த்தியின்போது முன் விரோதம் ஏற்பட்டதன் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா பதிவுகள் வைத்து கைது செய்யப் பட்டுள்ளனர்.

மேலும், மேட்டுப்பாளையத்தில் 2 பிளைவுட் கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் கூடிய விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். அதற்கான விசாரணையை துரிதபடுத்தியுள்ளோம் என்றார்.

இந்துத்துவ அமைப்பின் நிர்வாகி வீட்டில் இந்து முன்னணி நிர்வாகி ஒருவரே திட்டமிட்டு காரை சேதப்படுத்திவிட்டு, வேறு ஒரு சமூகத்தின் மீது பழிபோட்டு திசை திருப்புவதன் மூலம் கோவையில் பெரும் கலவரம் நடத்த திட்டமிட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.