கோவிலின் மீது தாக்குதல்: ஆறு பேர் கொல்லப்பட்டனர்.

கொழும்பு: இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு கோவிலின் மீது நடத்திய தாக்குதலில் 5 விடுதலைப் புலிகள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர்.

யாழ்ப்பாணத் தீவுப்பகுதியில் கேத்ஸ் என்ற தீவில் உள்ள ஒரு அம்மன் கோவிலில் புலிகள் ஒளிந்துள்ளதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து கோவிலின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டதாக இலங்கை இராணுவ அமைச்சகம் தெரிவித்தது. தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் கோவிலில் ஒளிந்திருந்த புலிகளின் யாழ்ப்பாணத்தீவு பகுதி தலைவர் மற்றும் துணைத்தலைவர் கொல்லப்பட்டதாக அமைச்சக பிரமுகர் தெரிவித்தார். இச்சண்டையில் கோவில் அதிகாரியும் கொல்லப்பட்டார்.

அதே சமயம் அரசு நிறுவனங்களின் மீது அதிக வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்போவதாக புலிகள் தரப்பில் அறிவிப்பு வெளியானது. கடந்த சில நாட்களில் தலைநகர் கொழும்புவில் உள்ள எண்ணை நிறுவனங்களின் மீது புலிகள் விமான தாக்குதல் நடத்தியிருந்தனர். புலிகளின் விமானத்தாக்குதலில் தீயணைப்பு துறை பகுதி சேதமடைந்ததையொட்டி ராயல் டச் ஷெல்லின் எண்ணை உற்பத்திப் பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டது.
 
“இலங்கை அரசு இராணுவ சக்தியை உபயோகித்து எங்களை அடக்கி ஒடுக்க முனைகின்றது. எதிர் தாக்குதல் அல்லாமல் எங்களுக்கு வேறு வழி ஒன்றும் இல்லை” என்று புலிகளின் பிராந்திய இராணுவத் தலைவர் இராசய்யா இளந்திரையன் கூறினார்.
 
நேற்று முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் போன்ற இடங்களில் 14 புலிகள் கொல்லப்பட்டதாக இலங்கை பிராந்திய இராணுவத் தளபதி பிரசாத் சமரசிங்கா கூறினார். சர்வதேச வான் போகுவரத்த்து நிறுவனங்களான கத்தாய் பசிபிக் மற்றும் எமிரேட்ஸ், கொழும்பு மற்றும் சுற்றுப்பகுதிகளுக்கான நேற்றைய விமான சேவைகளை நிறுத்தி வைத்தன.

புலிகளின் விமானத் தாக்குதலுக்கு பயந்து பல விமானங்களிலும் இருக்கைகள் காலியாக இருப்பதாகவும் பயணிகள் தங்கள் விமான பயணங்களை அதிக அளவில் ரத்து செய்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புலிகளின் விமானத் தாக்குதலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது புரியாமல் இலங்கை இராணுவம் குழம்பிக் கொண்டிருக்கின்றது.