அமெரிக்காவுடன் இராணுவ ஒப்பந்தம் செய்வதற்கு எதிர்ப்பு வலுக்கிறது.

கொழும்பு: இலங்கை அரசாங்கம் அமெரிக்காவுடன் இராணுவ ஒப்பந்தம் செய்து கொள்ள எடுத்த தீர்மானத்திற்கு ஜே.வி.பி. கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்கட்சியான ஜே.வி.பி.யைச் சேர்ந்த பிமல் ரட்நாயக்க பேசும் பொழுது இந்த எதிர்ப்பை பதிவு செய்தார்.

“இலங்கையின் அரசியல் சூழ்நிலைகளை அமெரிக்கா பயன்படுத்திக்கொண்டுபாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளது. மேலதிகமான யுத்த தளவாடங்களைஇலங்கைக்கு அமெரிக்கா வழங்க உள்ளது. இராணுவ உதவி என்ற பெயரில் நாட்டில் அமெரிக்காவின் இராணுவத் தலையீட்டுக்குத்தான் இது வழிவகுக்கும்.” என்று அவர் கூறினார்.

மேலும், “கடந்த 1996 ஆம் ஆண்டு முதலே அமெரிக்கா இத்தகைய ஒரு ஒப்பந்தத்தை இலங்கையின் மீது திணிக்க முயற்சித்து வருகிறது.

முன்னாள் ஆட்சி தலைவர் சந்திரிகா குமாரதுங்காவும் இது தொடர்பிலான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தார். 2003 ஆம் ஆண்டில் ரணில் விக்ரமசிங்காவும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட விருப்பம் கொண்டிருந்தார். ஆனால் அப்பொழுது யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்தமையால், மக்களிடத்தில் எதிர்ப்பு வரும் எனக் கருதி அதில் ஒப்பிடாமல் காலம் தாழ்த்தினார். இந்தியாவும் இப்பகுதியில் அமெரிக்காவின் தலையீட்டையும் இந்த ஒப்பந்தத்தையும் எதிர்க்கிறது” என்றார்.

தொடர்ந்து, “பாக் ஜலசந்திப் பகுதியில் இந்தியாவுடன் இலங்கை கூட்டு சுற்றுக்காவல் மேற்கொண்டு விடுதலைப் புலிகளின் நடமாட்டத்தையும், விநியோக மார்க்கத்தையும்  கட்டுப்படுத்த இந்த ஒப்பந்தம் பயன்படுமா?” என்றும் கேள்வி எழுப்பினார்.

ஆசிய பகுதிகளில், குறிப்பாக தெற்காசிய பகுதிகளில் அமெரிக்கா தனது இருப்பை உறுதிப்படுத்தும் முகமாகவும், தனது எதிர்பார்ப்புகளுக்கு மசிய வைக்க இந்தியா, இலங்கை போன்ற நாடுகளை கைகளில் வைத்துக் கொள்ளவே இது போன்ற ஒப்பந்தங்களை நிறைவேற்ற அதிக ஆவல் கொண்டுள்ளதாகவும் சர்வதேச அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். இதன் மூலமாக தனது ஆயுத வியாபாரத்திற்கு தெற்காசியாவில் நல்ல ஒரு சந்தையை ஸ்தாபிக்கவும் அமெரிக்கா விரும்புவதாக தெரிகின்றது.